Last Updated : 04 Apr, 2017 10:31 AM

 

Published : 04 Apr 2017 10:31 AM
Last Updated : 04 Apr 2017 10:31 AM

வெற்றி நூலகம்: லிங்க்டுஇன் தொடங்கிய தத்துவ மாணவர்

இணையவாசிகள் முழுக்க முழுக்க தொழில்முறையாகத் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதற்கான இடமாக லிங்க்டுஇன் இருக்கிறது. வேலைவாய்ப்புக்குக் காத்திருக்கும் இளம் பட்டதாரிகளும், தங்கள் துறையில் முன்னேறத் துடிக்கும் பணியாளர்களும், வல்லுநர்களும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான வலைப்பின்னலாகவும் விளங்குகிறது. நிறுவன விளம்பரங்களைப் பார்த்து விண்ணப்பிக்கும் பழைய முறைக்குப் பதிலாக, பயனாளிகள் தங்களுக்கான தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் திறமைக்கேற்ற வாய்ப்புகளை அடையாளம் காண உதவுகிறது.

தொடர்புகளின் அருமையை உணர்ந்தவர்!

பயிற்சி மாணவர்களுக்கு அவர்களுடைய துறையில் வழிகாட்டும் வல்லுநர்களின் அறிமுகம் தேவையா? தற்போதைய வேலையிலிருந்து அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டுமா? சொந்தமாக நிறுவனம் தொடங்க ஆலோசனை தேவையா? எல்லாவற்றுக்கும் லிங்க்டுஇன் வலைப்பின்னல் மூலம் வழிகாணலாம். அதே நேரத்தில் மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரிகளும், நிறுவன உயர் அதிகாரிகளும் திறமைமிக்க இளம் வல்லுநர்களை அடையாளம் கண்டுகொள்ளவும் லிங்க்டுஇன் வழிசெய்கிறது.

சமூக வலைப்பின்னல் யுகத்தின் தொடக்கப் புள்ளிகளில் ஒன்றாக லிங்க்டுஇன் விளங்குகிறது. ஃபேஸ்புக் அறிமுகமாவதற்கு முன்பே லிங்க்டுஇன் உதயமாகிவிட்டது. அதன் நிறுவனரான, ரீட் ஹாஃப்மன் (Reid Hoffman) தொடர்புகளின் அருமையை உணர்ந்திருந்ததே லிங்க்டுஇன் தோற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் காரணமாக அமைந்தது. ஹாஃப்மன், கல்லூரிகாலத்தில் தத்துவ அறிஞராக வேண்டும் என விரும்பினார். உலகில் மாற்றத்தை ஏற்படுத்த ஏதாவது செய்ய வேண்டும் எனத் துடித்துக்கொண்டிருந்தவர், பின்னர்ச் சாஃப்ட்வேர் துறைக்கு வந்துவிட்டார்.

எப்படி, எதற்காகப் பகிரப்படுகின்றன?

ரீட் ஹாப்மன், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பாலே ஆல்டோவில் பிறந்து பெர்க்ளியில் வளர்ந்தவர். அவருடைய பெற்றோர் இருவருமே முற்போக்கு எண்ணம் கொண்ட வழக்கறிஞர்கள். குழந்தையாக இருக்கும்போதே பெற்றோர் அவரை ஆர்ப்பாட்டங்களுக்கும் பேரணிகளுக்கும் அழைத்துச் சென்றனர். பத்து வயதில் அவருக்குக் கணினி விளையாட்டு அறிமுகமானது.

தத்துவம், உளவியல், கணினி அறிவியல், மொழியியல் ஆகிய பிரிவுகளைக் கொண்டிருந்த சிம்பாலிக் சிஸ்டம்ஸ் படிப்பை ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தார். அந்தப் பாடத்திட்டம் தத்துவம் மற்றும் உலக நடப்புகள் குறித்து அவரை யோசிக்கவைத்தது.

ஸ்டான்ஃபோர்டில் படித்தபோது தீவிரமாக அரசியல் சார்ந்த விவாதங்களில் ஈடுபட்டார். இங்குதான் அவருக்கு எதிர்காலத்தில் ‘பே பால்’ (Paypal) நிறுவனத்தைத் தொடங்கவிருந்த பீட்டர் தியலின் அறிமுகமும் கிடைத்தது. பொதுவாகவே எண்ணங்களை வெளிப்படுத்துவதிலும், கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதிலும் அவருக்கு ஆர்வம் இருந்தது. கருத்துகள் எப்படிப் பகிரப்படுகின்றன என்பதில் மட்டுமல்ல, எந்தக் கருத்துகள், எதற்காகப் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன என்பதிலும் கவனம் செலுத்தினார்.

1990-ல் பட்டப்படிப்பை முடித்தவுடன், புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் ஊக்கத்தொகை யுடன் மேற்படிப்பைத் தொடர்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. பேராசிரியராக, எழுத்தாளராக, தத்துவவாதியாக உருவாகும் எண்ணம் அப்போது ஏற்பட்டது. மேலும் உலகம் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்த விரும்பினார். இதற்குக் கல்வித் துறையைவிட மென்பொருள் துறையே ஏற்றது எனத் தீர்மானித்தவர், ஆக்ஸ்ஃபோர்டில் படிப்பை முடித்தவுடன் ஸ்டான்ஃபோர்ட் திரும்பினார்.

பணமும் படிப்பினையும்

நிறுவனங்களுக்கு நிதி திரட்டுவது பற்றி நிறைய புத்தகங்களைப் படித்தார். மற்ற நேரங்களில் முக்கிய நிதி முதலீட்டாளர்களை சந்தித்தபோதெல்லாம், “முதலில் ஏதாவது சேவையை உருவாக்கிவிட்டு வா…” என்று அறிவுரை கூறி அனுப்பினர். இதனிடையே ஆப்பிளின் இணையப் பிரிவான இ-வேர்ல்டி வேலை கிடைத்தது. ஆப்பிளில் பணியாற்றியபோதே புதிய நிறுவனத்தைத் தொடங்கத் தனக்கு என்னவெல்லாம் தெரிய வேண்டும் எனப் பட்டியலிட்டு அதை நோக்கி உழைத்தார்.

1997-ல் தன்னுடைய முதல் ஸ்டார்ட் அப் நிறுவனமான சோஷியல்நெட்-ஐ தொடங்கினார். டேட்டிங் தளமாக இயங்கினாலும் எதிர்பார்த்த விதத்தில் அந்நிறுவனம் வளரவில்லை. அதில் கிடைத்த பணத்தையும் படிப்பினையையும் வைத்து அடுத்த ஸ்டார்ட் அப்புக்குத் தயாரானார். அப்போது இணையப் பணப் பரிவர்த்தனை நிறுவனமான பே பாலை அவருடைய நண்பர் பீட்டர் தியல் தொடங்கியிருந்தார். அதில் சில காலம் பணியாற்றிப் பணி அனுபவத்தைச் சேகரித்துக்கொண்டார்.

தொடர்பின் முக்கியத்துவம்

பே பாலில் இணையம் மூலமான பணப் பரிவர்த்தனை சேவை காலத்தால் முந்தையதாக இருந்ததோடு, கிரெடிட் கார்டு நிறுவனங்கள், வங்கி அமைப்புகளுடன் போராட வேண்டியிருந்தது. இத்தகைய சவால்களைச் சமாளிக்கும் பொறுப்பை ஹாப்மன் ஏற்றுக்கொண்டார். இந்த அனுபவம் அவருக்குத் தொடர்புகளின் முக்கியத்துவத்தை அழுத்தமாக உணர்த்தியது. 2002-ல் பே பால் நிறுவனத்தைப் பிரபல ஏல நிறுவனமான இபே விலைக்கு வாங்கியது.

அதன் மூலம் கையில் கணிசமான பணம் கிடைத்தது. அடுத்து, ஸ்டான் ஃபோர்ட் நண்பர்கள் உள்ளிட்ட நான்கு இணை நிறுவனங்களுடன் சேர்ந்து தொழில்முறையில் செயல்படக் கூடிய சமூக வலைப்பின்னல் சேவையான லிங்க்டுஇன் தளத்தைத் தொடங்கினார்.

ஆரம்பத்தில் அதன் வளர்ச்சி எதிர்பார்த்த வேகத்தில் அமைய வில்லை. பலருக்கும் லிங்க்டுஇன் சேவையின் பயன்பாடு சரியாகப் புரியவில்லை. பயோடேட்டா போன்ற விவரங்களைப் பதிவேற்றுவது தவிர, அதில் என்ன செய்ய முடியும் புரியாமல் தவித்தனர்.

இந்தக் கட்டத்தில்தான் ஹாப்மன், பயனாளிகள் தங்கள் இமெயில் தொடர்புப் பட்டியலை அப்படியே பதிவேற்ற வழிசெய்தார். இதன் வழியாகப் புதிய தொடர்புகள் கண்டறியப்பட வழி பிறந்தது. முன்பின் தெரியாதவர்களிடமிருந்து இ-மெயில்கள் வருவது எரிச்சலை ஏற்படுத்தினாலும், புதிய தொடர்புகளுக்கு இது வழி வகுத்தது.

தேவதை முதலீட்டாளர்

அடுத்ததாக, நிறுவனங்கள் வேலைவாய்ப்புத் தகவல்களைப் பறித்துக்கொள்ளும் வசதிகளையும் இத்தளத்தில் ஏற்படுத்தினார் ஹாஃப்மன். அதோடு லிங்க்டுஇன் தகவல்களை மற்றவர்கள் பொதுவில் பார்க்கவும் வழிசெய்தார். இதனால் கூகுளில் ஒருவரின் பெயர் தேடப்படும்போது, அவரது லிங்கடுஇன் பக்க விவரமும் தேடல் முடிவுகளில் தோன்றுவது சாத்தியமானது.

இதனை அடுத்து, அமெரிக்கா மட்டுமல்லாமல் 200-க்கும் அதிகமான நாடுகளில் வேலைவாய்ப்பு நாடுபவர்கள் மற்றும் தொழில்முறை தொடர்புகளை நாடுபவர்கள் விரும்பிப் பயன்படுத்தும் சேவையாக உருவெடுத்தது. 2016 மத்தியில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் லிங்க்டுஇன் நிறுவனத்தை விலைக்கு வாங்கியது தொழில்முறை வலைப்பின்னல் சேவையாக அதன் முக்கியத்துவத்தை உணர்த்தியது.

லிங்க்டுஇன் நிறுவனராக அதன் வளர்ச்சிக்காகத் தீவிரமாகச் செயல் பட்டுக்கொண்டிருந்த அதே நேரத்தில் ஹாஃப்மன், தேவதை முதலீட்டாளராகப் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களிலும் முதலீடு செய்துவருகிறார். சிலிக்கான் பள்ளத்தாக்கில் இளம் தொழில்முனைவோருக்கான வழிகாட்டியாகவும் விளங்குகிறார். அந்த வகையில் சிலிக்கான் பள்ளத்தாக்கின் வலைப்பின்னல் மனிதராகப் புகழப்படுகிறார்.

சைபர் சிம்மன் எழுதிய ‘நம் காலத்து நாயகர்கள்’ புத்தகத்தில் இடம்பெற்ற ‘ரீட் ஹாப்மன்’ கட்டுரையின் சுருக்கம். (புதிய தலைமுறை பதிப்பகம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x