Published : 20 Sep 2014 08:52 AM
Last Updated : 20 Sep 2014 08:52 AM

திரை விமர்சனம்: ஆள்

நாகரீகமான இளைஞன் ஒருவன்; தன் தோற்றத்துக்கு பொருந்தாத ஒரு குறுகலான சந்துக்குள், உள்ள கடையில் தொலைபேசியில் பேசிவிட்டுத் திரும்பிப் பார்க்கிறான். அருகில் நிற்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தேகக் கண்ணுடன் பார்க்க, பதற்றம் தொற்றிக்கொள்கிறது. தலைதெறிக்க ஓடுகிறான்.

போலீஸ் பார்வையிலிருந்து மறைந்தவுடன், அவன் கையிலி ருக்கும் மொபைல் ஃபோன் அழைக்கிறது. “எதுக்காக என்னை போலிஸ் தொரத்துது?” எனக் கேட்கிறான். “நீ நல்லா படிச்சிருக்க, கோட்டு சூட்டு போட்டிருக்க, பார்க்குறதுக்கு வெள்ளையா, அழகா இருக்க. கராச்சிக்கு ஒரே ஒரு ஃபோன் கால்தான் பண்ணினே. அதுக்கே உன்னை போலீஸ் தொரத்துது பார்த்தியா? இதுதான் உலகம்” என்கிறார்.

இது படத்தில் வரும் ஒரு காட்சி. இந்த உரையாடல் சொல்லும் சேதிதான் படத்தின் மையம்.

இயற்கை எழில் கொஞ்சும் சிக்கிம் மாநிலத்தில் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிகிறான் இறை பக்தி நிரம்பிய அமீர் (விதார்த்). அவன் தாய், தங்கை, தம்பி ஆகியோர் சென்னையில் இருக்கிறார்கள். சென்னையில்தான் அவன் காதலி மீனாட்சியும் (ஹர்திகா ஷெட்டி) இருக்கிறாள்.

ஒரு நாள் கல்லூரி வளாகத்தில் நாலைந்து மாணவர்கள் ஒரு மாணவனை மூர்க்கமாக அடிப்பதைத் தடுக்கிறான். அந்த மாணவன் ரிஸ்வான் கான் என்னும் தமிழ் இஸ்லாமியன் என்று தெரியவருகிறது. இஸ்லா மியர்கள், இஸ்லாமியர் என்ற ஒரே காரணத்துக்காகவே ஒடுக்கப்படு கிறார்கள்; அதைத் தடுக்க ஜிகாத் (புனிதப் போர்) மட்டும்தான் ஒரே தீர்வு என விரக்தியோடு சொல்லும் ரிஸ்வானைச் சமாதானப்படுத்தித் தன் வீட்டிலேயே தங்க அனுமதிக்கிறான் அமீர். தன் காதல் சங்கதி மீனாட்சியின் அப்பாவுக்குத் தெரியவர அவரைச் சந்தித்து பேச சென்னைக்குப் புறப்படுகிறான் அமீர்.

சென்னையில் ஒரு குரல் மொபைல் போன் மூலம் அவனைத் துரத்துகிறது, மிரட்டுகிறது. ரிஸ்வான் கான் மூலம் அமீர் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொண்டு அவன் குடும்பத்தினரைப் பணயக் கைதிகளாக வைத்து மிரட்டி அவன் ஒவ்வொரு அசைவையும் தீர்மானிக்கிறான் அந்த மர்ம மனிதன். இஸ்லாம் தீவிரவாதத்தைக் கைக்கொள்ள வும் பல கிரிமினல் காரியங்களைச் செய்யவும் வற்புறுத்துகிறான். அமீர் இஸ்லாம் தீவிரவாதியாக மாறினானா? அல்லது எதிர்த்துப் போராடி வென்றானா என்பதே படம்.

இஸ்லாம் தீவிரவாதக் கொள்கைக்கும், இஸ்லாத்தை அமைதியான வாழ்க்கை முறையா கக் காணும் ஒரு எளிய மனிதனின் பார்வைக்கும் இடையே நிலவும் முரண்களை அடர்த்தியான பல காட்சிகளின் மூலம் படம் பேசுகிறது

மதக் கலவரம், குண்டு வெடிப்பு, என இரத்தம் தெறிக்கும் காட்சிகளின் மூலம் தீவிர வாதத்தின் தீவிரத்தைக் காட்சிப் படுத்தாமல், சித்தாந்த ரீதியாகத் தீவிரவாதத்தை அலசியிருக் கிறார் இயக்குநர் ஆனந் கிருஷ்ணன். இது நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய திறப்பு. இரண்டாவது பாதியில்தான் பார்வையாளர்களைப் படத்தோடு ஒன்றச்செய்யும் அம்சம் உள்ளது. முதல் பாதி ஒட்டாமல் இருக்கிறது. முக்கியமான காட்சிகள் பலவும் இரண்டு கதாபாத்திரங் களிடையிலான உரையாடலா கவே அமைக்கப்பட்டிருப்பது சோர்வடையச் செய்கிறது. மர்மக் குரலோனாக வருபவரைப் பல முறை பல கோணங்களில் குளோஸ் அப்பில் காட்டுகிறார்கள். அது காட்சியின் தீவிரத்தை உணர்த்துவதற்குப் பதிலாக எரிச்சலைத்தான் வர வழைக்கிறது.

ஹீரோ விதார்த் தன் நடிப்பில் அடுத்த படியில் ஏறியிருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸில் தன் மனத் தடுமாற்றத்தைச் சிறப்பாக வெளிப்படுத்துகிறார். அந்த காட்சிக்குக் கூடுதல் பரிமாணம் சேர்க்கின்றன ஜோஹனின் பின்னணி இசையும், என்.எஸ். உதயகுமாரின் ஒளிப்பதிவும் ஒலிக்கலவையும். ஹர்திகா ஷெட்டியின் நடிப்பைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை. சிக்கிம் மாநிலத்தின் வண்ணமயமான கட்டிடங்கள், பனிப் பிரதேசங்கள், சென்னையின் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகள் ஆகிய வற்றை அவற்றுக்கேற்ற அழகிய லோடு படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

“ஜிகாத் என்பது உங்களுக்கு நீங்களே உண்மையாக இருப்பது தான்” என்ற வசனம் படத்தின் ஆதாரமான செய்தியாக மனதில் நிற்கிறது. தீவிரவாதியைக் கொல்லும் தீவிரவாதியாக இல்லாமல் தீவிரவாதத்தைக் கேள்விக்குள்ளாக்கும் உண்மை யாளனாக இருக்கும் இந்த ஆளை இன்னும் விறுவிறுப்பாக முன்னிறுத்தியிருந்தால் முழு மனதோடு வரவேற்றிருக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x