Published : 12 Mar 2018 11:39 AM
Last Updated : 12 Mar 2018 11:39 AM

ஆந்திரா, தெலங்கானாவில் மோட்டார் சைக்கிள் ஆலை அமைக்கசுஸுகி நிறுவனம் தீவிரம்

ப்பானைச் சேர்ந்த சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்தியாவில் இரண்டாவது மோட்டார் சைக்கிள் ஆலை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் அதிகரித்து வரும் இருசக்கர வாகன விற்பனையை ஈடு செய்ய மேலும் ஒரு ஆலை அவசியம் என்று நிறுவனம் கருதுகிறது. இந்நிறுவனத்துக்கு ஹரியாணா மாநிலம் குருகிராமில் ஒரு ஆலை உள்ளது. இந்த ஆலை 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்டது.

இரண்டாவது ஆலை அமைப்பதற்கான முடிவுக்கு இயக்குநர் குழு கொள்கை அடிப்படையில் ஒப்புதல் அளித்துவிட்டது. இதனால் இடத்தை தேடும் பணியில் இந்நிறுவன தலைமை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தென் மாநிலங்களில் அமைப்பது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும் குறிப்பாக சலுகைகளை அதிகம் அளிக்க தயாராக உள்ள தெலங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் ஏதேனும் ஒன்றில் ஆலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை நிர்வாகம் ஆராய்ந்து வருவதாக நிறுவனத்தின் செயல்துணைத் தலைவர் சஞ்ஜீவ் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.

தற்போது உள்ள ஆலை அதன் முழு உற்பத்தி அளவை எட்டி விட்டது. இந்த ஆலையிலேயே இரண்டாவது பிரிவை ஏற்படுத்துவதை விட புதிய ஆலை தொடங்குவது பல வழிகளில் பயனுள்ளதாக இருக்கும் என்பதாலேயே புதிய ஆலைக்கான இடம் தேடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தற்போது வட மாநிலத்தில் முதலாவது ஆலை செயல்பட்டு வரும் நிலையில் தென் மாநிலத்தில் ஒரு ஆலை அமைப்பது உத்தி அடிப்படையில் சிறந்த முடிவாக இருக்கும் என நிறுவனம் கருதுகிறது. ஏற்கெனவே கியா மோட்டார்ஸ், இஸுஸு, அப்பல்லோ டயர்ஸ், அமர ராஜா பேட்டரீஸ் மற்றும் ஹீரோ மோட்டோ கார்ப் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆந்திர மாநிலத்தில் ஆலை அமைத்துள்ளன. இதனால் தெலங்கானாவை விட ஆந்திர மாநிலத்தில் ஆலை அமைக்க இந்நிறுவனம் முன்னுரிமை அளிக்கும் என்று தோன்றுகிறது.

சுஸுகி நிறுவனத்தைப் பொறுத்தமட்டில் ஏற்றுமதியிலும் கவனம் செலுத்தும் இதனால் துறைமுக வசதி உள்ள பகுதியை இந்நிறுவனம் தேர்வு செய்யும். அந்த வகையில் ஆந்திர மாநிலத்தை தேர்வு செய்தால் விசாகப்பட்டினம் மற்றும் சென்னை துறைமுகத்தை இந்நிறுவனம் பயன்படுத்த முடியும். சுஸுகி நிறுவனம் 1980ம் ஆண்டில் டிவிஎஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து இரு சக்கர வாகனத்தைத் தயாரித்து வந்தது. இரு நிறுவனங்களிடையிலான கூட்டணி 2001-ம் ஆண்டில் முறிந்தது. அதன் பிறகு சுஸுகி தனியாக ஆலை அமைத்து தற்போது ஆண்டுக்கு 7 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. 2020-ம் ஆண்டுக்குள் 10 லட்சம் வாகன விற்பனை இலக்கை எட்ட திட்டமிட்டுள்ளது.

இந்நிறுவனம் ஸ்கூட்டர் விற்பனையில் முன்னணிக்கு உயர்ந்த போதிலும் மோட்டார் சைக்கிள் விற்பனையில் பின்னடைவை சந்தித்து வந்தது. பிரீமியம் மோட்டார் சைக்கிளாக ஜிக்ஸர் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு சுஸுகி மோட்டார் சைக்கிளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டது. இதனால் பிரீமியம் மோட்டார் சைக்கிளில் கவனம் செலுத்த இந்நிறுவனம் முடிவு செய்தது. புதிய ஆலையில் பிரீமியம் மோட்டார் சைக்கிள் உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிகிறது. சர்வதேச அளவில் பிரபலமாக விளங்கும் நிறுவனத்தின் பிரீமியம் ரக மோட்டார் சைக்கிளை படிப்படியாக இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் நிர்வாக பொதுமேலாளர் மஸாஹிரோ நிஷிகாவா தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு நிறுவனமாக இருந்தாலும் சரி, உள்நாட்டு தயாரிப்பாக இருந்தாலும் சரி, தரமானதாக இருந்தால் மட்டுமே இந்திய சந்தையில் நிலைத்து நிற்க முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x