Published : 29 Jan 2014 12:00 AM
Last Updated : 29 Jan 2014 12:00 AM

சுவரும் பாடம் கற்பிக்கிறது- முன் மாதிரியாக திகழும் அனக்காவூர் பள்ளி

புத்தகச் சுமையை குறைப்பதற்காக, ஸ்மார்ட் கிளாஸ் ரூம் என்ற கணினி வகுப்பறைகளை பணபலம் உள்ள பள்ளிகள் தொடங்கி வருகின்றன. இதுபோன்ற வசதிகள், அரசு பள்ளிகளில் கிடைக்காது என்றாலும், சூழ்நிலைக்கு ஏற்ப, பள்ளிச் சுவர்களை புத்தகங்களாக மாற்றி, தமிழகத்திற்கு வழிகாட்டியாக திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அனக்காவூர் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி திகழ்கிறது .

அப்பள்ளிக்குள் நுழையும்போது தமிழ் தாய் வாழ்த்து, தேசிய கீதம், கொடிப்பாடல், தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி சொற்கள், தேச பக்தியுடன் வரவேற்கிறது.

உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக் கள், ஆங்கில எழுத்துக்கள், கணித எண்கள், அறிவியல் அறிஞர்களும் அவர்களது கண்டுபிடிப்புகளும், உடல் உறுப்புகள், உயிர் சத்துக்கள், தாவரங்களின் பயன்பாடுகள், எதிர்ச்சொல், நோய் பரவுவதும், நோய் தடுப்பு மருந்துகளும், நாட்டின் வரைபடங்கள், தமிழ் மற்றும் ஆங்கில மொழி இலக்கண எழுத்துக்கள், தமிழ் மற்றும் ஆங்கில மாதங்கள், வார மற்றும் மாத பெயர்கள், தமிழ் ஆண்டுகள், வினை சொற்கள், பெருக்கல் மற்றும் கூட்டல், மாவட்டம் மற்றும் மாநிலங்களின் பெயர்கள், தேசிய கொடி, தேசிய சின்னம், தேசிய பறவை, தேசிய விலங்கு, தேசிய மரம், தேசிய பழம், தேசிய விளையாட்டுகளின் பெயர்கள், பறவைகள், விலங்குகள், காய்கறிகள், பழங்கள், இலக்கணம், திருக்குறள் உள்ளிட்ட நூல்களும், அதனை எழுதியவர்களின் பெயர்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பள்ளியின் சுவர்களை அலங்கரித்துள்ளது. மேலும், சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் தமிழக முதல்வர்களின் பெயர்களும் படங்களும் இடம்பெற்றுள்ளன.

இது குறித்து தலைமை ஆசிரியை தேன்மொழி, ஆசிரியர் கிரிஜா ஆகியோர் கூறுகையில், ‘‘மாணவ, மாணவிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், படிக்கின்ற ஆர்வத்தை ஏற்படுத்தவும் ‘சுவரெல்லாம் கல்வி’ என்ற அடிப் படையில் புத்தகங்களில் உள்ளதை சுவர்களில் எழுதியுள்ளோம். பள்ளிக்கு புத்தகங்களை எடுத்து வரவேண்டிய அவசியமில்லை. குழந்தைகளும் ஆர்வமாகப் படிக்கிறார்கள். மனவளக்கலை மன்ற அறக்கட்டளை மூலமாக எளிய முறை யோகா பயிற்சி, மூச்சு பயிற்சி கற்றுகொடுக்கிறோம். எங்கள் பள்ளியை போன்று 25க்கும் மேற்பட்ட பள்ளிகளில் சுவரெல்லாம் கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் சிறந்த பள்ளிக்கான விருதும் எங்கள் பள்ளிக்கு கிடைத்துள்ளது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x