Published : 27 Mar 2018 13:38 pm

Updated : 29 Mar 2018 11:12 am

 

Published : 27 Mar 2018 01:38 PM
Last Updated : 29 Mar 2018 11:12 AM

கேள்வி நேரம் 28: முறியடிக்க முடியாத நாடக சாதனை

28

1. உலக நாடக நாள் 1961-ம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச நாடக நிறுவனம் இந்த நாளைக் கொண்டாடிவருகிறது. ஐ.நா.வின் பண்பாட்டுப் பிரிவான யுனெஸ்கோவால் 1948-ல் சர்வதேச நாடக நிறுவனம் உருவாக்கப்பட்டது. உலக நாடக நாளைக் கொண்டாட மார்ச் 27 தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணம் என்ன?

2. புகழ்பெற்ற பெண் துப்பறியும் நாவல் எழுத்தாளர் அகதா கிறிஸ்டியின் பிரபல கதை ‘தி மவுஸ்டிராப்’. 1952 நவம்பர் 25 அன்று நாடகமாக அரங்கேற்றப்பட்ட இந்தக் கதையே உலகில் மிக அதிக நாட்களாக நடத்தப்பட்டுவரும் நாடகம் என்னும் பெருமையைப் பெற்றிருக்கிறது. 66 ஆண்டுகளாக இன்றைக்கும் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் இந்த நாடகம் ஏற்படுத்திய சாதனையை, எதிர்காலத்தில்கூட வேறு எந்த நாடகமும் முறியடிக்க முடியாது என்றே தோன்றுகிறது. லண்டனில் புகழ்பெற்ற வெஸ்ட் எண்ட் அரங்கில் எத்தனை ஆயிரம் காட்சிகளை இந்த நாடகம் கடந்திருக்கிறது?

3. அகதா கிறிஸ்டி எழுதிய ‘By the Pricking of My Thumbs’, ரே பிராட்பரி எழுதிய ‘Something Wicked this Way Comes’, வில்லியம் ஃபாக்னர் எழுதிய ‘The Sound and the Fury’ ஆகிய நாவல் தலைப்புகள் புகழ்பெற்ற ஒரு நாடக வரிகளில் இருந்து எடுக்கப்பட்டவை. அந்த வரிகள் இடம்பெற்ற நாடகம் எது, அந்த நாடகத்தை எழுதியது யார்?

4. உலகின் தலைசிறந்த நாடக ஆசிரியர், கவிஞர், ஆங்கிலத்தின் தலைசிறந்த எழுத்தாளராகவும் மதிக்கப்படுபவர் வில்லியம் ஷேக்ஸ்பியர். இங்கிலாந்தின் தேசியக் கவியாக மதிக்கப்படும் இவர் ஒரு நாடக நடிகரும்கூட. உலகின் அனைத்து முதன்மை மொழிகளிலும் அவருடைய நாடகங்கள், கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாகக் கணக்கிட்டால் உலகில் வேறு எவரையும்விட இவருடைய நாடகங்களே அதிகம் நிகழ்த்தப்பட்டுள்ளன. அவர் எழுதிய மொத்த நாடகங்கள் எத்தனை?

5. லண்டனில் உள்ள ‘வெஸ்ட் எண்ட் அரங்கு’ நாடகம் நடத்துவதற்காக உலகப் புகழ்பெற்றது. அதேநேரம் ஆங்கிலம் பேசும் நாடுகளிடையே உலகில் மிகப் பெரிய வணிக நாடக அரங்காகக் கருதப்படுவது ‘பிராட்வே அரங்கு’ - சுருக்கமாக பிராட்வே. இங்கு மொத்தம் 41 நாடக அரங்குகள் உள்ளன. ஒவ்வோர் அரங்கிலும் 500 பேருக்கு மேல் அமரலாம். இந்த அரங்கம் எந்த நாட்டில், எந்தப் பகுதியில் உள்ளது?

6. இந்திய நாடக ஆசிரியரான அவர் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ‘ரோட்ஸ் நிதிநல்கை’ உதவியுடன் படித்தவர். அந்தக் காலத்திலேயே தனது முதல் நாடகமாக புராண அரச கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட ‘யயாதி’யை எழுதிவிட்டார். அவருடைய அடுத்த நாடகம் மத்திய கால இந்தியாவில் பிரபலமாக இருந்த இஸ்லாமிய மன்னனை மையமாகக் கொண்டது. தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ள கர்நாடகத்தைச் சேர்ந்த இந்த நாடக ஆசிரியர், ஓர் இயக்குநரும்கூட. அவருடைய பெயரையும் நாடகத்தின் பெயரையும் கண்டுபிடிக்க முடிகிறதா?

7. புனேயைச் சேர்ந்த ஊழல் கறை படித்த ஒரு காவல்துறை தலைவர், உள்ளூர் அரசியல்வாதி ஒருவரிடம் ஒரு சலுகையைப் பெறுவதற்காக தன் மகளையே கொடுத்ததை மையமாகக் கொண்டு 1972-ல் எழுதப்பட்ட நாடகம் அது. மகாராஷ்டிர அரசியலில் மதப் பிரிவினைவாதிகளின் ஆதிக்கத்தை உருவகமாக வைத்து எழுதப்பட்ட அந்த நாடகம் ‘காஷிராம் கோத்வால்’. இந்த நாடகத்தை எழுதிய புகழ்பெற்ற நாடக ஆசிரியர் யார்?

8. ‘நீல தர்ப்பணம்’ என்ற புகழ்பெற்ற 19-ம் நூற்றாண்டு வங்க நாடகம், வங்கத்தில் வாழ்ந்த அவுரி சாயத் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதை மையமாகக் கொண்டது. இந்த நாடகத்தை ஆங்கில வடிவத்தில் வெளியிட்ட பாதிரியார் ஜேம்ஸ் லாங் அவதூறு வழக்கில் சிக்கினார். ‘நீல தர்ப்பணம்’ நாடகத்தை வங்கத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யாரென்று கருதப்படுகிறது?

9. கேரளத்தின் பண்டைய நாடக வடிவங்களில் ஒன்று ‘கூடியாட்டம்’. இதற்கான கதைகள் புராணங்களில் இருந்து எடுத்தாளப்படுகின்றன. மனித குலத்தின் தலைசிறந்த மரபு, குரல் சார்ந்த கலை வடிவங்களில் ஒன்றாக கூடியாட்டத்தை எந்தச் சர்வதேசப் பண்பாட்டு அமைப்பு அங்கீகரித்து இருக்கிறது?

10. நாடகத்தில் தோன்றும் நடிகர்கள் ஏதாவது ஒரு கட்டத்தில் ஒரு படம்போலவோ அல்லது உறைந்த நிலையிலோ நகராமல் இருப்பதை ஆங்கிலத்தில் எப்படிக் குறிப்பிடுகிறார்கள்?

விடைகள்:

1. பாரிஸில் பன்னாட்டு நாடக விழா 1962 மார்ச் 27 அன்று தொடங்கியது.

2. 27,000 காட்சிகள்

3. மேக்பெத், வில்லியம் ஷேக்ஸ்பியர்.

4. 39

5. நியூயார்க் நகரில் மிட்டவுன் மான்ஹாட்டன் பகுதியில்

6. கிரிஷ் கர்னாட், துக்ளக்

7. விஜய் டெண்டுல்கர்

8. மைக்கேல் மதுசூதன தத்தர்

9. யுனெஸ்கோ

10. Still image / Freeze Frame / Tableaux

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author