Last Updated : 20 Jul, 2016 12:34 PM

 

Published : 20 Jul 2016 12:34 PM
Last Updated : 20 Jul 2016 12:34 PM

சித்திரக்கதை: பலூனும் பஞ்சு மிட்டாயும்!

அன்றைக்குத் திருநாள். பாலன், புதிதாக ஒரு பலூன் வாங்கி விளையாட ஆசைப்பட்டான். அதுவும் மனதுக்குப் பிடித்த வெள்ளை நிறப் பலூன்.

போன வருடம் நடந்த சோகக் கதையை நினைத்து அவன் ரொம்ப கவலையில் இருந்தான். அப்பா தந்த ஐந்து ரூபாய்க்கு ஆசைஆசையாக ஒரு பலூன் வாங்கி விளையாடினான். அதை, வாசலுக்கு வெளியே பறக்கவிட்டுப் பிடிப்பதற்குள் ‘பட்'டென்று வெடித்துவிட்டது. ஐந்து ரூபாயை வீணாக்கிவிட்டாய் என்று அப்பா அவனைத் திட்டினார்.

அப்பா, செருப்பு தைக்கும் கூலித் தொழிலாளி. அப்பாவிடம் சொல்லி வெடித்துபோன பலூனைத் தைத்துத்தரும்படி கெஞ்சினான். பலூன் என்ன கால்பந்தா? பிய்ந்துபோன பலூனைத் தைக்க முடியாதென்று சொல்லிவிட்டார். பாலன் தேம்பித்தேம்பி அழுதான். அவனின் அழுகையிலேயே திருநாள் கொண்டாட்டமும் முடிந்துபோனது.

இந்தத் திருநாளுக்கும், அவனது அப்பா ஐந்து ரூபாய் கொடுத்தார். உடனே பாலன் திருவிழா மைதானத்துக்குப் போனான். அங்குப் பலூன்காரரை நோக்கி ஓடினான். அவரது பக்கத்தில் செல்வதற்குள் அருகிலிருந்த பஞ்சு மிட்டாய்க் கடையிலிருந்து வந்த ஒரு குரல் அவனைத் தடுத்து நிறுத்தியது.

“பாலு, இங்க வாயேன். அஞ்சு ரூபாய்க்கு ஒரு பஞ்சு மிட்டாய். வா..வா..உம் மனசுக்குப் பிடிச்சத எடுத்துக்கோ”.

கொத்தாகக் காட்சிக்கு வைத்திருந்த பஞ்சு மிட்டாய்களில் ஒரு ரோஜா நிறப் பஞ்சு மிட்டாய் அவனைப் பார்த்துக் கெஞ்சிக் கேட்டது.

“அதோட பேச்சைக் கேட்காதே. உனக்குப் பிடிச்சது வெள்ளை கலர் பலூன்தான்னு எனக்குத் தெரியும். இங்க வா. என்னை வாங்கிக்கோ” பத்து அடி இடைவெளியில் காற்றில் அசைந்தாடிய பலூன் பாலனைக் கூப்பிட்டது.

“பாலு! எனக்கும் ஒரு கால் இருக்குதானே. நீ அதுல, நூலைக் கட்டிவிடு. நானும் பலூன் மாதிரிப் பறப்பேன். வெளையாடி முடிஞ்சதும் ஒரு வாய் கடிச்சுப் பாரு. இனிக்க இனிக்க ஒன்னோட நாக்கு ருசிக்கும். உதட்டில உருகி ரோஸ் கலர் சாயம் பூசி விடுவேன். இதெல்லாம் பலூனால முடியுமா?” எனப் பஞ்சு மிட்டாய் ஆசையாகக் கூறியது.

“வேணாம் பாலு! பஞ்சு மிட்டாய் ஒப்புக்குப் பேசுது. பலூன் நெனச்சா, உயர உயரப் பறந்து வானத்தைக்கூடத் தொட்டுட முடியும். நான் வேணா, உம்பேரைக் கொண்டுபோய் வானத்துல எழுதி வெச்சிட்டு வரவா?” பலூன் விடாமல் பேசியது.

பலூனுக்கும் பஞ்சு மிட்டாய்க்கும் இடையே ஒரே வாக்குவாதம். பாலன் எதைத் தேர்ந்தெடுக்கப் போகிறான் என்று தெரியவில்லை. அவன் ரொம்ப நேரமாக யோசனையில் இருந்தன்.

கடைசியில், பஞ்சு மிட்டாயே வாங்கலாம் என முடிவு செய்தான். வாங்கிய பஞ்சு மிட்டாய் குச்சியில், நூலைக் கட்டி பறக்கவிட்டு விளையாடினான்.

கொஞ்ச நேரத்தில் பஞ்சு மிட்டாய் ஆகாயத்தில் ரொம்ப தூரம் பறந்துபோனது. கண் பார்வையைவிட்டு மறைந்தது. பஞ்சு மிட்டாயைத் தேடி, வானத்தை அண்ணாந்து பார்த்தபடி மைதானத்தைச் சுற்றிச்சுற்றி வந்தான் பாலன்.

“இதோ வந்துட்டேன்” என்றபடி பறந்து வந்து கையில் விழுந்தது பஞ்சு மிட்டாய். அது வெள்ளை நிறத்தில் இருப்பதைப் பார்த்துப் பாலன் வியந்தான். மேகக் கூட்டத்தில் நுழைந்து பறந்ததால பஞ்சு மிட்டாய் வெள்ளை நிறமாக மாறியிருக்குமோ என நினைத்தான்.

“மன்னிச்சுக்கோ! வழிதவறி உன்னோட கையில வந்து விழுந்துட்டேன். நான் வேலுவோட பஞ்சு மிட்டாய்” என்றது பாலனின் கையிலிருந்த பஞ்சு மிட்டாய்.

“ஓஹோ! அப்போ என்னோடது எங்க போச்சு? வானத்துல எங்கேயாச்சும் ஒளிஞ்சிருக்கா? ஒளிஞ்சு வெளையாட வானத்துல இடம் இருக்கா?” பஞ்சு மிட்டாயிடம் கேள்விகேட்டபடி பாலன் நடந்தான்.

அப்போது ஒரு சிறுவன் ரோஜா நிறப் பஞ்சு மிட்டாயுடன் உற்சாகமாக நடந்துவருவதைப் பார்த்தான்.

“அதோ! அவன்தான் வேலன்” என்றது கையிலிருந்த வெள்ளை நிறப் பஞ்சு மிட்டாய். பாலனும் வேலனும் சந்தித்துத் தங்கள் பஞ்சு மிட்டாய்களை மாற்றிக்கொண்டார்கள். இருவரும் ஒன்றாகச் சேர்ந்து விளையாட ஆரம்பித்தார்கள்.

திருவிழா மைதானத்தில் மதிய வெயில் கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பித்தது. விளையாடியது போதுமென நினைத்தவர்கள், பஞ்சு மிட்டாயைச் சாப்பிட முடிவுசெய்தார்கள்.

அப்போது திடீரென்று ‘பட்’டென்று ஏதோ வெடிச்சு கீழே விழுந்த பொருளை இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். அது ஒரு பலூன். கையிலிருந்த பலூன், வெடித்ததால் ஒரு சிறுவன் அழு ஆரம்பித்தான்.

“அழாதே தம்பி! உம் பேரென்ன?” அவனைச் சமாதானம் செய்ய அன்பாகப் பேசினார்கள்.

“எம் பேரு சாலு!” என்றவன் தொடர்ந்து அழுதான். சாலுவோட அழுகையை நிறுத்த பாலனும் வேலனும் என்ன செய்யலாமென யோசித்தார்கள்.

“ஒரு பலூன்தானே வெடிச்சுப்போச்சு. இதோ! எங்க கையில ரெண்டு பஞ்சு மிட்டாய் இருக்கு. இது ரெண்டும், பலூனைப்போல பறக்கும். ரெண்டையும் நீயே வெச்சுக்கோ, பறக்கவிட்டு வெளையாடு” என்றார்கள்.

கையிலிருந்த பஞ்சு மிட்டாய் இரண்டையும் சாலுவுக்குத் தந்தார்கள். இரண்டு பஞ்சு மிட்டாய்களையும் வாங்கிக்கொண்ட சாலு சிரித்தான். சாலமனோட முகம் சந்தோஷத்தில் பஞ்சு மிட்டாய் மாதிரிப் பொசுபொசுவென உப்பியது.

பாருங்களேன்! இண்டு பஞ்சு மிட்டாயும் ஒரு பலூனும் சேர்ந்து மூன்று நண்பர்களை ஒன்றாகச் சேர்த்திருக்கிறது. நல்ல நண்பர்கள் ஒன்று சேர சின்னச் சின்ன சம்பவங்கள்கூட ஒரு சந்தர்ப்பமாக அமைகிறது இல்லையா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x