Published : 13 Oct 2014 18:09 pm

Updated : 14 Oct 2014 17:05 pm

 

Published : 13 Oct 2014 06:09 PM
Last Updated : 14 Oct 2014 05:05 PM

மொழிகள் பல அறிந்தால் கூடும் வேலைவாய்ப்பு

“யாமறிந்த மொழிகளிலே” என்று தொடங்கித் தமிழின் புகழ் பாடிய பாரதிக்குப் பதினெட்டு மொழிகள் தெரிந்திருந்தன. அதனால் அவன் தமிழ் பற்றிச் சொன்ன கருத்து அவ்வளவு வலுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. சுந்தரத் தெலுங்கு மட்டுமல்லாமல் அவன் கற்ற திராவிட, ஆரிய, ஐரோப்பிய மொழிகள் அவன் சிந்தைக்குச் சத்து சேர்த்திருந்தது.

எனக்கும் மொழிகள் மீது காதல் உண்டு. ஆனால் பிற மொழித்தேர்ச்சி சொல்லிக்கொள்ளும் அளவு இல்லை. பள்ளியில் படித்த ராஷ்ட்டிர பாஷா இந்தி எழுதப் படிக்க உதவியது. பேசும் வாய்ப்பு கிட்டாததால் இன்றும் தீபிகா படுகோனை ரசிக்கும் அளவுதான் வளர்ந்துள்ளது.

பள்ளியில் சமஸ்கிருதமும் கல்லூரியில் பிரெஞ்சும் படித்தது மொழி ஆசையில் அல்ல. அதிக மதிப்பெண்கள் பெறும் ஆசையில். கமல்ஹாசன் படங்களிலிருந்த கவனம், படிப்பில் இல்லாத காலம் அது. தேர்வில் தேறியதே புண்ணியம் என்ற நிலையில், கடைசியில் தமிழைத் தவறவிட்ட குற்ற உணர்வுதான் மிஞ்சியது.

பிறகு மிருணாள் சென்னின் படம் பார்த்து ‘முப்பது நாளில் வங்காளப் பாஷை’ வாங்கினேன்.

பெங்களூர் நிம்ஹான்சில் பணி நிமித்தம் காரணமாகக் கன்னடம் சைக்கோதெரபி செய்யும் அளவிற்குச் சரளமாய் வந்தது. பின் நான் வசித்த எந்த ஊரிலும் கன்னடம் பிரமாதமாய் இல்லாததால் அதுவும் பலவீனப்பட்டு சில வார்த்தைகள் சரியான நேரத்தில் “சிக்குவதே இல்லா”. இப்படிப் பல மொழிகள் கற்கும் வாய்ப்பு இருந்தும் அதைப் பயன்படுத்தாத ஆதங்கம் எனக்கு உண்டு.

ஜப்பானியக் கம்பெனிகள்

சென்னை மாமல்லபுரம் பகுதிக்கு அருகே பல ஜப்பானியக் கம்பெனிகள் கால் பதிக்க உள்ளன. ஏற்கனவே திருபெரும்புதூர் கொரிய கம்பெனிகளின் ஆதிக்கத்தில் உள்ளது. இது தவிரச் சில ஜெர்மானியக் கம்பனிகளும் ஒரகடம் பகுதியில் எட்டிப் பார்க்கும் நிலையில் அந்நிய மொழிகள் அறிதல் வேலை வாய்ப்பில் ஒரு கூடுதல் தகுதி.

சீனா, லத்தீன் அமெரிக்கா, ரஷ்யா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் வளர்ச்சியின் பாதையில் உள்ளன. அவர்களின் மொழியை அறிதல் அந்த நாடுகளுக்கு நீங்கள் புலம் பெயர உதவும்.

மொழிபெயர்ப் பாளர்களுக்கும் என்றும் பெரிய கிராக்கி உண்டு. டெல்லியில் என் நண்பர் ஒருவர் அந்த அயல் நாட்டுத் தூதரகத்தில் மொழி பெயர்ப்பு பணியில் ஈடுபட்டுப் பெரும் வருமானம் ஈட்டி வருகிறார்.

இன்று சில பொறியியல் கல்லூரிகள் ஜப்பானிய மொழி வகுப்புகள் நடத்துவது உற்பத்தித்துறை, தொழில் நுட்பத்துறை என இரு பெரும் துறைகளில் உள்ள வாய்ப்புகளால்தான்.

அதே போல மும்பையில் பிழைக்க இந்தி கட்டாயம் தேவை.

தாய்மொழி ஆதாரம்

மொழியைக் கற்றுக் கொள்ள ஆர்வம், திறன், வாய்ப்பு மூன்றும் அவசியம். பல மொழிகள் அறிதல் நம் எண்ணங்களைச் செழுமைப்படுத்தும். பல புதிய சாளரங்களை அது நமக்குத் திறந்து விடும். எதிர்பாராத சில வாய்ப்புகளையும் கொண்டு வந்து கொட்டும்.

தாய்மொழி தமிழ் நம் ஆதாரம். அதை பயில்வது அவசியம். அதன் பின்னர், பிற மொழிகள் ஆசைக்கு, வேலை வாய்ப்புக்குக் கற்றல் நலம்.

ஒரு மனிதக் கூட்டத்தின் அடையாளம் மொழி. பிற மொழிகள் அறிதல் பிற மனிதக் கூட்டத்தை அறியும் முயற்சிகள்.

ஏனோ மொழிப்பாடங்கள் என்றால் கிள்ளுக்கீரையாக நினைக்கும் மனோபாவத்தை இன்றைய கல்வி நிலையங்கள் வளர்த்து வருகின்றன. “மற்றப் பாடங்கள் படித்தால் உருப்படலாம்; மொழிகள் படித்தால் எந்தப் பயனும் இல்லை” என்பதுதான் பள்ளிகளின் நிலைப்பாடு.

கட் ஆஃப்

ஒரு பிரீயட் கட் பண்ண வேண்டுமானால், முதல் பலி உடற்பயிற்சிக் கல்வி. அடுத்த பலி மொழிப்பாடம். மொழிப்பாடம் இசையும் நடனமும் போல விருப்பப்பட்டால் படிக்கும் விஷயமாகத் தான் பார்க்கப்படுகிறது.

மொழிப்பாடங்களை வாழ வைக்க நம் அரசாங்கம் ஒன்றை மட்டும் செய்தால் போதும். கட் ஆஃபிற்கு மொழிப் பாடங்களில் வாங்கும் மதிப்பெண்களைக் கணக்கில் கொள்ள வேண்டும். பிறகு தானாக மரியாதை கிடைக்கும்.

அதே போல எந்தத் தொழில் கல்வியானாலும் இரண்டு மொழிகள் படித்தல் கட்டாயமாக்க வேண்டும். காலம் போன காலத்தில் கம்யூனிகேஷன் கிளாஸ் எடுக்கும் அவசியம் இருக்காது.

மொழி ஆசிரியர்களுக்கான மரியாதை மொழிகள் மீதான மரியாதையாக மாறும். கணக்கும் அறிவியலும் நடத்தும் ஆசிரியர்களுக்கு இணையான மரியாதை மொழிப்பாடங்கள் நடத்தும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

அடுக்கு

கணக்கும் அறிவியலும் மேல் தட்டிலும், அடுத்த தட்டில் சமூகப் பாடங்களும், கீழ் தட்டில் மொழியையும் இசையையும் நடனத்தையும் வைக்கும் நம் கல்வி அமைப்பு ஒரு சாதி அடுக்கை மறைமுகமாக உருவாக்குகிறது.

இன்று நம் பிள்ளைகள் ஒன்றரை மொழி (முக்கால் ஆங்கிலம், அரைத் தாய்மொழி) அறிந்து வளர்வது வேதனையாக உள்ளது.

எந்தக் கூட்டத்திலும் உங்களைத் தனித்துக் காண்பிக்க முக்கியக் காரணம் உங்கள் மொழி. பேச்சில், எழுத்தில் திறமையானவர்கள் எல்லா வேலை சார்ந்த தேர்வுகளிலும் முன்னுரிமை பெறுகிறார்கள். இது தெரிந்தும் நம் குடும்ப அமைப்போ கல்வி அமைப்போ அதற்கான முறையான அங்கீகாரம் வழங்குவதில்லை.

மொழிப் பயணம்

மொழியைச் சுத்தமாகக் கற்று, தேர்ச்சி பெற்று, தவறில்லாமல் பயன்படுத்துவது உங்களின் சுய மதிப்பைக் கூட்டும்.

தாய் மொழி, ஆங்கிலம், பிற இந்திய மொழி ஒன்று, பிற உலக மொழி ஒன்று என்று பயணம் செய்யுங்களேன். தொழிலுக்கும் பயன்படும். வாழ்க்கையும் ருசிக்கும்.

நான் என் இழந்த வாய்ப்புகளை ஈடு செய்யும் விதமாய் மீண்டும் இந்தி பேச ஆரம்பித்திருக்கிறேன். என் மகள் என் இந்திக்குப் பயந்தே என்னிடம் பேச யோசிக்கிறாள் என்பது வேறு சேதி!

தொடர்புக்கு :

gemba.karthikeyan@gmail.com

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

மொழிவேலை வாய்ப்புபாரதிதமிழ்கம்பெனிகள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author