Last Updated : 04 Sep, 2018 10:42 AM

 

Published : 04 Sep 2018 10:42 AM
Last Updated : 04 Sep 2018 10:42 AM

ஆங்கிலம் அறிவோமே 229: ஊரிலிருந்து வந்த உடை!

கேட்டாரே ஒரு கேள்வி

கலகல, வளவள என்று தமிழில் இரட்டைக்கிளவிகள் இருப்பதுபோல ஆங்கிலத்திலும் உண்டா?

******

கேட்டாரே ஒரு கேள்வி நண்பருக்கு விடையளிப்பதற்கு முன் இரட்டைக்கிளவி என்றால் என்ன என்பதைக் கொஞ்சம் நினைவுபடுத்திக்கொள்வோம். கலகல என்பதைக் கல, கல என்று பிரித்தால் ஒவ்வொன்றும் தனிப்பொருள் தராது. இதுதான் இரட்டைக்கிளவி. (வாவா, ஐயோஐயோ போன்றவற்றைப் பிரித்தாலும் பொருள் தரும். இவை அடுக்குத் தொடர்கள்).

ஆங்கிலத்திலும் இரட்டைக் கிளவிகள் உண்டு. உதாரணத்துக்கு Beriberi, KuKu. Beriberi என்ற ஒரு நோய் வைட்டமின் பி குறைபாட்டினால் உண்டாவது. KuKu என்பது Cuckoo (குயில்) எழுப்பும் ஒலி.

இப்படி ஒரே மாதிரி இரண்டு பகுதிகளைக் கொண்ட வார்த்தையை Tautonym என்பார்கள். tomtom, tutu, goody-goody ஆகியவை இத்தகைய வார்த்தைகள்தான்.

இந்தியர்-தமிழர், இந்தியர்-தெலுங்கர் என்றெல்லாம் குறிப்பிட்டால் முதல் வார்த்தை (இந்தியர்) என்பது இரண்டுக்கும் பொதுவான வேர். இதை genus என்பார்கள். இரண்டாவது வார்த்தை (தமிழர் அல்லது தெலுங்கர்) அதன் உட்பிரிவைக் குறிக்கிறது. இதை species என்பார்கள். சிலநேரம் இந்த genus, species பகுதிகள் ஒன்றாகவே இருந்துவிடக்கூடும். செந்நரியைக் குறிக்கும் விலங்கியல் வார்த்தை Vulpes vulpes (the red fox). இது போன்ற வார்த்தைகளை அறிவியலில் tautonym என்பார்கள்.

ஆங்கில இரட்டைக்கிளவிகளின் இரு பகுதிகளும் ஒன்றாகவே இல்லாமலும் போகலாம்.

Powwow என்பது கொண்டாட்டமும், கும்மாளமுமான ஒரு நிகழ்வைக் குறிக்கிறது. இதைப் பெரும்பாலும் வட அமெரிக்கர்கள் பயன்படுத்துகிறார்கள். நண்பர்களும் ஒரே நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் நட்புடன் விவாதம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் மாநாட்டையும் powwow என்பார்கள்.

Hanky-panky என்பது குறும்பு கலந்த கொஞ்சம் ரசக்குறைவான நடவடிக்கையைக் குறிக்கிறது. தரமானது அல்ல என்றாலும் சீரியஸாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லாத செயல் என்று கருதப்படுகிறது. பாலியல் கோணமும் இதில் உண்டு. A police raid was conducted on a massage parlor specializing in hanky-panky.

******

Presence of mind என்பது என்ன?

திடீரென்று நீங்கள் வசிக்கும் வீட்டில் தீப்பற்றிக்கொள்கிறது. உடனே பதற்றமடைந்து மின்தூக்கியைப் பயன்படுத்த முயலாமல், கீழே தவழ்ந்தபடியே வேகமாக நகர்ந்து, படிகள் வழியாக இறங்கி வெளியேறினால் உங்களுக்கு presence of mind இருந்திருக்கிறது என்று பொருள். அதாவது ஒரு திடீர், திகைப்பூட்டும் சூழலில் அமைதியாகவும் புத்திசாலித்தனமாகவும் செயல்படுவதை presence of mind எனலாம்.

ஒருவரைப் பற்றி எதிர்மறையாக விமர்சித்துக் கொண்டிருக்கிறீர்கள். அருகில் அவர் எதிர்பாராத வகையில் வந்துவிட்டால் அதிர்ச்சியை வெளிக்காட்டாமல் நீங்கள் இயல்பாகப் பேச்சை மாற்றினாலும் உங்களுக்கு presence of mind இருக்கிறது.

The child had the presence of mind to take a note of the car’s number plate.

******

Geese என்பது என்ன வகைப் பறவை என்று கேட்டிருக்கிறார்

ஒரு நண்பர்.

Geese என்பது goose என்பதன் பன்மை வடிவம். Goose என்பது பெண் வாத்தைக் குறிக்கும் சொல் (Gander என்பது ஆண் வாத்து). எனினும் இரு வகை வாத்துக்களையும் கொண்ட கூட்டத்தைக் குறிக்கவும் geese என்ற வார்த்தை பயன்படுகிறது.

Goose என்பது ‘முட்டாள்’ என்ற பொருளிலும் ஏனோ பயன்படுத்தப்படுகிறது.

Goose bumps என்பது மயிர் கூச்செறியும் நிலை. மிகவும் குளிர்ச்சியான ஒரு பொருளைத் தொட்டுவிட்டாலோ, மிக அதிகமாகப் பரவசமோ, பயமோ உருவானாலோ goose bumps தோன்றுகிறது. சிலர் இதை goose pimples என்றும் goose flesh என்றும் குறிப்பிடுவதுண்டு.

******

"New York, London ஆகிய இரு நகரங்களின் இணைப்புதான் nylon என்ற வார்த்தையா?"

நண்பரே, இப்படிக் கூறப்பட்டாலும் அது நிரூபிக்கப்படவில்லை. 1930-க்களில் DuPont நிறுவன இயக்குநர் இந்த இழையைக் கண்டுபிடித்தார். அதற்கு nylon என்று பெயரிட்டுக் காப்புரிமை பெற்றார்.

ஆனால், ஊர்களின் பொருளை அடிப்படையாகக்கொண்டு பல உடைகளுக்கும் பெயர் வைக்கப்பட்டதுண்டு.

Calico என்பது Calicut என்ற இந்திய நகரத்தின் பெயரை அடிப்படையாகக் கொண்டதுதான் (அந்த நகரம் இப்போது ஆங்கிலத்திலும் கோழிக்கோடு ஆகிவிட்டது. ஆனால், அதற்காக அந்த ஆடை இழையின் பெயரை ‘கோழிகோ’ என்று மாற்றப்படவில்லை!).

Denim என்ற இழை பிரெஞ்ச் நகரமான Serge de Nimes என்ற இடத்தில் உருவானது. இதன் ஒரு பகுதியாக விளங்கும் Denim என்பதுதான் அந்த இழையின் பெயரானது.

வழுவழுப்பான ஒரு வகைத் துணியை நாம் satin என அழைப்பதுண்டு. அரேபியாவிலுள்ள Zaitun என்ற துறைமுகத்தின் பெயர்தான் இதற்கு அடிப்படை.

ஈராக்கிலுள்ள ஒரு நகரம் Al-Mawsil. Mosul என்று அறியப்படும் இந்த நகரத்தில் உருவான ஆடைகளுக்கு muslin என்றே பெயரிடப்பட்டது.

வடக்கு பிரான்சில் உள்ள ஒரு நெசவு நகரம் Laon. இங்கு உருவாகும் ஒரு வகைப் பருத்தி இழைக்கு Lawn என்றே பெயர் சூட்டப்பட்டது.

english 2jpg100 

வீட்டின் சொந்தக்காரர், குடியிருப்பவரை வீட்டைக் காலி செய்யச் சொன்னால் அவர் vacate செய்யச் சொல்கிறாரா? அல்லது evacuate செய்யச் சொல்கிறாரா?

Evacuation என்றால் பாதுகாப்பான சூழலுக்கு மாற்றுதல் என்று பொருள். ஓரிடத்தில் வெள்ளம் வர வாய்ப்பு உண்டு என்றால் அங்கு இருப்பவர்களைப் பாதுகாப்பான வேறிடத்துக்கு மாற்றுவது evacuation. இப்படி மாற்றப்படுபவரை evacuee என்பார்கள். (இந்த வார்த்தையைப் பல முறை சொல்லிப் பார்த்து உங்கள் உதடுகள் நிரந்தரமாகக் கோணிக்கொண்டால் நான் பொறுப்பல்ல).

******

Marvel - Miracle

"Marvel என்றாலும், miracle என்றாலும் ஒரே அர்த்தம்தானே?"

வாசகரே. இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. Marvel என்பது பெரும் வியப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்று. மிகவும் உயரக் குறைவாக இருக்கும் ஒருவர் உயரம் தாண்டுதல் போட்டியில் முதலாவதாக வரும்போது marvellous என்று நாம் வியப்புடன் கலந்த பாராட்டை அளிப்பது இயல்பு. They marvelled at the huge hall. The patient’s improvement in health is marvellous.

Miracle என்பது அற்புதம். அதாவது, அறிவியலின்படி விளக்க முடியாத ஒன்று. ஏசுநாதர் ஏழு ரொட்டித் துண்டுகளைக் கொண்டு நாலாயிரம் பேரின் பசியை ஆற்றியது miracle. தெய்வீக அற்புதங்களை miracles என்பார்கள்.

"It is a medical miracle என்று சொல்வது சரியா அல்லது It is a medical marvel என்று சொல்வது சரியா?" என்று அடுத்ததாகக் கேட்டுவிடாதீர்கள். உங்களுக்குள் ஒரு பட்டிமன்றம் நடத்தி விடையைக் கண்டுபிடித்துக்கொள்ளுங்கள்.

******

தொடக்கம் இப்படித்தான்

Disco என்று ஒருவகை நடனத்தைக் குறிப்பிடுகிறோம். Disco dance, disco dancer என்ற வார்த்தைகளெல்லாம் நமக்குப் பழக்கமானவை. அதென்ன டிஸ்கோ? பிரான்ஸ் நாட்டில் சில கிளப்களில் ரெக்கார்டு இசையை ஒலிக்கவிட்டு அங்கு வருபவர்கள் நடனம் ஆடுவார்கள்.

இதுபோன்ற இடங்களை ‘Discotheque’ என்பார்கள். இந்த வார்த்தைதான் நாளடைவில் டிஸ்கோ என்று சுருங்கி அதுபோன்ற இடத்தைக் குறிக்கவும், அதுபோன்ற நடனத்தைக் குறிக்கவும் பயன்படுகிறது.

 

சிப்ஸ்

# Godspeed என்றால்?

பயணத்துக்குப் புறப்படும் ஒருவருக்குக் கூறப்படும் வாழ்த்து இது. மேலும் உன்னத நிலைக்கு நீங்கள் வர வேண்டும் என்ற அர்த்தமும் இதில் தொனிக்கிறது.

# Hitherto என்றால்?

இதுவரை - Until now. கடந்த காலத்தில் (until then) என்றால் thitherto.

# Faucet என்றால்?

குழாய் (வாஷ்பேசினில் காணப் படுவது எனலாம்), கழிப்பறையில்' ஃப்ளஷ்' செய்ய நாம் இயக்குவது. அதாவது தண்ணீர் வெளிப்படுவதைக் கட்டுப்படுத்த நாம் பயன்படுத்துவது. உச்சரிப்பு – ஃபாஸெட்.

தொடர்புக்கு - aruncharanya@gmail.com | ஓவியம்: வெங்கி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x