Published : 12 Mar 2018 11:40 AM
Last Updated : 12 Mar 2018 11:40 AM

பழைய புல்லட் வாங்க `வின்டேஜ்’ விற்பனையகம்

பு

ல்லட் – பைக் பிரியர்களை கட்டிப் போடும் மந்திரச் சொல். காலம் காலமாய், இந்திய சாலைகளில் குறிப்பாக இருசக்கர வாகன உலகில் கம்பீரமாய் வலம் வரும் ராயல் என்பீல்டின் புல்லட்டுக்கு நிகர் எதுவுமில்லை.

இன்றுவரை இதே அளவு குதிரைத் திறன் அல்லது இதற்கும் அதிகமான குதிரைத் திறன் கொண்ட வாகனங்கள் சந்தைக்கு வந்தாலும், தனது இடத்தை யாராலும் அசைக்க முடியாது என வலிமையான இடத்தில் கம்பீரமாக ஆட்சி செய்யும் ஒரே வாகனம் புல்லட்தான். வாகனத்தின் எடையை மட்டும் வைத்து இதை எடை போட்டுவிடக் கூடாது. எடை அதிகம் என்பதால் மட்டுமல்ல, இதன் செயல்பாடுகளும் அபாரமாக இருப்பதால்தான் இன்றைய இளம் தலைமுறையினரையும் இது கவர்ந்துள்ளது.

அந்தக் காலத்து ஜமீன்தார், பண்ணையார்களுக்கும் புல்லட். காவல்துறை, ராணுவத்தினரின் தேர்வும் புல்லட்தான். இப்போது இளம் தலைமுறையினருக்கேற்ப கிளாசிக் மற்றும் தண்டர்பேர்டாக உருமாறி ஈர்த்து வருகிறது. இருந்தாலும் பழைய மோட்டார் சைக்கிள் அதிலும் குறிப்பாக என்பீல்டு தயாரிப்புகளின் மீதான ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது.

ஜெர்மன் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து 50 சிசி திறனில் வெளியிட்ட எக்ஸ்புளோரர் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டரைப் போல இடது கை பகுதியில் கியர் உள்ள சில்வர் பிளஸ் ஆகியவற்றை இப்போதைய தலைமுறையினர் யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது.

அனைத்துக்கும் மேலாக வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் தனுஷ் ஓட்டி வரும் என்பீல்ட் ஏரோ (மோஃபா) மிகவும் பிரசித்தம். இந்த வாகனங்களை வைத்திருப்போர் அதற்குரிய உதிரி பாகங்கள் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.

இதேபோல ராயல் என்பீல்டு 350 சிசி திறனில் வந்தபோது அதில் டீசல் என்ஜின் உள்ள மோட்டார் சைக்கிளும் பிரசித்தம். இதற்கு அடுத்து மினி புல்லட் என்ற பெயரில் 200 சிசி திறனில் இந்நிறுவனம் க்ருசேடர் என்ற பெயரிலான மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியது. ஆனால் இவையெல்லாம் இப்போது கிடையாது.

இவற்றை விரும்புவோர் அல்லது இவற்றை விற்றுவிட்டு புதிய மோட்டார் சைக்கிள் வாங்குவோருக்கு புதிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது வின்டேஜ். ஆம் என்பீல்டு நிறுவனத்தின் முந்தைய தயாரிப்புகளை பழமை மாறாமல் புதுப்பித்து தரும் பணியை இந்நிறுவனமே மேற்கொண்டுள்ளது. இதற்காக சென்னையில் வேளச்சேரி பகுதியில் வின்டேஜ் விற்பனையகத்தை தொடங்கியுள்ளது இந்நிறுவனம். ஏற்கெனவே உள்ள நிறுவன விற்பனையகத்தின் விரிவாக்கமாக இது இருந்தாலும், பழைய வாகனங்களுக்கு இங்கு புத்துயிர் அளிக்கப்படும்.

நடப்பு ஆண்டில் இதுபோன்ற 10 விற்பனையகங்களை பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் தொடங்க உள்ளதாக நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு தலைவர் ஷாஜி கோஷி தெரிவித்தார்.

இந்த வின்டேஜ் விற்பனையகத்தில் பழைய வாகனத்தை புதுப்பித்துத் தருவது, புதுப்பித்த வாகனத்தை விற்பது, புராதன வாகனங்களை அவற்றின் பழமை மாறாமல் மாற்றித் தருவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இவை அனைத்துமே தர உத்தரவாதத்துடன் மேற்கொள்ளப்படும். புதுப்பிக்கப்பட்ட பழைய வாகனங்களுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இதுபோன்ற வின்டேஜ் விற்பனையகத்தைத் தொடங்கலாம் என முடிவு செய்யப்பட்டதாக அவர் கூறினார். ஏறக்குறைய 30 லட்சம் ராயல் என்பீல்டு தயாரிப்புகள் சாலைகளில் வலம் வருகின்றன. இவற்றில் ஆரம்பகால தயாரிப்புகளும் அடங்கும்.

இ-புல்லட்:

இப்போது பேட்டரியில் இயங்கும் புல்லட்டை உருவாக்குவது குறித்தும் இந்நிறுவனம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. ஐஷர் நிறுவனம் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து தீவிரமாக செயலாற்றி வருகிறது. அவற்றில் பேட்டரி புல்லட் தயாரிப்பும் ஒன்று என்று நிறுவனத்தின் தலைவர் ருத்ரதேஜ் சிங் தெரிவித்துள்ளார். உரிய சமயத்தில் இதுகுறித்த அறிவிப்பை நிறுவனம் நிச்சயம் வெளியிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நிறுவனம் தொடர்ந்து புதிய அறிமுகங்களை உருவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த அவர், சமீபத்தில் தண்டர்பேர்டு எக்ஸ் மாடல் 350 சிசி மற்றும் 500 சிசியில் வெளியிடப்பட்டதாகவும் கூறினார். சமீப காலமாக ராயல் என்பீல்டு தயாரிப்புகள் மீதான ஈர்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. 7 ஆண்டுகளில் இந்நிறுவனம் 7.52 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. சராசரியாக ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாகனங்களை இந்நிறுவனம் விற்றுள்ளது. இதற்கு முன்பு 2010ம் ஆண்டில் நிறுவனத்தின் வாகன விற்பனை ஆண்டுக்கு 50 ஆயிரம் என்ற அளவிலேயே இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x