Published : 19 Jun 2019 12:03 PM
Last Updated : 19 Jun 2019 12:03 PM

பள்ளி உலா

ஊராட்சி ஒன்றியத்  தொடக்கப் பள்ளி, பள்ளிகுப்பம், வேலூர்.

சரியான போக்குவரத்து வசதிகூட இல்லாத கிராமத்தில் அமைந்துள்ள இந்தப் பள்ளியில், பெரும்பாலும் ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களே படிக்கின்றனர்.

ஸ்மார்ட் வகுப்பறைகள், மின்விசிறி வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, விளையாட்டு மைதானம் போன்றவை சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு காலத்தில் பொட்டல் காடாக இருந்த இடத்தில் இன்று மரங்கள், காய்கறித் தோட்டம், மூலிகைத் தோட்டம் அமைத்து, பசுமைப் பள்ளியாக மாற்றப்பட்டிருக்கிறது. இயற்கை முறையில் மாணவர்கள் அவரை, பூசணி, முருங்கை, மிளகாய், தர்பூசணி, வாழை, தூதுவளை, சிறு நெல்லி, நார்த்தங்காய் போன்றவற்றைப் பயிரிட்டு வருகின்றனர். மாணவர் காய்கறி அங்காடி அமைத்து, அவற்றைப் பொது மக்களுக்கும், ஆசிரியர்களுக்கும் விற்பனை செய்து வருகின்றனர்.

கிராம மக்கள் இந்தப் பள்ளி மீது அதிக ஈடுபாடுகொண்டுள்ளனர். ஏராளமான நன்கொடையாளர்கள் மூலம் பல்வேறு நலத் திட்டங்கள் இந்தப் பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆண்டுதோறும் ஆண்டு விழாக்களும் விளையாட்டு விழாக்களும் நடத்தப்படுகின்றன. ஏட்டுப் படிப்பு மட்டுமின்றி, மாணவர்கள் களப் பயணம், சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். தொலைவில் இருந்து வரும் மாணவர்களுக்கு வாகன வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

ஸ்பிரிங் ஃபீல்டு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி,, கே.கே. நகர், சென்னை.

‘உடல், மனம், ஆன்மா’ என்ற தாரக மந்திரத்தோடு கடந்த 44 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கிவருகிறது. ஸ்மார்ட் வகுப்பறைகள், கணினி, இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆய்வகங்களும் 3டி ஆய்வகமும் இங்கே இருக்கின்றன.

வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தவும் பொது அறிவை வளர்க்கவும் 100 மாணவர்கள் அமர்ந்து படிக்கும் விதத்தில் மிகப் பெரிய நூலகம் இங்கே இருக்கிறது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள்  இருக்கின்றன. இவை தவிர, தினசரிகள், வார மாத இதழ்களும் உள்ளன.

மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்க தமிழ் இலக்கிய மன்றமும் அறிவியல் மன்றமும் கருணை மன்றமும் சுழல் மன்றமும் (Rotary Club) சிறப்பாக இயங்கிவருகின்றன. கருணை மன்றச் செயல்பாடுகளுக்காக, கருணா இண்டர்நேஷனல் க்ளப் முதல் பரிசை வழங்கியிருக்கிறது.

காலை வழிபாட்டு நிகழ்வை மாணவர்களே நடத்துவதால், மேடை பயம் போய்விடுகிறது. சுதந்திர தின விழா கலை இலக்கியப் போட்டிகளில் மாநில அளவில் இந்தப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றதற்காக, ‘சிறந்த திறன் வளர் பள்ளி’ என்ற விருதை காமராஜர் அகாடமி வழங்கியிருக்கிறது. குடியரசுதின விழாவில் பங்கேற்ற மாணவியர், ஆளுநரிடம் முதல் பரிசைப் பெற்றிருக்கிறார்கள்.

இசை, நடனம், கைவேலை, ஓவியம் கையெழுத்துப் போன்றவற்றுக்குப் பயிற்சியளிக்கப்படுகின்றன. உடற்பயிற்சி, யோகா, தடகள விளையாட்டுகளுக்குச் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. நாட்டு நலப்பணித் திட்டம், சாரண சாரணியர் இயக்கம், தூய்மை விழிப்புணர்வு இயக்கம் போன்றவை சிறப்பாக இயங்கிவருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x