Last Updated : 16 Mar, 2018 11:34 AM

 

Published : 16 Mar 2018 11:34 AM
Last Updated : 16 Mar 2018 11:34 AM

குரு - சிஷ்யன்: தாய்மையின் வடிவம்!

செ

ன்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் 1987-ல் பேராசிரியராகச் சேர்ந்த நான், 2017-ல் ஓய்வு பெற்றேன். இக்கல்லூரியில் 30 ஆண்டுகள் தூர தேசத்து மொழியில் பேசும் பெண்களுக்குத் தமிழ் கற்பித்து, இதுவரை பட்டதாரிகள் 6 ஆயிரம் பேரைத் தாய்மொழி வழிக் கல்வி பயில்கிற அரிய வாய்ப்புக்குள் கொண்டு வந்தேன். இத்தனை ஆண்டுகளில் 2013-ல் ஆண்டு இளங்கலைச் சமூகவியல் படிக்கவந்த ப்ரீத்தி சரவணன் என்பவளே இன்றைக்கும் என் உள்ளம் கவர்ந்த மாணவி.

இந்த மாணவி இரண்டாமாண்டில் படித்தபோது அவளுக்கு நான் வாழ்க்கைக் கல்வியையும்; ‘வாருங்கள் மேடை பேச்சாளராகலாம்’ என்ற பயிற்சி வகுப்பையும் எடுத்தேன். இந்த மாணவிக்குப் பிறவியிலேயே சிறிது பார்வைக் குறைபாடு உண்டு. ஆனால், ஒருபோதும் மனம் தளராதவள். வாழ்க்கை நடத்துவதற்கான நம்பிக்கை, என் தமிழ் வகுப்பில் அதிகம் கிடைத்ததாக அடிக்கடி என்னிடம் அவள் கூறுவாள். வாழ்க்கைக் கல்வி பயில வந்த அந்த மாணவிக்கும் எனக்கும் இடையிலான உறவு நெருக்கமானது.

திருத்தணிக்கு அருகில் உள்ள ஒரு சிற்றூரில் இந்த மாணவி பிறந்ததால், எங்கள் கல்லூரி விடுதியில் தங்கியே படித்தாள்.

அவளுக்குப் பேராசிரியராக இருந்து கற்பித்த என்னைத்தான், அவரது வாழ்க்கைக்கு புது அர்த்தமளித்த நம்பிக்கை நட்சத்திரம் என்று அடிக்கடி கூறுவாள். விடுதியில் இருப்பதால், தன் தந்தையைப் பிரிந்திருக்கும் வருந்தத்தோடு இருப்பாள். அப்பாவுக்கு இவள்தான் செல்லக் குழந்தை. அப்பொழுதெல்லாம் நான் ப்ரீத்தியை அழைத்து, அவரிடம் அன்பின் விசாரிப்புகளையும் கல்வியின் முக்கியத்துவத்தையும் குறித்துப் பேசுவேன்.

gs (2) ஓவியம்: வாசன் right

ஒரு முறை கல்லூரி மாணவிகளோடு கல்விச் சுற்றுலா சென்றிருந்தபோது, எனக்கு ஒரு சிறு விபத்து ஏற்பட்டது. என் வலது கால் விரல்களில் எலும்பு முறிந்தது. மூன்று மாதக் காலம் ஓய்வில் இருந்தேன். காலில் போடப்பட்ட கட்டினைப் பிரிக்கிறவரை 90 நாட்களும் காலையில் 8 மணிக்கெல்லாம் என் வீட்டுக்கு வந்துவிடுவாள். ‘கால் வலி குறைந்துவிட்டதா?’ என்று நலம் விசாரித்துவிட்டுதான் ப்ரீத்தி செல்வாள். அவளது அக்கறை என் தாய் உயிருடன் இல்லையே என்கிற கவலையைப் போக்கும் மருந்தாக எனக்கு அமைந்தது.

குருவாகிய எனக்கு எந்தத் துன்பம் நேரிட்டாலும், அத்துன்பம் ஆசிரியர் இனத்திற்கே வந்ததாக வருந்துவாள். கம்ப நாடகத்தை நான் வகுப்பறையில் காட்டும் காட்சியில் ஒன்றிப்போன என் மாணவி ப்ரீத்தி, என் தமிழ் வழிக்கல்வி மூலமாக ஆளுமைத் திறன் பெற்றதால், மேற்படிப்பு (முதுகலை படிப்பு) தமிழ் பட்டதாரியாகத்தான் பயில வேண்டும் என்று முடிவெடுத்தாள். இன்று எத்திராஜ் மகளிர் கல்லூரியில் தமிழ் இலக்கியம் முதுகலை படிக்கிறாள். தந்தையின் பிரிவு அவளை வாட்டக் கூடாது என்பதற்காக இன்றும் அடிக்கடி சென்று, அவளைச் சந்தித்துப் பேசுகிறேன்.

என் வாழ்க்கையின் வலிகளை, என் உள்ளத்து ரணங்களை அவளோடு கலந்து நான் உரையாடும் பொழுதெல்லாம், என் தாய் இந்த மாணவியின் உருவத்தில் என் அருகில் உட்கார்ந்திருப்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்படும். நான் எப்போதும் அடுத்தவரை குறை கூறும் பழக்கம் இல்லாதவள். என்னிடத்தில் பழகிய காரணத்தால் ப்ரீத்தியும் பழகும் விதம், பண்பாட்டை மீறாத உறவு, நல்லதைப் பேசும் வலிமை ஆகியவற்றை இயல்பாக கொண்டாள். அவள் படித்தக் கல்லூரி நாட்களில் ஒரு நாள்கூட அவளை நான் சந்திக்காத நாளில்லை.

‘யாதும் ஊரே.. யாவரும் கேளிர்..’ என்ற கனியன் பூங்குன்றனின் புறநானூற்று வரிகளுக்கேற்ப, எல்லோரையும் தன் உறவாக, தன் சுற்றமாக நேசிக்கும் இந்த மாணவியை நான் இன்றளவும் என் நினைவில் வைத்து பாதுகாத்து மகிழ்கிறேன். ஸ்டெல்லா மேரி கல்லூரி வளாகத்தில் உலகப் புகழ்ப் பெற்ற பெண்மணிகள் உலா வர வேண்டும் என்பதில் அதிக அக்கறை செலுத்தியவள் நான். அதே நேரத்தில் பண்பின் பெட்டகமாக மாணவிகள் உருவாக வேண்டும் என்பதில் மிகுந்த பொறுப்பையும் கடமையையும் செலுத்தியவள். அந்த உணர்வில் தாய்மையின் வடிவமாக எனக்குக் கிடைத்த மாணவிதான் ப்ரீத்தி சரவணன்.

மாதா, பிதா, குரு என்ற சொற்றொடர் உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை. ஏன் தெரியுமா? இவர்கள் மூவர் தான் தெய்வத்தின் அருள்நிலைக்கு நம்மை அழைத்துச் செல்பவர்கள். அந்த வகையில் எனக்குத் தாயாகவும், என் மாணவிக்கு நான் ஒரு தந்தையாகவும் அமைந்த நிலை, என் கல்விப் பணியில் என்றும் அழியா கல்வெட்டாகப் பதிந்திருக்கும்.

கட்டுரையாளர்: முன்னாள் தலைவர், தமிழ்த் துறை,
ஸ்டெல்லா மேரி கல்லூரி, சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x