Published : 14 Jun 2019 11:54 AM
Last Updated : 14 Jun 2019 11:54 AM

நயன்தாரா அதற்குப் பொருத்தமானவர்! - தாப்சி பேட்டி

தென்னிந்தியப் படங்கள் வழியே வெளிச்சம் பெற்று, பாலிவுட்டில் நிரந்தர இடம்பிடித்துக் கொண்டவர் தாப்சி. ‘வை ராஜா வை’ படத்துக்குப் பிறகு நேரடித் தமிழ்ப் படங்கள் எதிலும் நடிக்காத தாப்சி, தற்போது ‘மாயா’ பட இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் ‘கேம் ஓவர்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களைச் சந்திக்கத் திரும்பி வந்திருக்கிறார். அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து ஒரு பகுதி..

தமிழ்ப் படங்களில் அதிகம் நடிப்பதில்லையே ஏன்?

உண்மையில் தமிழில்தான் எனக்கு அதிக வெற்றிகள் கிடைத்தன. இந்தியில் பிரபலமானவுடன் தமிழில் இருந்து நல்ல வாய்ப்புகள் வந்தன. ஆனால், தேதிகள் உடனே வேண்டும் என்றார்கள்.

அப்போது என்னால் தர இயலவில்லை. இப்போது அதற்கான சந்தர்ப்பம் அமைந்துவிட்டது. ‘கேம் ஓவர்’ திரைப்படம் என்னை மீண்டும் தமிழில் நிலைநிறுத்தும் என்று நம்புகிறேன்.

இந்தப் படத்தில் உங்களுக்குச் சவாலாக அமைந்தது என்ன?

ஒரு நடிகர் என்றால், எழுந்து நடந்து, ஓடி, குதித்து, வாகனத்தை ஓட்டி, கை, கால்களை அசைத்து உடல்மொழியை வெளிப்படுத்தி, வசனம் பேசி நடித்தால் மட்டுமே ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தை நன்றாகச் செய்தோம் என்ற திருப்பி கிடைக்கும்.

ஆனால், ‘கேம் ஓவர்’ திரைப்படத்தில் 80 சதவீதம் வீல் சேரில் உட்கார்ந்துகொண்டே நடித்திருக்கிறேன், முக அசைவுகளுக்கும் கண்களுக்கும் கைகளுக்கும் மட்டுமே அதிக வேலை இருந்தது. வீல் சேரின் சக்கரங்களைச் சுற்றிக்கொண்டே நான் நகர்ந்து கொண்டே நடிக்க வேண்டும் என்பது இன்னும் சவால்தான். இப்படியொரு கதாபாத்திரம் கிடைத்தது எனது அதிர்ஷ்டம்தான்.

“தென்னிந்தியத் திரையுலகில் என்னை அதிர்ஷ்டம் இல்லாதவள் என நினைத்தார்கள். அதையெல்லாம் கடந்து தான் இந்த அளவுக்கு வளர்ந்துள்ளேன்” என்று கூறியிருந்தீர்கள். படங்களைத் தேர்வு செய்தது நீங்கள்தானே?

படங்களின் கதையை நம்பித் தேர்வு செய்யவில்லை. அதிலிருந்து கிடைத்த தோல்விகள் வழியாகத்தான் பாடங்கள் கிடைத்தன. இப்போது அப்படியில்லை, கதைகள் நன்றாக இருந்தால் போதும், உடன் யார் நடித்தாலும் கவலைப்படுவதில்லை.

இதுதான் கதை என்று என்னிடம் கொடுக்கப்படும் புக்கில் என்ன இருக்கிறதோ, அதை எடுக்க வேண்டும் என நினைப்பேன். படப்பிடிப்புத் தளத்தில் வைத்து காட்சிகளை உருவாக்குவது, எழுதுவது எனக்குப் பிடிக்காது. எழுதியிருக்கும் காட்சியில் சிறுசிறு மாற்றங்கள் செய்வதைத் தவறு என்று சொல்ல மாட்டேன். முற்றிலுமாக மாற்றுவதுதான் பிடிக்காது

தொடக்க கால தாப்சி, தற்போதைய ‘ஸ்டார்’ தாப்சி என்ன வேறுபாடு?

தொடக்கத்தில் நடிப்பு என்றால் என்ன, திரையுலகம் எப்படி இயங்குகிறது என்று எதுவுமே தெரியாது. எனக்குத் தெரியாத மொழிகளில் நடித்தபோது நிறையவே கஷ்டப்பட்டேன். இப்போதும் தமிழ், தெலுங்கு மொழி உச்சரிப்புகள் எனக்குப் பிடிபடவே இல்லை. அதனால் எனது தென்னிந்தியப் படங்களுக்கு என்னால் ‘டப்பிங்’ செய்ய முடிவதில்லை.

பின்னர் இந்தியில் தொடர்ந்து நடிக்கத் தொடங்கியபோதுதான் வசன உச்சரிப்புக்கான முக்கியத்துவம், எவ்வளவு நடிக்க வேண்டும் என்பதையெல்லாம் தெரிந்து கொண்டேன். இப்போதிருக்கும் தாப்சிக்கு நடிப்பின் பின்னால் உள்ள உழைப்பு நன்கு தெரியும். அதேநேரம் என்னை நான் ‘ஸ்டார்’ என்று கருதிக்கொள்வதில்லை.

‘லேடி சூப்பர் ஸ்டார்’ பட்டத்தை நயன்தாராவுக்கு ரசிகர்கள் கொடுத்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தென்னிந்தியாவில் அவர் நடிக்கும் படங்களுக்கு ‘ஓப்பனிங்’ இருப்பதால்தான் அவருக்கு அந்தப் பட்டம் கிடைத்திருக்கிறது. அந்தப் பட்டத்துக்கு அவர் பொருத்தமான நடிகைதான். அவருக்கு அது உடனே கிடைத்துவிடவில்லை. நடிக்க வந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகே அவருக்கு அந்தப் பட்டம் கிடைத்திருக்கிறது.

திடீரென்று ‘7 அக்ஸஸ்’ பாட்மிண்டன் அணியை நீங்கள் வாங்கியிருப்பதன் பின்னணி என்ன?

எனக்கு எப்போதுமே விளையாட்டில் ஆர்வமுண்டு. பாட்மிண்டன் நிறையவே பிடிக்கும். இப்போது என்னால் விளையாட்டு வீராங்கனையாக முடியாது. அதனால் ஒரு அணியை வாங்கி நிர்வகித்து வருகிறேன். அந்த அணி என் குழந்தை மாதிரி. இப்போதும் பலர் ஏன் அந்த அணியை வைத்துள்ளேன் என்று நினைக்கிறார்கள்.

பாட்மிண்டன் விளையாட்டுக்கு இந்தியாவில் நிறைய முக்கியத்துவம் தர வேண்டி உள்ளது. உலகத்தரம் வாய்ந்த பாட்மிண்டன் வீரர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்கான எனது சிறிய முயற்சி என்று சொல்லலாம்.

‘பிங்க்' இந்திப் பட வெற்றிக்குப் பிறகு உங்களது திரையுலக வாழ்க்கை எந்த அளவுக்கு மாறியுள்ளது, அது தமிழில் மறு ஆக்கம் செய்யப்பட்டுவருவது பற்றித் தெரியுமா?

‘பிங்க்' படத்துக்குப் பிறகு எந்த பாதையில் செல்ல வேண்டும் என்ற தெளிவு கிடைத்துள்ளது. எனது திரையுலக வாழ்க்கையை மாற்றிய படம் அது. அதன் தமிழ் மறு ஆக்கத்தில் அஜித் சார் நடிப்பதைக் கேள்விப்பட்டு மகிழ்ந்தேன்.

அதைக் காண ஆவலாக உள்ளேன். தமிழ் மறு ஆக்கத்தில் நடிக்க என்னை அணுகவில்லை. அப்படி அணுகியிருந்தாலும் நான் நடித்திருக்க மாட்டேன். நடித்த கதாபாத்திரங்களில் மீண்டும் நடிக்க நான் விரும்புவதில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x