Published : 13 Sep 2016 10:50 AM
Last Updated : 13 Sep 2016 10:50 AM

வேலை வேண்டுமா? - உளவுத் துறை அதிகாரி ஆகலாம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பாதுகாப்பில் உளவுத் துறையினரின் பங்கு மிக மிக முக்கியமானது. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையிலான சம்பவங்கள் குறித்த ரகசியத் தகவல்களை முன்கூட்டியே கண்டறிந்து மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்கிறார்கள் உளவுத் துறை அதிகாரிகள். அதன் பேரில் மத்திய அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுத்துவிடுகிறது. ஐ.பி. என அழைக்கப்படும் உளவுத் துறையானது (Intelligence Bureau-IB) மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. இத்துறையில் தொழில்நுட்பப் பிரிவில் இளநிலை உளவு அதிகாரி (Junior Intelligence Officer-Technical) பணிகளில் 320 காலியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன.

தேவையான தகுதி

இப்பணிக்கு விண்ணப்பிக்கக் கணிதம், அறிவியல் பாடங்களுடன் பிளஸ் டூ முடித்திருக்க வேண்டும். அதோடு ரேடியோ டெக்னீஷியன் அல்லது எலெக்ட்ரானிக்ஸ் அல்லது எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் படிப்பில் இரண்டாண்டு காலச் சான்றிதழ் பயிற்சி (Industrial Training Certificate course) அவசியம். வயது 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

என்ன கேட்பார்கள்?

எழுத்துத் தேர்வு மற்றும் தொழில் தேர்வு (Trade Test) அடிப்படையில் தகுதியானோர் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவர். எழுத்துத் தேர்வில் பொது அறிவு, கணிதம், அறிவியல், ரீசனிங் ஆகிய பகுதிகளில் இருந்து அப்ஜெக்டிவ் முறையிலும், ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் இருந்து விரிவாக விடையளிக்கும் வகையிலும் கேள்விகள் கேட்கப்படும். தொழில்நுட்பத் திறன் தேர்வு கம்யூனிகேஷன் சார்ந்த செய்முறைத் தேர்வாக இருக்கும்.

இளநிலை உளவு அதிகாரி பணிக்கு செப்டம்பர் மாதம் 24-ம் தேதிக்குள் ஆன்லைனில் ( >www.mha.nic.in) விண்ணப்பிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x