Last Updated : 18 Jun, 2019 11:20 AM

 

Published : 18 Jun 2019 11:20 AM
Last Updated : 18 Jun 2019 11:20 AM

திரை மையக் கல்வியால் மந்தமாகும் மாணவர்கள்!

“அம்மா! எங்க டீச்சர் செல்போனில் பாட்டுப் பாட வச்சு கத்துக் கொடுத்தாங்க. உங்க செல்போனை எடுங்க. புத்தகத்தில் உள்ள QR Code ஸ்கேன் செய்யுங்க பாட்டு வரும்.

நான் பார்க்கணும்”ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகளின் குரல் இதுவாகவே ஒலிக்கிறது. பரவாயில்லையே! நவீனத் தொழில்நுட்பம் குழந்தைகளை வீட்டிலும் படிக்கத் தூண்டியுள்ளதே!

நவீனத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் கற்பித்தலில் புதுமைகளைத் தமிழகக் கல்வித் துறை செய்யத் தொடங்கி உள்ளது. வகுப்பறைகளில் செல்போன் பயன்பாடு, கணினிவழிக் கல்வி, ஸ்மார்ட் போர்டுவழிக் கல்வி, தொலைக்காட்சிவழிக் கல்வி எனப் புதுமைகள். இப்படிக் காட்சி ஊடகங்கள்வழி புதுமையான கற்பித்தல். புதுமைகளை வரவேற்போம். பாராட்டுவோம்.

அன்று ஆசிரியர் மையக் கல்வி, நேற்று குழந்தை மையக் கல்வி இன்று திரை மையக் கல்வி (screen center learning) எனக் கல்வியில் புதுமை புகுந்துள்ளது.

இது சரியான புதுமையா?

காலை வந்தவுடன் பல பள்ளிகளின் தொலைக்காட்சிகளில் பாடல்கள் ஒலிபரப்பப்படுகின்றன. அதன்பின் பாடம் நடத்தும்போது செல்போன் உதவியுடன் பத்துப் பதினைந்து நிமிடங்கள் காட்சிகளைப் பார்க்கிறார்கள்.

அதன்பின், பத்து நிமிடங்கள் பாடத்தில் உள்ள பிற இணைப்புகளைத் தேடுகிறார்கள். மதிய இடைவேளையில் அரைமணி நேரம் மீண்டும் தொலைக்காட்சி, சில இடங்களில் புரொஜக்டர் உதவியுடன் பாடல்கள் திரையிடப்படுகின்றன.

அதன்பின் வீடுகளில் பல குழந்தைகள் தொலைக்காட்சி பார்க்கின்றனர். இப்படி, குழந்தைகள் சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாகக் காட்சி ஊடகங்களில் நேரத்தைச் செலவிடுகிறார்கள். நாளொன்றுக்கு இரண்டு மணி நேரத்துக்கு மேல் காட்சி ஊடகங்களில் செலவிடுவது மூளையைப் பாதிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குழந்தை பிறந்த இரண்டு ஆண்டுகளில் மூளை செல்களில் கோடிக்கணக்கான நரம்புகளின் இணைப்புகள் உருவாகும். பார்வை, பேச்சு, சிந்தனை, உணர்வுகள், மற்ற மூளைத் திறன்களை ஊக்குவிக்கும் விதமாக அந்த இணைப்புகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்த இணைப்புகளால் 12 வயதுவரை மூளை அதிக அளவிலான செயல்பாட்டுடன் இருக்கும். குழந்தைப் பருவத்தின் தொடக்கக் காலத்தில் மூளையின் ஆரோக்கியமான வளர்ச்சியும் நரம்பியல் பாதை வழிகளின் வளர்ச்சியும் தன்னியல்பாக நடைபெறக் கற்பனை விளையாட்டுகள் அவசியம். அதற்கு அழிவை ஏற்படுத்துபவையாகக் காட்சி ஊடகங்கள் உள்ளன.

கற்பனை செய்ய முடியாதே!

புத்தகத்தில் உள்ள கதையை வாசிக்கும்போது, அதில் வரும் விலங்குகள்/ மனிதர்கள், அவற்றின்/அவர்களின் உணர்வுகள், குரல்களின் தொனி, அவற்றின்/ அவர்களுடைய சூழல் உள்ளிட்டவற்றைக் குழந்தை சுயமாகக் காட்சிகளாக மனக்கண் முன் உருவாக்க வேண்டியுள்ளது. இப்படிச் சுயமாக உருவாக்கப்பட்ட காட்சிகள் முக்கியமானவை.

மறுபுறம், காட்சி ஊடகங்களைப் பார்க்கும்போது குழந்தை கற்பனை செய்வது கிடையாது. ஏனெனில், காட்சித் திரையில் ஏற்கெனவே பிம்பங்கள் உள்ளன. பள்ளிகளில் படைப்பாக்கச் சிந்தனைகளைப் பயன்படுத்த வேண்டிய நேரம் வரும்போது, அதற்குத் தேவையான செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு நரம்பியல் இணைப்புகள் இருக்காது.

கற்பனை செய்வதில் ஒரு குழந்தைக்கு முன் அனுபவம் இல்லாவிட்டால், ஆசிரியர் காட்சியை விவரிக்கும்போது அது எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பார்க்க முடியாது. அறிவுச் செயல்பாடுகளை எதிர்கொள்ளும் வகையில் மூளை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கு உரிய பயிற்சி அளிக்காவிட்டால், அது சக்தி இழந்துவிடும்.

ஓடி விளையாடு!

அறிவியல் பாடத்தை உற்றுநோக்கல் முறையில் கற்பிக்க வேண்டும் என்று தேசியப் பாடத்திட்ட வடிவமைப்பு 2005 சுட்டிக்காட்டுகிறது. இயற்கையை உற்று நோக்குவதன் மூலமாகப் பொறுமை, மனநிறைவு, பெருமதிப்பு, வியப்பு ஆகியவற்றைக் குழந்தைகள் கிரகித்துக்கொள்கிறார்கள் என்கிறது அறிவியல்.

காட்சி ஊடகங்கள் துரிதகதியில் இயங்கும் பிம்பங்களைப் பார்க்கப் பழகித் தரும். ஆனால், இயற்கை நமது அனைத்து உணர்வுகளையும் ஈடுபடுத்தி உண்மையாகக் கற்க உதவும். குறிப்பாக, பால்ய பருவத்தில் தகுந்த மூளைத் தூண்டல் ஏற்படுவதற்கும், மூளை வளர்ச்சி அடைவதற்கும் விளையாட்டுக்கு முக்கியப் பங்குள்ளது.

ஓடுதல், குதித்தல், ஏறுதல் போன்ற விளையாட்டு நடவடிக்கைகள் குழந்தைகளின் அனைத்துத் தசை இயக்கத் திறன்களோடு மூளை வளர்ச்சிக்கு உதவும். விளையாட்டுகள், ஓவியம் தீட்டுதல், படம் வரைதல் போன்ற செயல்கள் நுண்ணிய தசை இயக்கத் திறன்களையும் உயர் மூளைப் பாதைகளையும் வளர்க்க உதவும். இவை குழந்தை மையக் கற்றலில் முக்கியப் பங்கு வகித்தன.

அச்சுறுத்தும் விளைவுகள்

அதிகப்படியான நேரத்தை ஸ்மார்ட் திரைக்கு முன்னால் கழிக்கும் மாணவர்களிடம் காணப்படும் விளைவுகளில் சில:

# பொறுமையற்றுப் பிடிவாதம் பிடிப்பது.

# பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வை எதிர்பார்ப்பது.

# பிற குழந்தைகளுடன் வலியச் சண்டைக்குச் செல்வது.

# அமைதியில்லாமல் படபடப்பாக இருப்பது.

# சுய கட்டுப்பாடு அற்றவர்களாக மாறிவிடுவது.

# மந்தமாகக் காணப்படுவது.

# அதிகக் களைப்புடன் தென்படுவது.

# செய்ய வேண்டிய செயல்களைத் தவிர்ப்பது.

# பாடங்களை ஊன்றிப் படிக்க முடியாமல் கவனம் சிதறுவது.

# மொழித் திறன் குன்றியவர்களாக இருப்பது.

இவற்றில் இருந்து மீள, செல்போன் உதவியின்றிக் குழந்தைகளுடன் பாடுவோம். குழந்தைகளுக்கு இசைக் கருவிகளை இசைத்துக் காட்டுவோம்.

எண்ணிக்கை விளையாட்டை விளையாடுவோம். தனி நடிப்பு, போலச் செய்தல், நாடகம் போன்றவற்றின் வழியாகக் குழந்தைகளை உற்சாகப்படுத்துவோம்.

வகுப்பறையில் முகமூடி அணிந்து குழந்தைகளுடன் விளையாடி மகிழ்விப்போம். குறைந்த அளவு நேரத்தைக் காட்சி ஊடகங்களுக்குச் செலவழித்து, குழந்தைமையை மீட்டெடுப்போம்.

கட்டுரையாளர்,

எழுத்தாளர், பள்ளித் தலைமையாசிரியர்.

தொடர்புக்கு: saran.hm@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x