Last Updated : 26 Mar, 2014 01:39 PM

 

Published : 26 Mar 2014 01:39 PM
Last Updated : 26 Mar 2014 01:39 PM

யாருக்கு ஐஸ்கிரீம் பிடிக்கும்?

கோடை விடுமுறை ஆரம்பிக்கிறதோ இல்லையோ, அதற்கு முன்னாலேயே வெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது. வெயிலுக்கு இதமாகச் சாப்பிட எத்தனையோ இருக்கிறது. ஆனால் முதலில் நினைவுக்கு வருவது என்ன? ஐஸ்கிரீம்தானே? அது எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா?

ஐஸ்கிரீம் கண்டுபிடிக்கப்பட்டதற்குப் பின்னால் நிறைய கதை இருக்கிறது. ரோம் மன்னன் நீரோவில் தொடங்கி, சீனர்கள் வரை பலருக்கும் ஐஸ்கிரீம் கண்டுபிடிப்பில் தொடர்பு உண்டு. இவர்களிடம் இருந்துதான் ஐரோப்பிய மாலுமி மார்க்கோபோலோ, ஐஸ்கிரீம் தயாரிப்பு முறையைக் கற்றுக்கொண்டார் என்றும் சொல்வார்கள்.

பண்டைய கிரேக்க, லத்தீன் நாடுகளில் பழத் துண்டுகளுடன் ஐஸ்கட்டியைச் சேர்த்துப் பல உணவு வகைகளைத் தயாரித்து இருக்கிறார்கள். இவைதான் ஐஸ்கிரீமின் முன்னோடி.

நவீன கருவிகளைப் பயன்படுத்திப் பலர் ஐஸ்கிரீம் தயாரித்திருக்கிறார்கள். இருந்தாலும் பெரும்பாலான வரலாற்று ஆய்வாளர்கள், நான்ஸி ஜான்சன் என்பவரின் கண்டுபிடிப்பைத்தான் அங்கீகரித்திருக்கிறார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த நான்ஸி, 1843ஆம் ஆண்டு கையால் சுழற்றி இயக்கக்கூடிய ஐஸ்கிரீம் மிஷினை முதன்முதலில் கண்டுபிடித்தார்.

நான்ஸியின் ஐஸ்கிரீம் மிஷினில் சிறியதும் பெரியதுமாக இரண்டு உருளைகள் இருக்கும். பெரிய உருளையினுள் சிறிய உருளை நுழைகிற மாதிரி அமைந்திருக்கும். சிறிய உருளையின் உள்ளே பால், சர்க்கரை, மணமூட்டும் பொருட்கள் ஆகியவை இருக்கும். பெரிய உருளையில் பனிக்கட்டியும் உப்பும் இருக்கும். பால் கலவைக்கு நடுவே தயிர் கடைகிற சிறிய மத்து போன்ற ஒன்று இருக்கும்.

மிஷினைச் சுற்றும்போது, மத்தும் வேகமாகச் சுழன்று பால் கலவையைக் கூழாக்கும். பனிக்கட்டியில் இருக்கும் உப்பு, அதை உருகாமல் வைத்திருக்கும். இப்படியே தொடர்ந்து செய்தால், ஐஸ்கிரீம் கிடைத்துவிடும். இத்தனை அரிய கண்டுபிடிப்பை நான்ஸி தனக்குச் சொந்தமாக்க விரும்பவில்லை. தன் மிஷினை வில்லியம் யங் என்கிறவருக்கு 200 டாலருக்கு விற்றுவிட்டார்.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் சமையல் கலை வல்லுநராக இருந்த அகஸ்டஸ் ஜாக்ஸன் என்பவர், நான்ஸிக்கு முன்னரே ஐஸ்கிரீம் செய்துவிட்டதாகச் சொல்கிறார்கள். 1832ஆம் ஆண்டிலேயே வெள்ளை மாளிகை விருந்தினர்களுக்குப் பல வகை ஐஸ்கிரீம்களை அவர் பரிமாறியிருக்கிறார் என்று சொல்கிறார்கள். இவருடைய தயாரிப்பிலும் பனிக்கட்டியும் உப்பும் இடம்பெற்றிருந்தன. இருந்தாலும் இவர் தன் தயாரிப்பு முறையை வெளிப்படுத்தத் தவறிவிட்டதால், நான்ஸி அந்த இடத்தைப் பிடித்துவிட்டார். இனி ஐஸ்கிரீம் சாப்பிடும்போது, அது எப்படி வந்தது என்பதையும் நினைத்துக்கொள்வீர்கள் அல்லவா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x