Last Updated : 12 Aug, 2016 11:54 AM

 

Published : 12 Aug 2016 11:54 AM
Last Updated : 12 Aug 2016 11:54 AM

மாயப் பெட்டி 12: ஒலிம்பிக்ஸ் ஆச்சரியம்

ஒலிம்பிக்ஸ் ஆச்சரியம்

லியாண்டர் பயஸ், போபண்ணா, சானியா, ஜிட்டு ராய் போன்ற பல நம்பிக்கை நட்சத்திரங்களும் ரியோ ஒலிம்பிக்ஸின் முதல் நாளே நம் நம்பிக்கையைத் தகர்த்துவிட, வேறொரு ரிசல்ட் கவனத்தை ஈர்த்தது.

ரியோ ஒலிம்பிக்ஸில் மகளிர்க்கான எடை தூக்கும் பிரிவு ஒன்றில் முதலிடம் பெற்ற மூன்று நாடுகளின் பட்டியல் கொஞ்சம் வியப்பை அளித்தது (ஸ்டார் ஸ்போர்ட்ஸ்). தாய்லாந்து, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ். தனிநபர் போட்டியில் இதுவரை ஒலிம்பிக்ஸில் மூன்று ஆசிய நாடுகள் பதக்கத்தை வென்றிருக்கின்றனவா என்பது தெரியவில்லை.

எது பண்பாடு?

‘நம் இந்தியக் கலாச்சாரத்தைக் கத்தி, துப்பாக்கி முனையிலேயேதான் மாத்தப் பார்த்தாங்க. முடியல்லை. ஆனால் நம் இளைஞர்கள் தாங்களாகவே கலாச்சாரத்தை மாத்திகிட்டிருக்காங்க. எம்.டி.வி.யைப் பார்த்து மாறிக்கிறாங்க. நம் நாட்டில் 200 கோடிப் பேர் ஏதோ ஒருவிதத்தில் யோகா பண்றாங்க. யோகப் பயிற்சி மேலும் மேலும் அதிகமாகும்போது பண்பாடு செம்மையாகும்’ என்று ஜக்கி வாசுதேவ் கூறியதை ஸ்டார் விஜயில் ஒளிபரப்பினார்கள். அதே சமயம் வேறொரு சானலில் ஒரு தந்தை தன் வேதனையை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். ‘வயதான காலத்தில் பெற்றோரைக் கவனித்துக்கொள்ள வேண்டியது பிள்ளை, பெண்களின் கடமை இல்லையா? இதுதானே இந்தியப் பண்பாடு? தன் வசீகரப் பேச்சால் அவர்களையெல்லாம் தன் ஆசிரமவாசியாக்கி ஈஷா செய்வது சரியா?’ என்றார்.

அம்மா பையன்

குழந்தைகளுக்கான பாட்டுப் போட்டி. ஒரு சிறுவன் பாடிய பாட்டு ‘சொர்க்கம் மதுவிலே’. இதுபோன்ற பாட்டுகளைக் குழந்தைகள் பாடுவதும், எந்தக் கூச்சமும் இல்லாமல் சம்பந்தப்பட்ட பெற்றோர் அதைப் பார்த்து ரசிப்பதும் டி.வி. போட்டிகளில் வழக்கமாகிவிட்டது. ஆனால் இந்த நிகழ்ச்சி (கலைஞர் டி.வி.) மேலும் ஸ்பெஷல்! அந்தப் பாட்டைச் சிறுவன் பாட, பாட்டின் நடுநடுவே வரும் காமரசம் மிகுந்த சப்தங்களை உற்சாகம் கொப்பளிக்க வெளிப்படுத்தியவர் கையில் மைக்கோடு பார்வையாளர் வரிசையில் உட்கார்ந்திருந்த அந்தச் சிறுவனின் அம்மா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x