Last Updated : 12 Jun, 2019 02:16 PM

 

Published : 12 Jun 2019 02:16 PM
Last Updated : 12 Jun 2019 02:16 PM

வாழ்ந்து காட்டுவோம் 09: சாதி மறுப்புத் திருமணத்துக்கு மரியாதை!

இந்தியச் சட்டப்படி 21 வயது நிரம்பிய ஆணும் 18 வயது நிரம்பிய பெண்ணும் தங்களது வாழ்க்கைத் துணையைத் தாங்களே நிர்ணயிக்கக் கூடிய சட்ட உரிமை பெற்றவர்கள். ஆனாலும், இந்தச் சமுதாயம் காலம் காலமாக வகுத்துவைத்திருக்கும் சாதிய வழிமுறை களே பெரும்பாலான கிராமப்புறங்களில் பெண் களின் திருமணத்தை முடிவுசெய்கின்றன.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றாலும் சமுதாயம் அதை இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைத்தான் சாதி ஆணவக் கொலைகள் உணர்த்துகின்றன. சமுதாயத்தில் சாதி, மத, இன பாகுபாட்டைக் களைந்து சமமான நிலையை உருவாக்கத் தமிழக அரசு மேற்கொண்ட முயற்சியின் விளைவுதான்  ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி  நினைவு கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம்’. அரசு அளிக்கும் பாதுகாப்புடன் திருமணம் செய்துகொள்ளும் மணமக்களுக்கு இந்தத் திட்டம் மிகப் பெரிய வரப்பிரசாதமாக விளங்கிவருகிறது.

இத்திட்டத்தின் சிறப்பு அம்சங்களாக இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று, மணமக்களுக்கு வருமான உச்ச வரம்பு இல்லை என்பதால், வருமானச்சான்று தேவையில்லை. இரண்டாவதாக, திருமணம் முடிந்து இரண்டு ஆண்டு களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அவகாசம் அளித்திருப்பது அரசின் சிறந்த தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்துகிறது. என்ன காரணம் என்றால், சாதி மறுப்புத் திருமணங்களில் பெரும்பாலானவை காதல் திருமணங்கள்தாம்.

பெற்றோரை எதிர்த்து அவர்களுக்குத் தெரியாமல் வீட்டைவிட்டு வெளியேறித்தான் திருமணம் செய்துகொள்கிறார்கள். அந்த அவசரத்தில் கல்விச்சான்று, சாதிச்சான்று, இருப்பிடச்சான்று போன்ற வற்றையெல்லாம் எடுத்துக்கொண்டு செல்ல முடியாதல்லவா? இந்தக் கலப்புத் திருமண நிதி உதவி பெறுவதற்குச் சாதிச்சான்று அவசியம்.

இதை எளிதில் வாங்கிவிட முடியாது. அதற்கு ஆதாரச் சான்றாக அவர்களின் பெற்றோரின் சாதிச்சான்று தேவைப்படுகிறது. ஏற்கெனவே வீட்டை எதிர்த்துத் திருமணம் செய்துகொண்டவர்களுக்குப் பெற்றோரின் ஆதரவு எப்படிக் கிடைக்கும்? ஆனால், திருமணம் முடிந்த கையோடு அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்துவிட்டால், “சரி போ… நடந்தது நடந்துவிட்டது. பேரக்குழந்தையைப் போய்ப் பார்ப்போம்” என்று பாசத்துடன் இறங்கிவரும் பெற்றோர்கள் அதிகம்.

அப்போதுதான் மணமக்களுக்கும் கொஞ்சம் தைரியம் வந்து தங்களின் கல்விச்சான்று, சாதிச்சான்று, இருப்பிடச்சான்று ஆகியவற்றையெல்லாம் வாங்க முடிகிறது. இதற்கு இரண்டு ஆண்டுகளாவது ஆகும் என்று யோசித்துத்தான் திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்குள் திருமண நிதி உதவி பெற விண்ணப்பிக்கும் காலத்தை அரசு நிர்ணயித்துள்ளது.

மறந்துபோன திருமண தேதி

ஒருமுறை கலப்புத் திருமணத் தம்பதிகளுக் கான நிதியுதவியாக, காசோலையையும் தேசிய சேமிப்பு பத்திரத்தையும் பெறுவதற்காக ஒரு தம்பதி எங்கள் அலுவலகத்துக்கு வந்திருந்தனர். பொதுவாக ஒரு சில கேள்விகளைக் கேட்டு உரிய பதிலைப் பெற்ற பின்னரே காசோலையை வழங்குவோம். அதுபோல அந்தப் பெண்ணிடம் அவர்களின் திருமணத் தேதியைக் கேட்டேன்.

அதற்கு அவளால் பதில் சொல்ல முடியாமல், “மாமா இங்க வந்து அம்மாகிட்ட நம்ம கல்யாணத் தேதியைச் சொல்லுங்க” என்று சத்தமாகச் சொன்னார். அவருடைய கணவனும் வந்து திருதிருவென முழிக்கிறாரே தவிர சரியான தேதியைச் சொல்லவில்லை. பொறுமையாக உட்கார்ந்து யோசித்துப் பார்த்துத் தேதியைச் சொல்லச் சொன்னேன்.

அரைமணி நேரம் கழித்து இருவரும் வந்து, “அம்மா, தாலி கட்டிய தேதி மறந்துவிட்டது. ஆனால், வீட்டைவிட்டுப் போன நாள் நினைவிருக்கு. போன வருஷம் தை மாசம் அமாவாசை நாளில் இருட்டில்தான் கிளம்பினோம்” என்றனர். கல்யாண நாளையே மறந்துவிட்ட இவர்கள் வாழ்க்கை எப்படி இருக்குமோ என்ற கவலை எங்களுக்கு வந்தது.

தேசிய சேமிப்புப் பத்திரத்தின் முதிர்வுத்தொகை எட்டு ஆண்டுகள் கழித்து இருவரும் சேர்ந்து கையெழுத்துப் போட்டால்தான் பெற முடியும் என்பதால் அதுவரை யாவது இருவரும் குழந்தையோடு நல்லபடியாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறி காசோலை யையும் தேசிய சேமிப்புப் பத்திரத்தை யும் கொடுத்து அனுப்பினோம்.

திட்டத்தின் நோக்கம்

சமுதாயத்தில் சாதி, மத, இன பாகுபாட்டைக் களைந்து சமமான நிலையை உருவாக்குதல்.

பயன்பெறுவதற்கான தகுதிகள்:

கீழ்க்கண்ட இரண்டு வகையான கலப்புத் திருமணங்கள் நிதியுதவி பெறத் தகுதியானவை.

பிரிவு 1

புதுமணத் தம்பதியரில் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினராக இருந்து, பிற இனத்தவரை மணந்துகொண்டால் நிதியுதவி வழங்கப்படும்.

பிரிவு 2

புதுமணத் தம்பதியரில் ஒருவர் முற்பட்ட வகுப்பினராகவும் மற்றவர் பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவும் இருந்தால் நிதியுதவி வழங்கப்படும்.

பொது

1. வருமான வரம்பு இல்லை.

2. திருமணத் தேதியன்று மணமகளுக்கு 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு இல்லை.

3. கல்வித்தகுதி கட்டாயம் இல்லை.

வழங்கப்படும் உதவி

திட்டம் 1

ரூ.25,000 வழங்கப்படுகிறது. (ரூ.15,000 காசோலையாகவும் ரூ.10,000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும்). தாலி செய்வதற்காக 23.5.2016 முதல் ஒரு சவரன் (8 கிராம்)

22 காரட் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.

திட்டம் 2

(பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு படித்திருந்தால்)

ரூ.50,000 வழங்கப்படுகிறது. (ரூ.30,000 காசோலையாகவும் ரூ.20,000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கப்படும்). தாலி செய்வதற்காக 23.5.2016 முதல் ஒரு சவரன் (8 கிராம்)22 காரட் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.

சமர்ப்பிக்க வேண்டிய சான்றுகள்

திட்டம்  1

திருமணப் பத்திரிகை அல்லது திருமணப் பதிவுச்சான்று.

மணமகன், மணமகள் இருவரின் சாதிச்சான்று.

மணப்பெண்ணின்

வயதுச் சான்று.

திட்டம் 2

பட்டதாரிகள் கல்லூரியிலோ தொலைதூரக்கல்வி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளிப் பல்கலைக் கழங்களி்லோ தேர்ச்சிபெற்ற சான்றிதழ்களின் நகல்கள்.

பட்டயப் படிப்பு படித்தவர்கள் தமிழக அரசின் தொழில் நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்துத் தேர்ச்சிபெற்ற சான்றிதழ்களின் நகல்கள்.

விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு

திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தொடர்புகொள்ள வேண்டிய அலுவலர்கள்

மாவட்ட அளவில் - மாவட்டச் சமூக நல அலுவலர்கள்.

வட்டார அளவில் - விரிவாக்க அலுவலர்கள் (சமூக நலம்)

 

(உரிமைகள் அறிவோம்)
கட்டுரையாளர், மாநில அளவிலான சிறப்புப் பயிற்றுநர்
தொடர்புக்கு: somurukmani@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x