Published : 10 Jun 2016 02:20 PM
Last Updated : 10 Jun 2016 02:20 PM

இந்த சங்கம் இருந்தா என்ன? இல்லாட்டி என்ன?- கருணாஸ் சிறப்பு பேட்டி

சோழப் பரம்பரையில் இன்னொரு எம்.எல்.ஏ.’ நடிகர் கருணாஸை இப்படித்தான் ஜாலியாய்க் கலாய்க்கிறது திரையுலகம். நடிகர் சங்கத் தேர்தலில் துணைத் தலைவராக வெற்றி, இப்போது அரசியலில் வெற்றி என ஏறுமுகம் காட்டும் கருணாஸ் வாரத்தில் இரண்டு நாட்கள் தொகுதிக்கு மீதி நாட்கள் தொழிலுக்கு என வரையறுத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறார். அவரை ‘தி இந்து’ தமிழ் நாளிதழுக்காகச் சந்தித்தபோது…

எம்.எல்.ஏ. பொறுப்பை எப்படிக் கையாளப்போகிறீர்கள்?

என் மீதும் முதல்வர் மீதும் நம்பிக்கை வைத்துத் தேர்வு செய்த மக்களுக்கு என் உயிருள்ளவரை உண்மையானவனாக இருப்பேன். திருவாடானை, பட்டிணங்காத்தான், சென்னை சட்டமன்ற உறுப்பினர் விடுதி இம்மூன்று இடங்களிலும் எனது எம்.எல்.ஏ., அலுவலகம் செயல்படும். சனி, ஞாயிறுகளில் கட்டாயம் நான் தொகுதியில் இருப்பேன்.

மற்ற நாட்களில் தொகுதி மக்கள் கொடுக்கும் மனுக்கள் அனைத்தையும் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு அனுப்பி அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மக்களுக்குத் தெரிவிப்பேன். பொறுப்பில் இருக்கப்போகும் ஐந்து வருடங்களுக்கும் இம்மி பிசகாமல் இதைக் கடைப்பிடிப்பேன்.

மக்கள் பிரதிநிதியாக இருப்பதால் சினிமாவில் நடிப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டியிருக்குமோ?

அதிகம் படிக்காத எனக்குப் பச்சை மையில் கையெழுத்துப் போடும் அந்தஸ்தை அளித்திருக்கும் முதல்வருக்கும் மக்களுக்கும் தலை வணங்குகிறேன். அதேசமயம், சினிமா என்பது எனக்கு வயிற்றுப் பிழைப்பு. நாலு படங்களில் நடிச்சாத்தான் எனது குடும்பத்தைக் காப்பாற்ற முடியும்; இயலாதவர்களுக்கு உதவ முடியும். எனவே, எனது நடிப்புத் தொழில் பாதிக்கப்படாத வகையில் மக்கள் பணிகளைத் திட்டமிட்டுக்கொள்வேன்.

நடிகர் சங்கத்தின் பிரச்சினைகளைக் களைவதற்கு உங்கள் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி முயற்சிப்பீர்களா?

நூற்றுக்கு 200 சதவீதம் முயற்சிப்பேன். உண்மையான, நியாயமான விஷயங்களுக்கு எப்போதும் செவிமடுத்துத் தீர்த்து வைக்க முதல்வர் தயாராக இருக்கிறார்கள். எனவே, நியாயமான பிரச்சினைகளை அவங்களோட கவனத்துக்குக் கொண்டுசென்று தீர்த்து வைப்பேன். நடிகர் சங்கக் கட்டிடத்துக்கு முதல்வர் கையால் அடிக்கல் நாட்ட வைத்து, அவர் கையாலேயே திறப்பு விழாவையும் நடத்த முடிவெடுத்திருக்கிறோம்.

திருட்டு வீடியோ விவகாரத்தில் நீங்களும் விஷாலுமே நேரடியாகக் களத்தில் இறங்கி விட்டீர்களே?

பிறகென்ன செய்வது? தொழில் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய தயாரிப்பாளர் சங்கம் பஜ்ஜி, போண்டா சாப்பிடும் சபையாக இருக்கிறது. ஒரே நேரத்தில் நாலு படங்கள் ரிலீஸானால், ஒவ்வொரு படத்தின் தயாரிப்பாளரும் மற்ற மூவரின் படங்கள் நல்லா ஓடக் கூடாதென்று நினைக்கிறாங்க.

இந்த லட்சணத்தில் இருந்தா இண்டஸ்ட்ரி எப்படி உருப்படும்? அதுதான், ரிலீஸ் அன்னைக்கே படத்தை இண்டர்நெட்டில் விட்டுவிடுகிறார்கள். இந்த யதார்த்தத்தை உணராமல் பல பேர் விட்டில் பூச்சி மாதிரி சினிமாத் தொழிலில் வந்து விழுந்து செத்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால், தயவுசெய்து தொழில் தெரியாதவங்க யாரும் சினிமா தொழிலுக்கு வந்துடாதீங்க. இன்னொரு ஏவி. மெய்யப்பச் செட்டியாரோ, ஆர்.பி. சௌத்ரியோ தமிழ் சினிமாவில் இனி உருவாகவே முடியாது.

சினிமா தயாரிப்பாளர் சங்கம் மீது ஏன் இவ்வளவு கோபம்?

கோபப்படாம என்ன பண்ணச் சொல்றீங்க? கோடிகளைக் கொட்டிப் படம் எடுக்கிறவனுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. சின்னத் தயாரிப்பாளர்களைப் பாதுகாக்கும் சங்கமாகத் தயாரிப்பாளர் சங்கம் செயல்படவில்லை. சங்கத்தில் இருக்கவங்க தங்களைப் பாதுகாத்துக்கொள்ளத்தான் மெனக்கெடுகிறார்களே தவிர ஒட்டுமொத்த இண்டஸ்டிரியைப் பாதுகாக்க நினைக்கவில்லை. இந்தச் சங்கம் இருந்தா என்ன, இல்லாட்டி என்ன?

ஹீரோவா நடிச்ச பிறகுதான் உங்களுக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டது. இனிமேலும் ஹீரோவா நடிக்கும் திட்டம் இருக்கிறதா?

ஹீரோ மட்டுமல்ல எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் நான் நடிக்கத் தயார். செத்துச் சுடுகாடு போறப்ப பங்களா பேசாது; நாம நடிச்ச காட்சிகளும் கதாபாத்திரங்களும்தான் பேசும்.

வாய்ப்புகள் மறுக்கப்படுறப்ப நாமே வாய்ப்புகளை உருவாக்கிக்கணும். அப்படித்தான் எனக்கு சினிமா வாய்ப்புகள் கம்மியா இருந்தப்ப ‘திண்டுக்கல் சாரதி’ படத்தை எடுத்தேன். என்னோட பத்து வருட உழைப்புல குருவி சேர்ப்பது போல் சேர்த்து வைச்சிருந்த வருமானத்தையெல்லாம் ஒரே ஒரு படம் விழுங்கிருச்சு. எனவே, இனிமேல் சொந்தமாகப் படம் எடுப்பதில்லை என்பதில் தீர்மானமாக இருக்கிறேன்.

நீங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துப் பெரிதும் பேசப்பட்ட ‘அழகு குட்டி செல்லம்’ தரமான படமாக இருந்தும் சரியாகப் போகவில்லையே?

நல்ல படங்களை தியேட்டர்களுக்குக் கொண்டுபோக முடியவில்லை என்பதற்கு ‘அழகு குட்டி செல்லம்’ ஒரு சாம்பிள். 15 ஆண்டுகளாக டி.வி. சேனலில் தயாரிப்பாளராக இருந்துவரும் ஆண்டனிக்கே இந்த நிலை. கதையைச் சொன்னதுமே நெகிழ்ந்துபோய் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

ஆண் குழந்தை ஆசையில் தொடர்ச்சியாக மூன்று பெண் குழந்தைகளுக்குத் தகப்பனாகும் ஒரு ஆட்டோ டிரைவரின் கதை. அந்த மூன்று குழந்தைகளில் ஒன்று காணாமல் போகும்போது விரும்பாமல் பிறந்திருந்தாலும் இதுவும் நான் பெற்ற குழந்தைதானே என்று சொல்லிக் குழந்தையைத் தேடி அலையும் ஒரு சாமானியத் தந்தையின் நிஜமான பரிதவிப்பை அனுபவித்து நடித்திருந்தேன்.

அத்தனை பத்திரிகைகளும் பாராட்டினார்கள். ஆனால், எதிர்பார்த்த வெற்றி இல்லை. அதுக்குக் காரணம் நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி சின்ன தயாரிப்பாளர்களைப் பாதுகாக்கும் சங்கமாகத் தயாரிப்பாளர் சங்கம் செயல்படாததுதான்.

ஆளும் கட்சி சார்பு அரசியல்வாதியாகி விட்டதால் வாய்ப்புகள் தேடி வந்து கதவைத் தட்டுமே?

அரசியலுக்கு வந்து எம்.எல்.ஏ. ஆகிவிட்டதால் இனி நான் சினிமாவில் நடிப்பேனா மாட்டேனா என்ற சந்தேகம் இண்டஸ்ட்ரிக்கு இருக்கிறது. வெற்றி மாறன் போன்றவர்கள் இதை என்னிடம் கேட்டேவிட்டார்கள். நடிப்பு எனக்குப் பிரதானம். எந்தச் சூழலிலும் அதை விட்டு நான் ஒதுங்க மாட்டேன்! அதே சமயம், ஆளும் கட்சி சார்பு என்பதற்காக அல்ல... இயல்பாகவே ஏழெட்டுப் படங்கள் கைவசமிருக்கு. ஹீரோ ரோல் பண்ணுவதற்கும் தெலுங்குப் பட நிறுவனத்தினர் என்னோடு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x