Last Updated : 02 Mar, 2018 11:11 AM

Published : 02 Mar 2018 11:11 AM
Last Updated : 02 Mar 2018 11:11 AM

சி(ரி)த்ராலயா 07: நண்பனின் வளர்ச்சியில் பொங்கிய மகிழ்ச்சி!

சென்னையின் நுழைவாயில் என்று செங்கல்பட்டுக்கு இன்று தடபுடலான பட்டப்பெயரை ரியல் எஸ்டேட்காரர்கள் வாரி வழங்கியிருக்கிறார்கள். ஆனால், செங்கல்பட்டுக்கு அநேக வரலாற்றுப் பெருமைகள் உண்டு. ஒரு காலத்தில் விஜயநகரப்பேரரசின் தலைநகரமாக இருந்திருக்கிறது. இங்குள்ள கடல்போன்ற கொளவாய் ஏரி மதராஸின் கடந்தகால கடும் குடிநீர் பஞ்சங்களின்போதுகூட வற்றவில்லையாம். கொளவாய் ஏரி மட்டுமல்ல, ஊரைச் சுற்றி பல நீர் நிலைகள் இருக்கின்றன. அவற்றில் செங்கழுநீர் பூக்கள் என்று சங்க ப்பாடல்கள் குறிப்பிடும் அல்லி மலர்கள் நிறைந்திருந்தன.

அதனால் செங்கழுநீர்பட்டு எனப் பெயர்பெற்று காலப்போக்கில் செங்கல்பட்டு ஆகிவிட்டது. அப்படிப்பட்ட செங்கல்பட்டுக்கு நவீன காலத்தின் அடையாளமாக அமைந்ததுதான் ‘திருமலை டாக்கீஸ்’ திரையரங்கம். அதன் அதிபர் திருமலை நாயுடுவின் மகன் கிட்டப்பா, பால்யம் முதல் கோபுவின் நண்பர். எங்கே போனால் கோபுவைப் பார்க்கலாம் என்று கேட்பவர்களிடம், “தியேட்டருக்கென்றே ஒரு மகனைப் பெற்றிருக்கிறேன். திருமலை டாக்கீஸ் போங்க, கோபுவைப் பாருங்க” என்று பந்துக்களிடம் சொல்லுவாராம் அம்மா.

சம்பளம் இல்லாத ஆபரேட்டர்

டிக்கெட் கொடுப்பது, ஆப்ரேட்டருடன் சேர்ந்து பட ரீலை ஓடவிடுவது போன்ற வேலைகளை விருப்பத்துடன் ஏற்றார் கோபு. திரையரங்கில் ஜெர்மன் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விக்டோரியா புரொஜெக்டர்கள் இரண்டு இருக்கும். ரீல் பெட்டியிலிருந்து படச்சுருளை எடுத்து இரண்டு ரீல்களைச் சுற்றினால் ஒரு ஸ்பூல் என்பார்கள். சுமார் இருபது நிமிடம் ஓடும் அந்த ஸ்பூல். அது ஓடி முடிவதற்குள், மற்றொரு புரொஜெக்டரில் இரண்டு ரீல்களைச் சுற்றி அடுத்த ஸ்பூலைத் தயாராக வைத்திருக்க வேண்டும். முதல் புரொஜெக்டரில் உள்ள ஸ்பூல் முடியும் தருவாயில் ஆபரேட்டர் ‘ஸ்டார்ட்’ என்று சொன்ன உடனேயே அடுத்த புரொஜெக்டரை கோபு இயக்குவார். இந்தப் பணிகளை எல்லாம் மிகுந்த விருப்பத்துடன் நண்பன் கிட்டப்பாவுக்காகச் செய்து வந்தார் கோபு. புரொஜெக்டர் அறையின் சதுரத் துளை வழியே படங்களை இலவசமாகப் பார்ப்பதுதான் கோபு பெற்ற சம்பளம்.

காட்சிகள் கற்றுத் தந்த வித்தை

திரையரங்கில் ஒரே படத்தைப் பலமுறை சலிக்காமல் பார்த்து வந்த கோபுவுக்கு நகைச்சுவைக் காட்சிகள் வரும்போது உற்சாகம் ஊற்றாகப் பெருகும். அதேபோல மற்ற காட்சிகளைவிட நகைச்சுவைக் காட்சிகளை உன்னிப்பாகக் கவனிப்பார். என்.எஸ்.கே – மதுரம், காளி.என்.ரத்தினம் - சி.டி.ராஜகாந்தம் ஜோடிகள் அப்போது திரையுலகைக் கலக்கிக்கொண்டிருந்தன. சாரங்கபாணி கவுரவமான நகைச்சுவை நடிகராகத் திகழ்ந்தார்.

‘என் மனைவி’ படத்தில் “சங்கீதம் பாடப்போறேன்… சினிமாவுல சேரப்போறேன்!” என்று ஆடிப்பாடி அமர்க்களப்படுத்தியிருந்த சாரங்கபாணி சினிமாவில் சேர வரும்படி தனக்கே அழைப்பு விடுவது போலத் தோன்றியது கோபுவுக்கு. பின்னாளில் அவருக்கே வசனம் எழுதியபோது இந்தக் காட்சியைச் சொல்லி கோபு பாராட்ட, அவரோ கோபுவின் நகைச்சுவை வசனங்களைக் கேட்டு தொப்பை அதிரச் சிரிப்பாராம். கோபுவை மிகவும் கவர்ந்த மற்றொரு ஹாஸ்ய குணசித்திரம் டி.ஆர். ராமசந்திரன்.

ஜெமினி நடித்த ‘மனம் போல் மாங்கல்யம்’ கே.ஏ.தங்கவேலு நடித்த ‘சிங்காரி’ ஆகிய அதிரடி நகைச்சுவைப் படங்கள் அனைத்தும் மதராஸில் ரிலீஸ் ஆகும்போதே திருமலை டாக்கீஸிலும் ரிலீஸாகிவிடும். ஜெமினிக்கு தான் வசனம் எழுதுவோம் என்று கனவுகூடக் கண்டிருக்கமாட்டார் கோபு. பிற்காலத்தில் ‘டனால்’ தங்கவேலுவுடன் சேர்ந்து இன்றும் மீம்களிலும் நகைச்சுவைத் தொலைக்காட்சிகளிலும் வலம் வந்துகொண்டிருக்கும் மன்னார் அண்ட் கம்பெனியை உருவாக்குவோம் என்று நினைத்திருப்பாரா என்ன?

பராசக்தி தந்த உந்துதல்

அப்போது தமிழக அரசியலையே புரட்டிப் போட்ட ‘பராசக்தி’ திருமலை டாக்கீஸில் ரிலீஸ் ஆனது. ஒரு திரைப்படம் நாட்டில் பல மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதை இப்படத்தின் மூலம் உணர்ந்தார் கோபு. ஒரு விதையாக அவர் மனதில் முளைவிட்டிருந்த சினிமா ஆசை, மரமாக வளர இந்தப் படம் ஒரு பெரிய உந்துதலாக அமைந்துபோனது.

புதுமுகமாகத் தோன்றிய சிவாஜியின் நடிப்பைப் பார்த்தும் கலைஞர் கருணாநிதியின் அனல் பறக்கும் அரசியல் வசனங்களைக் கேட்டும் காட்சிக்குக் காட்சி எழுந்த கரகோஷத்தை திருமலைத் திரையரங்கம் அப்போதுதான் பார்க்கிறது. அங்கே 50 நாட்கள் ஓடிய முதல் படம். பின்னாளில் ‘நடிகர் திலக’மாக தமிழுலகம் முடிசூட்டிய சிவாஜி கணேசனின் நெருங்கிய நண்பர் ஆச்சாரியாக மாறப்போவதை அறியாமல் கோபு ‘பாராசக்தி’ படத்தைத் தினசரி பார்த்தபடி திருமலை டாக்கீஸில் தனது சினிமா உழவாரப் பணியைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.

02chrcj_Chitralayagopu and srithar ஸ்ரீதரும் கோபுவும் கோபுவும் கோபுலுவும்

நகைச்சுவைக் காட்சிகளை ரசித்து அதிலேயே திளைத்திருக்காமல் ஆனந்த விகடன், கல்கி, கலைமகள் பத்திரிகைகளில் வரும் நகைச்சுவைத் துணுக்குகளை ரசித்துச் சிலாகிப்பதும் அந்தத் துணுக்குகளுக்கு ப்ரிகுவெல்கள் சீகுவெல்கள் எழுதி நண்பர்களைச் சிரிக்க வைப்பதிலும் கோபுவுக்கு நாட்டம் இருந்தது. அன்று ஆனந்த விகடனின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாக இருந்த கோபுலுவின் கார்ட்டூன்கள் கோபுவுக்கு மிகவும் பிடிக்கும். இந்தியாவின் மிகச் சிறந்த ஓவியரான கோபுலுவுக்கும் தனக்கும் ஒரு எழுத்துதானே வித்தியாசம் என்று நினைப்பாராம்.

கோபுலுவின் கேலிச்சித்திர ஜோக்குகளைப் படித்ததும் அவற்றைத் தொடர்ந்து எப்படி எடுத்துச் செல்ல வேண்டும் என்று தனக்குத்தானே பரீட்சை வைத்துக்கொள்வார். அதையே ஒரு நாடகமாகக் கூட மனதில் உருவாக்குவார். அதை எழுதி நண்பர்களிடம் படித்துக் காட்டுவார். தனது அம்மாவைப் போலவே இயற்கையாக அமைந்திருந்த நகைச்சுவை உணர்வு, மிமிகிரி செய்யும் ஆற்றல், பார்ப்பவர்களுக்குச் சிரிப்பை தூண்டும் ‘பாடி லாங்குவேஜ்’, திரைப்படங்கள் மற்றும் பத்திரிகைகளில் அவதானித்த நகைச்சுவையை கொலாஜ் செய்து புதிய பாணியில் வெளிப்படுத்தும் ஆற்றல் ஆகியவற்றில் 25 வயதிலேயே விற்பன்னராக மாறிநின்ற கோபு இருக்கும் இடங்கள் கலகலப்பாகிவிடும்.

திருமலைத் திரையங்க வாசம், அதைவிட்டால் தனது துறு துறு குழுவுடன் ‘மிஸ் மைதிலி’ நாடகத்தை நடத்துவது என வலம்வந்துகொண்டிருந்த கோபுவைத் தேடி இரண்டாம் முறையாகச் சென்னையிலிருந்து வந்த ஸ்ரீதர், தனது ‘ரத்தபாசம்’ நாடகம் திரைப்படமாகத் தயாராக உள்ளதாகவும், தானே அதற்குத் திரைக்கதை வசனம் எழுதப் போவதாகவும் கூறினார். ஸ்ரீதர் கொண்டுவந்த இந்தத் தகவலைக்கேட்டு கோபுவுக்குத் தலைகொள்ளாத மகிழ்ச்சி. ‘மிஸ் மைதிலி’ நாடகத்தை ஸ்ரீதருக்கு போட்டுக் காண்பித்தார், கோபு. அதில் இருந்த நகைச்சுவை விருந்தைக் கண்டு வியந்த ஸ்ரீதர். “ பேஷ்டா… பிரமாதம்.. நான் ஸ்டாப் லாபிங்” என்று பாராட்டிவிட்டுச் சென்றார்.

அடுத்த ஆறு மாதங்களுக்கு ஸ்ரீதர் ஊர் பக்கமே வரவில்லை. அப்போதுதான் திருமலை தியேட்டருக்கு ஸ்ரீதரிடமிருந்து ட்ரங்கால் வந்தது. “ டேய் கோபு ‘ரத்தபாச’த்தைத் தவிர, ‘எதிர்பாராதது’, ‘எங்க வீட்டு மகாலட்சுமி’ மேல ரெண்டு படங்களுக்கு வசனம் எழுதுறேண்டா… அதான் ஊருக்கு வரமுடியல. முடிஞ்சா நீ ஒரு எட்டு வந்து என்னைப் பார்த்துட்டுப்போ” என்றார் ஸ்ரீதர். ஆவலோடு மெட்ராஸுக்குக் கிளம்பிப்போய் நண்பனைப் பார்த்துவிட்டு வந்தார். நண்பனின் வசன பேப்பர்களை சினேரியோ வாரியாக படித்துப் பார்த்துவிட்டு கோபு சொன்ன கருத்துகளைக் கேட்ட ஸ்ரீதர், “ நீ என் கூட இங்க இருந்துட்டா எவ்வளவு நல்லா இருக்கும். நீ ரசிகன் மட்டுமல்ல, நல்ல விமர்சகன்” என்றார். ஆனால் ‘மிஸ் மைதிலி’ நாடகத்துக்கும் மிமிக்ரி நிகழ்ச்சிகளுக்கும் அடுத்தடுத்து ஆஃபர்கள் வர கோபு செங்கல்பட்டு திரும்பவேண்டியதாகிவிட்டது.

நண்பனின் வளர்ச்சி

நாட்கள் மாதங்களாக ஓடிக்கொண்டிருக்க வசனகர்த்தாவாக இருந்த ஸ்ரீதர் வாழ்க்கையில் திடீர் திருப்பம். வீனஸ் நிறுவனத்தின் பங்குதாரராக வீனஸ் கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தராஜனுடன் இணைந்து சிவாஜி கணேசன் -பத்மினி நடிக்கும் படத்தைத் தயாரிக்கப் போவதாக செங்கல்பட்டுவந்து நண்பன் கோபுவுக்கே தான் தயாரிப்பாளராக உயர இருக்கும் இனிப்பான செய்தியைக் கூறினார். ‘பராசக்தி’ சிவாஜியுடன் ஸ்ரீதர் சேரப்போவதைக் கேட்டதும் துள்ளிக் குதித்தார் கோபு.

ஸ்ரீதரை வாழ்த்தி அனுப்பிவிட்டு வீடு சென்றபோது, “பொறுப்பில்லாமல் இருக்கும் உனக்கு ஒரு கால்கட்டைப் போட்டுட்டா சரியாகிடும்ன்னு ஜோசியர் சொல்றார்” என்று அம்மா கூற உறவினர் வகையறாவைச் சேர்ந்த ஒரு பெரிசு முற்றத்தில் அமர்ந்து கையில் வரன்களின் ஜாதகங்களை எடுத்து அம்மாவிடம் காட்டிக்கொண்டிருந்தார். ‘கால்கட்டு’ என்ற வார்த்தையைக் கேட்டவுடன் பகீர் என்றது கோபுவுக்கு.

சிரிப்பு தொடரும்
தொடர்புக்கு: tanthehindu@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x