Published : 13 Dec 2013 00:00 am

Updated : 06 Jun 2017 16:09 pm

 

Published : 13 Dec 2013 12:00 AM
Last Updated : 06 Jun 2017 04:09 PM

திருவனந்தபுரம் சர்வதேசத் திரைப்பட விழா கேரளத்துக்கு வருகை தரும் கிம் கி டுக்

சர்வதேசப் புகழ்பெற்ற திருவனந்தபுரம் திரைப்பட விழா கடந்த 6ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. கேரள அரசின் சலசித்ரா அகாடமி நடத்தும் இதன் துவக்க விழாவில் பல நாடுகளைச் சேர்ந்த சினிமா ஆர்வலர்கள், திரைப்பட இயக்குனர்கள், வெளிநாட்டுக் கலாச்சாரத் தூதுவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். கேரள முதல்வர் உம்மண் சாண்டி குத்து விளக்கேற்றித் தொடங்கிவைத்தார். மூத்த இந்தி நடிகை ஷபானா ஆஸ்மி, பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியார் ஆகியோர் துவக்க விழாவில் கெளரவிக்கப்பட்டனர். வாழ்நாள் சாதனையாளர் விருது ஸ்பெயின் இயக்குனர் கார்லோஸ் சாராவுக்கு வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு இங்கிலாந்து, இத்தாலி, ஈரான் அமெரிக்கா, ஜப்பான், தென் ஆப்பிரிக்கா, கஜகஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட 60 நாடுகளைச் சேர்ந்த 212 திரைப்படங்கள் கலந்துகொள்கின்றன. ‘இந்திய சினிமா இன்று’, ‘மலையாள சினிமா இன்று’, சர்வதேசப் படங்கள், நடுவர் படங்கள் எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் படங்கள் திரையிடப்பட்டுவருகின்றன. இதற்காக 11 திரையரங்குகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இவை தவிர இந்திய சினிமா நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வகையில் சத்யஜித் ரேயின் சாருலதா, மிருணா சென்னின் புவன் சோம் ஆகிய படங்களும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் கர்ணன், பாசமலர் ஆகிய படங்களும் திரையிடப்பட்டன. மறைந்த பழம் பெரும் மலையாள-தமிழ் நடிகை சுகுமாரி, மலையாள நடிகர் அகஸ்டின், வங்க இயக்குனர் ரிதுபர்னோ கோஷ் போன்றோருக்கான அஞ்சலிப் படங்களும் திரையிடப்பட்டன.


‘இந்திய சினிமா இன்று’ பிரிவில் தமிழ் இயக்குனர் நலன் குமாரசாமின் சூது கவ்வும் திரையிடப்பட்டது. திருவனந்தபுரம் திரைப்பட விழாவில் திரையிடப்படத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரே தமிழ்ப் படம் இதுதான்.

இம்மாதம் 13ஆம் தேதி நடைபெறும் இறுதி விழாவில் சிறந்த படத்திற்குச் சொர்ண சகோர விருதும் சிறந்த இயக்குனருக்கு ரஜத சகோர விருதும் வழங்கப்படுகிறது. இவ்விழாவில் கொரிய இயக்குனர் கிம் கி டுக் கலந்துகொள்கிறார்.

கொரிய இயக்குனரான கிம் கி டுக், உலக சினிமா இயக்குனர்களில் முதல் வரிசையில் மதிக்கப்படும் கலைஞர். நவீன வாழ்க்கையில் நிலவும் வன்முறை, குரூரங்களை, அவற்றின் இருண்ட தன்மையுடன் தன் திரைப்படங்களில் காண்பிப்பவர் இவர். கேரள சினிமா ரசிகர்கள் மத்தியில், மோகன்லாலுக்கு இணையான புகழ், கிம் கி டுக்குக்கு உள்ளது. துவக்க விழாவில் கேரள முதல்வர், தனது உரையில் டுக்கின் பெயரை குறிப்பிட்டுப் பேசியபோது அரங்கமே ஆர்ப்பரித்தது குறிப்பிடத்தக்கது.

இதுவரை திரையிடப்பட்ட படங்களில், பாஸ்ட், மேகே தகத் தாரா, பாண்ட்ரி, சைல்டு பாவுஸ், வாய்ஸ் ஆஃப் வாய்ஸ்லெஸ் போன்ற படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இயக்குனர் ரித்விக் கட்டக்கின் வாழ்க்கையைப் பற்றிய படமான மேகே தகத் தாரா போட்டிப் பிரிவில் கலந்துகொண்டிருக்கிறது.

உலக சினிமா பிரிவில் திரையிடப்பட்ட பிட்வீன் டுமாரோ அண்ட் எஸ்டர்டே என்ற சிங்கள மொழிப்படம் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது. போருக்குப் பிறகான இலங்கையின் தற்கால நிலைமையை இந்தப்படம் சித்தரிக்கிறது. நீலேந்திரா தேசப்பிரியா இப்படத்தை இயக்கியுள்ளார். டாப் ஆங்கிள் என்னும் பிரிவில் திரையிடப்பட்ட பாண்ட்ரி என்ற படமும் பெரும் கவனம் பெற்றுள்ளது. “இந்திய சினிமாவில் இது போன்ற ஒரு படத்தைப் பார்த்ததில்லை. இப்படம் தலித் பிரச்சினையைப் பற்றிப் பேசுகிறது. இந்தியாவில் இருந்து ஆஸ்கருக்குப் போகும் தகுதியுள்ள ஒரே படம் பாண்ட்ரிதான்” என்கிறார் சினிமா ஆர்வலர் விஸ்வாமித்ரன். போட்டிப் பிரிவுப் படங்கள் சாமான்யப் படங்களைப் போல் பலவீனமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

திரைப்பட விழாவை ஒட்டி கேரள அரசின் சலசித்ரா அகாடமி பல்வேறு விதமான சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இந்த வருடம் மலையாள சினிமாவை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் மார்க்கெட்டிங் பிரிவு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வெளிவந்த சில மலையாளப் படங்கள் வெளிநாட்டு விநியோகஸ்தர்களுக்குக் காண்பிக்கப்பட்டன. இதன் மூலம் மலையாளப் படங்களுக்கு உலகளாவிய சந்தை உருவாக வாய்ப்புள்ளது எனப் பிரபல இயக்குனரும் சலசித்ரா அகாடமியின் தலைவருமான பிரியதர்ஷன் தெரிவித்தார்.

இந்திய சினிமா நூற்றாண்டை ஒட்டிக் கண்காட்சியும், கார்ட்டூன் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தினமும் இயக்குனர்கள் சந்திப்புகள், கெளதமி, ஷபானா ஆஸ்மி போன்ற விருந்தினர்கள் சந்திப்புகள் நடத்தப்பட்டன. திரையிடல்கள் குறித்த விவரங்கள் உடனடியாக அச்சிடப்பட்டு வழங்கப்பட்டன. பிறகு சலசித்ரா அகாடமியின் இணையதளத்தில் திரையிட மாற்றம் குறித்த தகவல்களும் உடனுக்குடன் பதிவேற்றப்படுகின்றன. குறுஞ்செய்திகள் மூலம் அன்றைக்கு நடக்கும் திரையிடல்கள் நினைவூட்டப்பட்டன. திரையிடல் நடைபெறும் அரங்களுக்குச் சென்று வரத் தனியாக ஆட்டோக்கள் இயக்கப்பட்டன. இது வெளியூரில் இருந்து ரசிகர்களுக்குப் பெரும் உதவியாக இருந்தது.

ஆனால் இவை எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டுப் பல விதமான குளறுபடிகள் இந்தத் திரைவிழாவில் இருந்துவருகின்றன. பல ஆண்டுகளாகத் திருவனந்தபுரம் திரைவிழாவுக்கு வரும் சினிமா ஆர்வலர் ரஃபீக், “இம்முறை இந்தத் திரைவிழா மிக மோசமான அனுபவம் தந்தது. 7 ஆயிரத்திற்கும் அதிகமான பாஸ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்தளவுக்கான இருக்கைகள் இல்லை. எந்தத் திரையரங்கிற்குச் சென்றாலும் கூட்டம், தள்ளுமுள்ளு. முன்பதிவு செய்யும் வசதியை இணையத்தில் தந்திருக்கிறார்கள். ஆனால் அது சரியாக வேலை செய்யவில்லை. இது அடுத்த முறை வரக் கூடாது மனநிலையைத் தந்துவிட்டது” என்கிறார்.

போட்டிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் ஏமாற்றமாக உள்ளதாகவும் பரவலாகச் சொல்லப்படுகிறது. போட்டிக்காக 14 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் பெரும்பாலான படங்கள் வெகு சாதாரணப் படங்களாக உள்ளன. கவிஞர் சுகுமாரன், “இந்தத் திரைவிழா நிர்வாக ரீதியாகவும் குழப்பம் உடையதாக இருக்கிறது. படங்களைத் தேர்வுசெய்வதில் சலசித்ரா அகாடமிக்கும் தேர்வுக்குக் குழுவுக்கும் கருத்து முரண்பாடு இருந்தது. இம்முறை பலவீனமான படங்கள் அதிகமாக உள்ளாதாகப் பரலவாக கருத்து உள்ளது. அதற்குக் காரணம் இந்த முரண்பாடுதான். ப்ளா ஃபாரஸ்ட் என்கிற படத்தைத் தேர்வுக் கமிட்டி நிராகரித்ததாகவும் ஆனால் அந்தப் படத்தை அகாடமி தன்னிச்சையாகத் தேர்வுசெய்துகொண்டதாகவும் சொல்லப்படுகிறது” என்கிறார்.

திருவனந்தபுரம் திரைவிழா ஆண்டுக்கு ஆண்டு நிர்வாக விஷயங்களில் மேம்பட்டு வருவதாகக் கூறுகிறார் விஸ்வாமித்ரன்.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x