Published : 12 Jan 2014 01:23 PM
Last Updated : 12 Jan 2014 01:23 PM

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணி மனிதாபிமான அடிப்படையில் வாய்ப்பு

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான திருத்தப்பட்ட தேர்வு முடிவை (குறிப்பிட்ட பாடங்கள் நீங்கலாக) ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

அத்துடன் மனிதாபிமான அடிப்படையில் சிலருக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2,881 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு ஜூலை 21-ம் தேதி போட்டித் தேர்வை நடத்தியது. 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட முதுகலைப் பட்டதாரிகள் தேர்வு எழுதினர். தமிழ் நீங்கலாக மற்ற பாடங்களுக்கான தேர்வு முடிவு அக்டோபர் 7-ம் தேதி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு அக்டோபர் 22, 23 மற்றும் நவம்பர் 11-ம் தேதி நடந்தது.

இந்நிலையில், தமிழ் பாட தேர்வு முடிவு ஜனவரி 3-ம் தேதி வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பும் நடத்தப்பட்டது. அதன்பிறகு இறுதித் தேர்வு பட்டியலும் வெளியானது. ஆனால், வழக்கு காரணமாக மற்ற பாடங்களுக்கான இறுதித் தேர்வு பட்டியல் வெளியிடப்படவில்லை.

திருத்தப்பட்ட முடிவு வெளியீடு

இதற்கிடையே ஆங்கிலம், பொருளாதாரம், உயிரி-வேதியியல், கணிதம், மனையியல், தெலுங்கு, விலங்கியல், உடற்கல்வி, புவியியல், நுண்ணுயிரியல் ஆகிய பாடங்களில் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்து திருத்தப்பட்ட தேர்வு முடிவை வெளியிடுமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மதிப்பீட்டு பணிகள் முடிவடைந்து மேற்கண்ட பாடங்களுக்கான திருத்தப்பட்ட கீ ஆன்சர் மற்றும் திருத்தப்பட்ட முடிவை ஆசிரியர் தேர்வு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 17-ம் தேதி விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்நடக்க உள்ளது. ஏற்கெனவே, சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள் இந்தச் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரத் தேவையில்லை. பட்டியலில் புதிதாக இடம்பெற்றவர்கள் மட்டும் வந்தால் போதும். சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதத்தை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தேவையான சான்றிதழ்களுடன் உயர் நீதிமன்ற உத்தரவையும் கொண்டுவர வேண்டும். முன்பு நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரத் தவறியவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தற்போது ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அவர்களும் விழுப்புரத்தில் நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளலாம்.

எனினும். காலியிடங்கள் இருந்தால் மட்டுமே அவர்கள் பரிசீலிக்கப்படுவர் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்-செயலாளர் வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x