Published : 17 Sep 2018 11:24 AM
Last Updated : 17 Sep 2018 11:24 AM

இழப்பை தடுக்கும் இ-நாம் மண்டிகள்

விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும்  என்பதற்காக மத்திய அரசு கொண்டு வந்த திட்டம்தான் இ-நாம் என்கிற இணையதள சந்தை.  இந்த சந்தையில் இந்தியா முழுவதும் உள்ள விவசாய கூட்டுறவு சங்கங்கள், ஒழுங்குமுறை விற்பனை மையங்கள் போன்றவை ஒருங்கிணைக்கப்படும். இதன் மூலம் விவசாய பொருட்கள் சந்தையில் இடைத்தரகர்கள் ஆதிக்கம் இல்லாமல், விளை பொருளுக்கு உரிய விலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக நாடு முழுவதும் 2000 கொள்முதல் மற்றும் விற்பனை மண்டிகள் இந்த தளத்தில் இணைக்கப்படும்.  தற்போது வரை 585 மண்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.  ஆனால் ஆந்திரப் பிரதேசத்தில் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படத் தொடங்கியுள்ளது.

ஆந்திரப் பிரதேச அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த விவசாயத்துறையில் சிறப்பு தலைமைச் செயலாளர் அந்தஸ்திலான அதிகாரியை நியமித்துள்ளது. இப்போது  ஆந்திராவில் உள்ள பல ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் இ-நாம் சந்தைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரியான பி.ராஜசேகர் கூறுகையில், விவசாயிகள் வர்த்தகர்களிடையே சுமூகமான வர்த்தகத்துக்கு இந்த தளம் ஏற்பாடுசெய்து தருகிறது. ஆனால்  இதை நடைமுறைக்கு கொண்டுவருவது சாதாரணமாக அமைந்துவிடவில்லை. எங்கள் முன் பல சவால்கள் இருந்தன என்கிறார்.

கமிஷன் ஏஜெண்டுகளாலும், வர்த்தகர்களாலும் சூழப்பட்டுள்ள விவசாய விற்பனை கூடங்களை இந்த கட்டமைப்புக்குள் கொண்டு வருவது சவாலாக இருந்துள்ளது. இந்த முறைக்குள் வந்துவிட்டால் வரி செலுத்த வேண்டியிருக்கும் என்பதால் ஆரம்ப நாட்களில் பல எதிர்ப்புகள் இருந்துள்ளன. ஆனால் மாநில அரசின் உதவியால் இப்போது சாத்தியமாகியுள்ளது.

முதலில் ஆந்திராவில் செயல்பட்ட  21 விவசாய ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் இந்த தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன. கமிஷன் ஏஜெண்டுகளும், வர்த்தகர்களும் இதற்கான மிகப் பெரிய முட்டுக்கட்டையாக இருந்துள்ளனர். இவர்களை வழிக்கு கொண்டுவர  இரண்டு விதமான உத்திகளை பயன்படுத்தியுள்ளனர்.

முதலாவதாக வர்த்தக மற்றும் கமிஷன் எஜெண்டுகளுக்கு இந்த ஏல முறை எதிரானதல்ல, ஆனால் அவர்கள் இல்லாமல் ஏலம் நடக்காது என புரிய வைத்துள்ளனர். இதற்காக பல வர்த்தக அமைப்புகள், விவசாய சங்கங்களில் பேசி சமாதான முயற்சிகளை எடுத்துள்ளனர்.

ஆந்திர அரசு ஒப்பந்தம்

குண்டூர் மாவட்டத்தில் உள்ள துகிரலா சந்தையில் இடைத்தரகர்கள் ஆதிக்கம் இல்லை என்பதால் முதன் முதலில் அந்த சந்தை  இணைக்கப்பட்டுள்ளது. பின்னர் படிப்படியாக  அதோனி, குமோல் சந்தைகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த சந்தைகளில் அனைத்தும் திறந்த வழி ஏலத்தில் நடைபெற்று வந்தவை. இப்போது, ஆன்லைன் வழியாக கொண்டுவரப்பட்டன.  --இந்த கட்டமைப்பினை உருவாக்க கேபிஎம்ஜி நிறுவனத்துடன்  ஆந்திர அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

விவசாய பொருட்களுக்கு  ஆன்லைன் சந்தை மூலம் உரிய விலை கிடைக்க செய்ய முடியும். அதேநேரத்தில் விளை பொருட்களை சந்தைக்கே கொண்டுவரத் தேவையில்லை. முக்கியமாக உரிய விலை கிடைக்கும்  வேறு வேறு சந்தைகளுக்கு பொருட்களை பட்டியலிட முடியும் என பல சாதகங்கள் இ-நாம் சந்தையில் உள்ளன.

விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்யும் இந்த முயற்சி சாதாரணமாக நிறைவேறி இருக்காது. இடைத்தரகர்களிடம் இருந்து விவசாயிகளை காப்பதன் மூலம் ஆந்திரப் பிரதேசம் புதிய பாதையை உருவாக்கியுள்ளது. மற்ற மாநிலங்களும் இ-நாம் மண்டிகளை உருவாக்குவது காலத்தின் கட்டாயம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x