Published : 03 Jun 2019 11:51 AM
Last Updated : 03 Jun 2019 11:51 AM

அலசல்: கிராமங்களை நோக்கியும் கொஞ்சம் சிந்திப்போம்

உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளின் படி பத்தாயிரம் நபர்களுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் என மருத்துவம் தொடர்புடைய 23 நபர்கள் பணியில் இருக்க வேண்டும். இது குறைந்தபட்ச அளவு மட்டுமே. ஆனால், இந்தியாவில் இந்த விகிதாச்சாரம் மிக மோசமான நிலையில் உள்ளது. குறிப்பாக கிராமங்களில்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் படிப்பு முடிந்து வெளிவரும் மருத்துவர்களில் ஐம்பது சதவீதத்தினர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயின்றவர்கள். அரசு கல்லூரிகளில் பயில்பவர்கள் குறைந்தது ஒரு ஆண்டுகாலம் கிராமப்புறங்களில் பணியாற்ற வேண்டும் என்று ஒரு விதி இருக்கிறது.

ஆனால், இந்தக் காலகட்டத்தை பெரும்பாலானோர் சபிக்கப்பட்ட ஒன்றாகவே கருதுகின்றனர். இவர்கள் மட்டுமல்ல, கிராமங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களும் கூட வேறுவழியின்றி நிர்பந்தத்தின் காரணமாக பணிபுரியும் மனநிலையில்தான் இருக்கின்றனர்.

இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று அரசு சம்பந்தப்பட்டது. மற்றொன்று சமூகம் சார்ந்தது. முக்கியமான அடிப்படை வசதிகளைக் கூட அரசு செய்து தருவதில்லை என்பது ஒரு புகாராக உள்ளது. அதேசமயம், அவர்கள்

எதிர்பார்க்கும் வாழ்க்கைமுறை வசதிகள் கிராமப்புறங்களில் அவர்களுக்கு கிடைப்பதில்லை என்பது மற்றொரு காரணமாக உள்ளது.  அதனால் இந்த ஒரு ஆண்டு கால கட்டாய பணி முடிந்ததும் இவர்களில் 80 சதவிகித மருத்துவர்கள் நகர்ப்புறங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பணிக்கு சேர்ந்து விடுகின்றனர்.

அரசு மருத்துவராக இருப்பதைக் காட்டிலும் தனியார் மருத்துவமனையில் அதிகம் ஊதியம் ஈட்ட முடியும் என்ற காரணத்தினாலும் நகர்ப்புற வாழ்க்கையின் மீதான விருப்பத்தினாலும் தனியார் நிறுவனங்களில் பணி புரிய விரும்புகின்றனர். இவ்வாறு பெரும்பாலானோர் நகர்ப்புறங்களை நோக்கி நகர்வதால் கிராமப்

புறங்கள் முற்றிலும் கைவிடப்படுகின்றன. நகரங்களில் தேவைக்கும் அதிகமான அளவு மருத்துவர்களின் எண்ணிக்கை பெருகிவிடுகிறது. இதனால் நகரம் மற்றும் கிராமங்களுக்கு இடையே முறையற்ற மருத்துவர் விகிதாச்சாரம் உருவாகி விடுகிறது. இதன் விளைவு, கிராமப்புறங்களில் முறையான கல்வித் தகுதியில்லாத, அனுபவமில்லாத நபர்கள் மருத்துவம் பார்க்கும் நிலையும் உண்டாகிறது.

மருத்துவம் என்பது சேவை என்ற நிலையிலிருந்து முற்றிலுமாக வியாபாரம் என்ற நிலைக்கு மாறி வெகுகாலம் ஆகிவிட்டது. எங்கு அதிக அளவு வருமானம் ஈட்ட முடியுமோ அங்குதான் தனியார் மருத்துவமனைகள் செயல்படும். ஆனால், அரசோ, அரசு மருத்துவர்களோ அவ்வாறு செயல்படக் கூடாது.

கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கும் முறையான மருத்துவ வசதி செய்து தர வேண்டியது அரசின் கடமை. மக்களின் வரிப் பணத்திலிருந்து மாத ஊதியம் பெறும் அரசு மருத்துவர்களும் மக்களுக்கு தாங்கள் கற்ற மருத்துவத்தைத் தர வேண்டிய கடமை உள்ளது.

முதலில் அரசு மருத்துவமனைகளின் மீதான மக்களின் எண்ணத்தை மாற்ற வேண்டும். எனில் அரசு கிராமப்புறங்களில் மருத்துவர்களை நியமிப்பதோடு மட்டுமல்லாமல் தேவையான வசதிகளையும் செய்துதர வேண்டும்.

தொடர்ந்து மருத்துவமனைகளின் நிர்வாகமும், செயல்பாடுகளும் எப்படி இருக்கிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அப்போதுதான் கிராமங்களில் இருக்கும் மக்களுக்கும் மருத்துவம் என்பது சரியான முறையில் வழங்கப்படும். இனி அரசு, நகரங்களுக்கு மட்டுமல்ல கிராமங்களையும் நோக்கி சிந்திக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x