Published : 09 Mar 2018 09:51 AM
Last Updated : 09 Mar 2018 09:51 AM

வணிக நூலகம்: அனைத்தையும் பெற்றுத்தரும் அற்புத திறன்கள்!

நா

ம் யார்? நமது உத்தியோகம் என்ன? நமது பின்னணி என்ன? என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. இவற்றையெல்லாம் தாண்டி, சில தனிப்பட்ட திறன்களின் மூலமாக நம்மால் எவ்வளவு உயரத்திற்கும் செல்ல முடியும். நமது தொழில், வேலை, குடும்பம் மற்றும் வாழ்க்கை என அனைத்திலும் நாம் விரும்பியதற்கும் மேலான வெற்றிகளைப் பெறுவதற்கான திறன்களைப்பற்றி பேசுகிறது “டேவ் கெர்பென்” அவர்களால் எழுதப்பட்ட ``தி ஆர்ட் ஆப் பீப்புள்” என்னும் இந்தப் புத்தகம்.

புரிதல்

மிகவும் சரியாக புரிந்துகொள்ளப்பட்ட ஒரு விஷயம், பாதி வெற்றியடைந்ததற்கு சமம். சுய விழிப்புணர்வும், புரிதலும் மிகவும் அடிப்படையான திறன்களில் ஒன்று. நம்மைப்பற்றிய ஆழமான மற்றும் முழுமையான புரிதல் நம்மிடம் இல்லாதவரையில், நம்மால் மற்றவர்களை புரிந்துகொள்ளவோ, அவர்களின்மீது செல்வாக்கு செலுத்தவோ முடியாது. கொஞ்சம் நேரத்தை செலவிடுவது, சிறு சிறு உதவிகள் செய்வது ஆகியவற்றின் மூலமாக நம்மையும் மற்றவர்களையும் சரியாகப் புரிந்துகொள்ள முயலவேண்டும்.

சந்தித்தல்!

பள்ளி கல்லூரி நண்பர்கள், ஆசிரியர்கள், முந்தைய பணியிட ஊழியர்கள் என நாம் விரும்பும் நம்மால் மதிக்கப்படும் நபர்களைத் தொடர்ந்து சந்தித்தல் நமது வெற்றிக்கு உதவிகரமானது. ஈமெயில், பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்ஆப் போன்ற சோசியல் நெட்வொர்க்களின் மூலமாக எவரையும் எந்த நேரத்திலும் எளிதில் சந்தித்துவிட முடிகிறது அல்லவா!. இதனை மிகச்சரியாகப் பயன்படுத்தி, நிலையான சந்திப்பிற்கான வாய்ப்புகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமான ஒன்று.

கேட்டல்!

தங்களுக்குப் பிடித்த கார்ட்டூன் நிகழ்ச்சிகளை குழந்தைகள் மெய்மறந்து தொலைக்காட்சியில் பார்ப்பதைப் போலவே, நாமும் மற்றவர்களின் பேச்சை இடையூறின்றி நிதானமாக கேட்டுப் பழகவேண்டும். கேட்டல் என்பது வாழ்நாள் முழுமைக்குமான செயல்பாடு என்பதை நினைவில்கொண்டு, இந்த அத்தியாவசிய திறனை மேம்படுத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில், சிறிதளவு நேரத்தை தீவிர கேட்டலுக்கான பயிற்சிக்காக ஒதுக்கிக்கொண்டு செயல்படுவது நல்ல பலனைத்தரும்.

இணைத்தல்!

பணி ரீதியிலான மற்றும் தொழில் நிமித்தமாக நாம் சந்திக்கும் மனிதர்களை, அவர்களின் உதவி நமக்கு தேவைப்படுகின்ற நிலையில், தகுந்த மதிப்பீட்டுடன் ஏதோ ஒரு வகையில் நம்முடன் இணைத்துக்கொள்வது வெற்றிக்கான சிறந்ததொரு திறனாகவே பார்க்கப்படுகிறது. சிறு சிறு சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்தல், சிறிய உதவிகளைச் செய்தல் போன்றவற்றின் வாயிலாக இவ்வாறான இணைப்புகள் சாத்தியமாகும். இதன் பலன்கள் ஆச்சரியப்படத்தக்க வகையில் இருக்கும் என்பதே ஆசிரியரின் வாதமாக இருக்கின்றது.

செல்வாக்கு!

மற்றவர்களின் உதவியின்றி பெரும்பாலான செயல்களில் நம்மால் எதிர்பார்த்த வெற்றியினைப் பெற்றுவிட முடியாது. நமது திட்டம் மற்றும் செயல்பாடுகளில் மற்றவர்களின் நல்ல கருத்துகளுக்கும் இடமளித்து, அவர்களையும் அதனுள் செல்வாக்கு செலுத்தச் செய்வது உறுதியான பலன்களைத் தரக்கூடியது. இதனால், மாறுபட்ட பல சிந்தனைகளின் மூலமாக புதிய யோசனைகளும், அதற்கான செயல்பாட்டு முறைகளும் நம்மிடம் வந்துசேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.

மாற்றம்!

மனித மனங்களில் ஏற்படும் மாற்றம், மற்ற ஒட்டுமொத்த மாற்றங்களுக்கும் அடிப்படை காரணியாகிவிடுகிறது. நமது செய்கையினால் மற்றவர்களின் மனங்களில் ஏற்படும் நல்ல மாற்றங்கள், நமது வெற்றிக்கும் துணைபுரிகின்றது என்பது கூடுதல் நன்மை. இதை செய்வதற்கு, முதலில் நமது சொந்த மனதின் அணுகுமுறையிலிருந்து தொடங்கவேண்டும் என்கிறார் ஆசிரியர். மற்றவர்கள் நமக்கு செய்யப்போகும் உதவியை, நமக்கு தோதான வழியில் பெறுவதற்காக, அவர்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துவதே இவ்வகை திறன்.

கற்பித்தல்!

ஒரு விஷயத்தை நமது நண்பர் அல்லது சக பணியாளருக்குப் புரியவைக்க முயற்சிக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதற்காக முதலில் அவருடைய வலிமையை நன்கு உணர்ந்து, அதையொட்டியே அவ்விஷயத்தை அவருக்குப் புரியவைக்க முயற்சிக்க வேண்டும். இம்மாதிரியான தருணங்களில் நாம் ஒரு ஆசிரியர் அல்லது மேலாளர் போன்று செயல்படுவதற்குப் பதிலாக, ஒரு பயிற்சியாளரைப் போல செயல்படுவது அவசியம். அதைவிட முக்கியம், நம்மால் கற்பிக்கப்படுகிற விஷயத்திற்கு நாமே சிறந்த முன்னுதாரணமாக இருப்பது.

தலைமை!

சரியான செயல்களைச் செய்வது, மற்றவர்களுக்கான உத்வேகமளிப்பது, உதாரண நபராக இருந்து வழிநடத்துவது என அனைத்துமே தலைமைப்பண்பே. மேலும், பல்வேறு மாறுபட்ட நபர்களுக்கான, பல்வேறு மாறுபட்ட விஷயங்களை (அது நல்லதோ அல்லது கெட்டதோ) செய்வதும் தலைமைப்பண்பிற்கான செயல்பாடுகளே. இவையெல்லாம் தவிர, குழுவின் ஒட்டுமொத்த பார்வையை நிர்ணையித்தல், குழுவிற்கான சரியான நபர்களை உறுதிசெய்தல், வெற்றிக்குத் தேவையான போதுமான விஷயங்களைப் பெற்றிருத்தலை உறுதிசெய்தல் போன்றவையும் தலைமைப்பண்பிற்கான முக்கிய தகுதிகளே.

தீர்க்கப்படுதல்!

உதவி செய்ய ஓரிடத்தில் நீங்கள் இருக்கிறீர்களா? அங்கு நீங்கள் வெற்றியும் பெறுகிறீர்கள் என்கிறார் ஆசிரியர். ஆம், உங்களது அணுகுமுறை யின் மூலமாக மோதல்கள் மற்றும் சச்சரவுகளுக்கு தீர்வு காண்கிறீர்கள் எனில், அங்கு உங்களுக்கான நன்மதிப்பும் நன்மைகளும் கிடைக்கவே செய்யும். அதற்கும்மேல், அவற்றிலிருந்து கற்றுக்கொள்வதற்கும் நமக்கு நிறைய விஷயங்கள் கிடைக்கும் என்பதையும் கவனத்தில் வைக்கவேண்டும். இதுவும் வெற்றிக்கான மிக முக்கியத் திறன்களில் ஒன்றே.

ஊக்கம்!

எவ்வித பிரதிபலனும் எதிர்பாராத அன்பும் இரக்கமும், மோசமான நிலையை குணப்படுத்தக்கூடிய உடனடி சிகிச்சைமுறை என்கிறார் ஆசிரியர். அதுபோலவே, தேவை யான நேரத்திற்கான மிகச்சரியான ஊக்கத்திற்கு ஈடுஇணை எதுவுமில்லை, அது பெறுவதானாலும் சரி அல்லது கொடுப்பதானாலும் சரி. மேலும் ஊக்கமானது, விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாக, துல்லிய மான தேவைக்கானதாக, நேர்மறையானதாக, சிக்கல்களை ஏற்படுத்தாததாக, செயல்படுத்த நல்ல வாய்ப்புள்ளதாக இருக்க வேண்டியது முக்கியம். இந்த ஊக்கப்படுத்துதல், வெற்றிக்கான திறன்களில் மிகவும் முக்கியமானதும் அதிக பயனுள்ளதுமாகும்.

மகிழ்ச்சி!

மகிழ்ச்சியாக வாழ்வது மட்டுமல்ல, மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதும், அவர்களின் மகிழ்ச்சிக்கு உதவுவதும் சிறப்பானதே. சக பணியாளர்கள், வாடிக்கையாளர்கள், குழு உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோருக்கு, அவ்வப்போது சிறு சிறு ஆச்சரியங்களை அளித்து அவர்களின் மகிழ்ச்சியின்மீது கவனம் செலுத்துங்கள். அதற்காக பெரிதாக ஒன்றும் மெனக்கெட வேண்டியதில்லை. பாராட்டு, அன்பான வார்த்தைகள், கனிவான புன்முறுவல் போதுமே. இச் சிறிய செயல்களே, பின்னாளில் கிடைக்கப்போகும் உங்களுக்கான பெரிய விஷயங்களுக்கான விதைகள்.

கவனம், நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மை, குழுப்பணி, பதில் மொழி, பேரார்வம், இணக்கம், ஆச்சரியம், , இரக்கம், பணிவு, கொடுத்தல், உறுதித்தன்மை, உத்வேகம், வாழ்க்கை, அன்பு, மாற்றம், மன்னிப்பு, குடும்பம், வலிமை, தைரியம், தலைமைப் பண்பு மற்றும் மரபு போன்ற அனைத்து வாழ்க்கை முறைகளுக்குமான சிறந்த உத்வேகமளிக்கும் புகழ்பெற்ற உலக அறிஞர்களின் இருநூறுக்கும் மேற்பட்ட பொன்மொழிகளுடன் நிறைவு செய்திருப்பது இந்தப் புத்தகத்திற்கான கூடுதல் சிறப்பு.

p.krishnakumar@jsb.ac.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x