Last Updated : 23 Sep, 2018 04:06 PM

 

Published : 23 Sep 2018 04:06 PM
Last Updated : 23 Sep 2018 04:06 PM

வண்ணங்கள் ஏழு 23: திரைப்படமாகும் திருப்தியின் வாழ்க்கை!

திருநங்கைகளைப் பற்றிய புரிதல் சமூகத்தில் தற்போது அதிகரித்து இருந்தாலும் அவர்களுக்கான பணி வாய்ப்புகளை உருவாக்குவதில் தேக்கம் இருக்கிறது.

பெட்ரோல் பங்க், கம்ப்யூட்டர் பயிற்சி மையம், ஜெராக்ஸ் கடை போன்ற இடங்களில் திருநங்கைகளும் பணிபுரிவதற்கான வாய்ப்புகளைத் தனியார் நிறுவனங்கள் ஏற்படுத்தித் தர வேண்டும். அரசை மட்டுமே சாராமல் எத்தனையோ தனியார் நிறுவனங்களால் பாதுகாப்புடன் கூடிய பணி வாய்ப்புகளைத் திருநங்கைகளுக்குத் தர முடியும்.

திருநங்கைகளில் சிலர் வருமானம் குறைவாக இருந்தாலும் மனநிறைவோடு வாழ இதுபோதும் என்ற மன நிலையில் இது போன்ற பணிகளை விரும்பி ஏற்கிறார்கள். பிச்சை எடுப்பது, பாலியல் தொழிலில் ஈடுபடுவது இரண்டையும் தவிர்த்துப் போராடித் தன்னை நிரூபித்திருப்பவர் கேரளாவைச் சேர்ந்த திருநங்கை திருப்தி ஷெட்டி. கைவினைக் கலைஞர், விளம்பர மாடல், நடிகை, பள்ளி, கல்லூரிகளில் மாற்றுப் பாலினத்தவர் குறித்த விழிப்புணர்வை அளித்துவரும் பேச்சாளர் இப்படிப் பல முகங்கள் இவருக்கு இருக்கின்றன.

கைவினைக் கலைஞராகக் கேரளாவில் மதிப்பான ஒரு வாழ்க்கையை நடத்துபவர் இவர். ஹேண்டிகிராஃப்ட்ஸ் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் கேரளா வழங்கும் கைவினைக் கலைஞருக்கான அடையாள அட்டையை முதன்முதலாகப் பெற்றிருக்கும் திருநங்கை இவர். இந்த அங்கீகாரத்தின் மூலம் கேரள அரசு நடத்தும் எல்லாக் கண்காட்சிகளிலும் இவருடைய படைப்புகள் இடம்பெற முடியும்.

‘திருப்தி’யாக மாறிய கிரண்

சிறுவயதிலேயே பெற்றோரைப் பறிகொடுத்தவர் கிரண் (திருப்திக்குக் குடும்பத்தினர் வைத்த பெயர்). ஆதரவுக்கு யாரும் இல்லாத சூழலில் தன்னுடைய பெண் உணர்வைப் போற்றும் உடல் மாற்று அறுவை சிகிச்சைக்காக உழைக்கத் தொடங்கினார். தொடக்கத்தில் கேரளாவில் சிற்றுண்டி விடுதி ஒன்றில் வேலை பார்த்திருக்கிறார்.

“அதன் உரிமையாளருக்கு நான் திருநங்கை என்பது தெரியும். உடன் பணிபுரியும் எல்லாரும் என்னிடம் மிகவும் அன்பாகவும் மதிப்பாகவும் பழகினார்கள்” என்கிறார் திருப்தி. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை சென்னையில் செய்துகொண்டு திருநங்கை ஆனார் திருப்தி. “அப்போது என்னிடம் ஒரு பைசா வாங்காமல் என்னுடைய குரு என்னைப் பார்த்துக்கொண்டார். இன்றைக்கு நான் உயிரோடு இருப்பதற்கு அவர்கள் காட்டிய பரிவுதான் காரணம்” என்று நெகிழ்கிறார் திருப்தி.

மாற்றத்துக்கு வித்திட்ட மருத்துவர்

“ஒருமுறை என்னைக் கேலி, கிண்டல் செய்த இரண்டு பேர் என்னைப் பலமாகத் தாக்கினர். எர்ணாகுளம் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். அங்கு எனக்கு சிகிச்சையளித்த டாக்டர் ஆனி, என் வாழ்வில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தினார்.

அந்தப் பகுதியில் வாழ்ந்த ஒரு முதிய பெண்ணிடம் கைவினைக் கலையைக் கற்றுக்கொள்ள அவர் அனுப்பினார். நானும் ஆர்வமாகக் கற்றுக்கொண்டேன். விதவிதமான மணிகளால் செய்யப்படும் மாலைகள், அணிகலன்கள் செய்வதற்கான ஆரம்பக் கட்டப் பயிற்சியை அவர் அளித்தார். அதன்பிறகு அந்தக் கலையில் எனக்கு ஏற்பட்ட ஆர்வமும் இயல்பிலேயே ஓவியம் வரைவதில் எனக்கு இருந்த பயிற்சியும் பல புதிய டிசைன்களில் அணிகலன்களைச் செய்ய என்னைத் தூண்டின. 

குறைந்த மூலதனத்தில் மதிப்பான ஒரு வாழ்க்கையை வாழ அதுவே எனக்குப் போதுமானதாக இருந்தது. அதோடு எனக்குத் தெரிந்த திருநங்கைகளுக்கும் இந்தக் கலையைக் கற்றுக்கொடுத்தேன். மாநிலத்திலேயே முத்ரா வங்கிக் கடன் பெற்றுத் தொழிலை விரிவுபடுத்திய திருநங்கை நானாகத்தான் இருப்பேன். பல இடங்களில் அரசு நடத்தும் கண்காட்சிகளில் என்னுடைய ஸ்டாலும் இடம்பெறும். ஸ்டாலைத் திருநங்கை தோழிகளே கவனித்துக்கொள்வார்கள்” என்கிறார் திருப்தி. இவர்

மலையாளத்தில் இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ‘த்வயா’வின் 2017-ம் ஆண்டின் ‘குயின் ஆஃப் கேரளா’ அழகிப் போட்டியில் 15 பேரில் ஒருவராகத் தேர்வானார். கேரளத்திலிருந்து வெளிவரும் பிரபல  பெண்கள் இதழான ‘வனிதா’ இவரது படத்தை அட்டையில் வெளியிட்டு, இவரது பேட்டியை பிரசுரித்திருந்தது.

திருநங்கைகளுக்கு உதவி

“நிறையப் பேர் திருநங்கைச் சமூகத்தினருக்கு உதவத் தயாராக இருக்கின்றனர். ஆனால், எப்படி உதவுவது என்பது தெரியாமல் இருக்கிறார்கள். கேரள அரசாங்கமே நிறைய நன்மைகளைத் திருநங்கை சமூகத்துக்கு செய்துவருகிறது. ஆனால், அந்தத் திட்டங்கள் முறையாக அவர்களுக்குக் கிடைப்பதில் சில தடைகள் ஏற்படுகின்றன. அந்தத் தடைகளை என்னால் முடிந்தவரை சரிசெய்து, திருநங்கைகளுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பெற உதவுகிறேன்” என்று சொல்லும் திருப்திக்கு,  கேரளாவில் மாற்றுப் பாலினத்தவரின் உரிமைகளுக்காகச் செயல்படும் ‘க்யோரிதம்’ அமைப்பு, சாதனையாளர் விருதை இந்த ஆண்டு வழங்கிக் கவுரவித்திருக்கிறது.

ஆண், பெண் குறித்த புரிதல் மாறுமா?

மாற்றுப் பாலினத்தவர் குறித்தும் பால் புதுமையர் குறித்தும் நிறைய புரிதல்களைச் சமூகத்தில் ஏற்படுத்த வேண்டியிருக்கிறது. ஆண், பெண்ணின் அன்றாட நடவடிக்கைகளை உற்றுப் பார்க்கும் சமூகம், இவர்களையும் ஒரு சதுரத்தில் சிறைப்பிடித்து, இப்படி இருந்தால்தான் ஆண், பெண் என்று நம்புகிறது. பொதுச் சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று.

ஆண் என்றால் சிம்மக் குரலில் கர்ஜிக்க வேண்டும்; பெண் என்றால் குயிலின் இனிமையோடு பேச வேண்டும் என்று கட்டமைக்கிறது. சமூகத்தின் இந்தச் சதுரத்துக்கு வெளியே இருப்பவர்கள் எள்ளி நகையாடப்படுகிறார்கள்.

ஆண்களில் சிலருக்கு இயல்பிலேயே குரல் சன்னமாக இருக்கும். அவர்கள் உரத்த குரலில் பேசாமல், மென்மையாகப் பேசுவார்கள், அன்றாட வேலைகளில் நடை, உடை பாவனைகளில் சற்றே நளினமாகத் தம்மை வெளிப்படுத்திக் கொள்வார்கள். இப்படிப்பட்ட ஆண்களை இழிவாக நடத்துவது, கேலி, கிண்டல் செய்வது இன்றைக்கும் கிராமம், நகரம் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லா இடங்களிலும் நடக்கிறது. 

அவர்களுக்கு விதவிதமான பட்டப் பெயர்களைச் சூட்டி, அவர்களைத் தலைகுனிய வைக்கிறது. இப்படி மென் குரலில் பேசும் ஆண்களையும் தலைமுடியை எண்ணெய் வைத்துப் படிய வாரிக்கொள்ளாமல் கிராப் வைத்துக்கொள்வது, பைக் ஓட்டுவது, பேருந்தில் சக பெண்ணுக்கு நடக்கும் அநீதியை தட்டிக் கேட்பது, தன்னைச் சீண்டவரும் ஆணை எதிர்த்து அடிப்பது போன்றவற்றைச் செய்யும் பெண்களையும் அவர்களின் பாலினத்தையே சந்தேகிக்கும் வகையில் கருத்துகளைப் பரப்புவதும் இந்தச் சமூகத்தில் நடக்கிறது.

திருமணமாகி குழந்தைகளுடன் இருக்கும் நளினமாக நடந்துகொள்ளும் ஆண்கள் இருக்கிறார்கள். அதேபோல் தங்களின் குடும்ப உறுப்பினர்களை அன்பாக அதட்டி உருட்டும் பெண்களும் இருக்கிறார்கள். வெளித் தோற்றத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒருவரைக் கேலி, கிண்டல் செய்வதும், அவரின் பாலினத்தை நாமாகவே முடிவு செய்வதும் தவறு.
 

24 மணிநேரத்தில் நடக்கும் ஒரு சம்பவத்தை மையமாகக் கொண்டு திருப்தி ஷெட்டி எடுத்திருக்கும் குறும்படம் ‘லயா’. குறும்படப் போட்டிக்கு வந்திருந்த 600 படங்களில் 18 படங்களில் ஒன்றாக இவர் நடித்திருக்கும் படம் தேர்வாகியிருக்கிறது. திருப்தி ஷெட்டியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்துத் தயாராகும் படத்திலும் இவர் நடிக்கவிருக்கிறார்.

(புரிந்துகொள்ள முயல்வோம்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: ravikumar.cv@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x