Published : 28 Jun 2019 10:57 AM
Last Updated : 28 Jun 2019 10:57 AM

திரை நூலகம்: வரலாற்றின் வழியே தமிழ் சினிமா!

தமிழில் திரைப்பட விமர்சனம் என்பது காட்சிகளை எழுத்தாக விவரிப்பது என்ற புரிதலே இருப்பதாக எண்ணத் தோன்றுகிறது. திரைப்படம் என்பது காட்சியமைப்பு, இசை, ஒளியூட்டல், கேமரா கோணம், படக்கோவை போன்ற கூறுகளை உள்ளடக்கியது.

தமிழ்ச்சூழலில் இன்னும் திரைப்படம் என்பது பொழுதுபோக்கு, கேளிக்கை என்ற அளவில் சுருக்கப்பட்டு அதன் பல பரிமாணங்களைப் பற்றி ஆழமான உரையாடல் போதிய அளவில் நடக்கவில்லை.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகின் பிற நாடுகளில் பரிணாம வளர்ச்சியடைந்த திரைப்படம் என்ற ஊடகத்துக்கும், தமிழில் வளர்ச்சியடைந்த விதத்துக்கும் பெரிய வேறுபாடுகள் உண்டு. இந்த வேறுபாட்டை தியடோர் பாஸ்கரன் தனது ‘சினிமா கொட்டகை’ என்ற நூலில் 12 கட்டுரைகள் வாயிலாகத் திறம்பட அலசியுள்ளார்.

தமிழில் திரைப்படம் என்ற தொழில்நுட்பம் வளர்ந்த விதம், அதைக் குறிப்பிட்ட வகுப்பினர் பங்கேற்று செழுமையாக்கியதன் பின்னணி, சாதி மனநிலை செயல்பட்ட விதம், தொடக்கக் காலத்தில் காட்சி ஊடகமாகப் பரிணாம வளர்ச்சியடையாமல் வசனத்துக்கு முக்கியத்துவம் அளித்தற்கான காரணங்கள், திரைப்படங்களில் இடம்பெறும் பாடல், நடனத்துக்கான பின்னணி, திரைப்படங்களில் ‘இடைவேளை’ வருவதன் காரணம், சமூக நல்லிணக்கத்தில் திரையரங்குகளின் பங்களிப்பு, திரைப்படத்துக்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்பு, திரைப்படங்களைப் பார்க்கும் விதம், சினிமாவின் அழகியல் போன்ற பல முக்கியமான விஷயங்களைக் கூர்மையாகவும் சான்றுகளோடும் அலசியுள்ளார்.

ஒரு முக்கியமான தொழில் நுட்பத்தை எப்படிப் புரிந்துகொள்வது? இதன் வரலாற்றுப் பின்புலம் என்ன என்பன போன்ற கேள்விகளுக்கு இந்நூலில் எளிய மொழியில் பதில் தந்திருக்கிறார்.

திரைப்படக்கலைக்கு முன், மேடை நாடகங்கள் பிரபலமாகியிருந்தன. கோயில்களிலிருந்து வெளியேறிய தேவதாசிகள் நாடகத்திலும் நுழைந்தார்கள். பின்னர் அவர்களது நடனம், இசைத் திறனை திரைப்படத்துறைப் பயன்படுத்திக்கொண்டது.

திரைப்படம் வளரத் தொடங்கிய காலகட்டத்தில் அச்சுத் தொழில்நுட்பமும் மெல்ல வளர்ச்சி அடைந்தது. நாடகங்களில் பேசப்பட்ட வசனங்கள், புத்தக வடிவில் வெளிவந்தன. இதன் நீட்சியாக, இருபதாம் நூற்றாண்டின் 70-கள் வரைக்கும் வசனத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுக் காட்சிகள் பின் தள்ளப்பட்ட அவலம் நடந்தது.

அதாவது நாடகம் சினிமாவாக மாறிய பரிதாபமே நடந்தது. புதுமைப்பித்தன் 1943-ல் வெளிவந்த ‘மாயா பஜார்’ என்ற திரைப்படத்தை விமர்சித்தபோது, ‘இது படமாக்கப்பட்ட நாடகம்’ எனக் குறிப்பிட்டதைக் கவனிக்க வேண்டும்.

நாடகத்தின் பாதிப்பு தமிழ்த் திரைப்படங்களில் ஆழமாக வேரூன்றியது. பாடல்கள், நடனம், இசையோடு, வசனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, பிம்பங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், நீண்ட நாடகத்தின் நடுவில் கலைஞர்கள் இளைப் பாறுவதற்காக உருவாக்கப்பட்ட ‘இடைவேளை’ திரைப்படங்களில் நுழைந்த விதத்தை தியடோர் பாஸ்கரன் எடுத்துக்காட்டுகிறார்.

பல அபூர்வத் தகவல்கள், வரலாற்றுப் பின்புலங்கள், சமூக அரசியல் காரணிகள், கவனிக்கப்படாத ஆளுமைகள், வெளிச்சத்துக்கு வராத திரைப்படங்கள் என ஒவ்வொரு கட்டுரையும் ஆசிரியரின் தேடலாக விரிகிறது.

சினிமா கொட்டகை

சு.தியேடார் பாஸ்கரன்

விலை: ரூபாய்:160/-

காலச்சுவடு பதிப்பகம்

தொடர்புக்கு: 044 2844 1672

- எஸ். வாசுதேவன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x