Published : 08 May 2019 10:59 AM
Last Updated : 08 May 2019 10:59 AM

கதை: புலவர் தந்த புது உலகம்

அது மன்னராட்சி நடைபெற்ற காலகட்டம். தம்மிடம் பாட வரும் புலவர்களுக்கு மன்னர்கள் பரிசு கொடுப்பது வழக்கம். அப்படி ஒரு நாள் இந்தப் புலவர் அரசவைக்கு வந்தார். ஆனால், அவர் பாட்டுப் பாடிப் பரிசுப் பெற வரவில்லை.

தன்னிடம் உள்ள அரிய வகை உயிரினங்களைக் காட்டி, பரிசு பெற்றுச் செல்ல வந்தார். இதை அறிந்த மன்னர் ஆச்சரியப்பட்டார். அந்த உயிரினங்களைக் காட்டுவதற்கு அனுமதி கொடுத்தார்.

புலவர் மகிழ்ச்சியாகத் தன்னிடம் இருந்த உயிரினங்களை எல்லாம் கொண்டுவந்து காட்டினார். என்றைக்கும் இல்லாமல் அன்றைக்கு விலங்குகளும் பறவைகளும் சத்தமிடுகிற ஒலிகள் வானைப் பிளந்தன. அரண்மனை அல்லோலகல்லோலப்பட்டது. மன்னர் அரண்மனையை விட்டு வெளியில் வந்து பார்வையிட்டார்.

குவா ஹா ஹா என்று சத்தமிட்ட குதிரை போன்ற ஒரு விலங்கு அவர் கண்ணில் பட்டது. அடர் பழுப்பு, வெள்ளைக் கோடுகள் அந்த விலங்கின் முன் பகுதியில் இருந்தன. பின் பகுதியில் கோடுகள் இல்லை. அது மன்னரைக் கண்டதும் இரண்டு முறை சத்தமிட்டது. இது என்ன விலங்கு என்று கேட்டார் மன்னர். இதுதான் ஒகாபி என்றார் புலவர்.

அடுத்து மன்னரின் கண்ணில் பட்டது ஒரு பறவை. சாதாரணப் பறவையைப்போல் அல்லாமல் மிகப் பெரிய உருவம் கொண்ட அந்தப் பறவையால், பறக்க முடியவில்லை.

சிறகுகள் பழுப்பாகவும் சாம்பல் நிறமாகவும் இருந்தன. அதன் கால்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தன. அலகோ பச்சை நிறத்தில் இருந்தது.

மன்னரைக் கண்டதும் தத்திதத்தி அருகில் வந்தது. ஏதோ கேட்பதுபோல அலகைத் திறந்து தலையசைத்தது. மன்னருக்கு ஒரே மகிழ்ச்சி. அருகில் இருந்த புலவர், இதுதான் டோடோ என்றார்.

மன்னரின் ஆர்வம் அதிகமானது. குட்டிகளுடன் இருந்த ஒரு விலங்கைக் கண்டார். “மன்னா, இது ஓநாய்” என்று புலவர் சொன்னதும், அது பல்லைக் காட்டிச் சற்று பயமுறுத்தியது. மன்னர் சற்றே பின்னால் சென்றார். ஆனாலும் ஓநாய் சற்றே முன்னேறி வந்து, அவரது கால்களை நக்கியது.

“இது சாதுவானதா?”  என்று பயத்துடன் கேட்டார் மன்னர்.

“சாது என்று சொல்ல முடியாது மன்னா. ஓநாய்களிடம் நெருங்காமல் இருப்பதே நல்லது” என்றார் புலவர்.

பார்த்துக்கொண்டே வரும்போது மூலையில் படுத்துக் கிடந்த விலங்கு ஒன்றைக் கண்டார் மன்னர். அருகில் சென்று பார்த்தார்.

பூனை மாதிரியும் புலி மாதிரியும் இருந்தது அது. இது ஏன் இப்படிப் படுத்துக்கிடக்கிறது என்று கேட்டார்.

“அதுக்குப் பசிக்கிறது மன்னா” என்றார் புலவர்.

உடனே உணவு கொடுக்கச் சொல்லி உத்தரவிட்டார் மன்னர். அது சாப்பிடும் அழகைப் பார்த்து, இது என்ன விலங்கு என்று விசாரித்தார். ஒரு காலத்தில் பெருகித்திரிந்த சிவிங்கிப்புலி இதுதான் என்றார் புலவர்.

“என் வாழ்நாளில் இந்த உயிரினங்களை எல்லாம் பார்த்ததே இல்லை! இவற்றை நான் வாங்கிக் கொள்கிறேன். இந்த உயிரினங்கள் உங்களுக்கு எப்படிக் கிடைத்தன?” என்று கேட்டார் மன்னர்.

“இவை எல்லாம் என் முன்னோர்களால் வளர்க்கப்பட்டவை. இவற்றை அழிவிலிருந்து அவர்கள் காப்பாற்றினர். இப்போது பூமியில் அழிந்துவிட்டதாகச் சொல்லப்படும் அரிய வகை உயிரினங்கள் இவை.

என் அப்பா இவற்றை என்னிடம் ஒப்படைத்தார். பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் என்று  உறுதிமொழியும் வாங்கிக்கொண்டார்” என்றார் புலவர்.

இதைக் கேட்டதும் மன்னர், விலை கொடுத்து வாங்கும் முடிவைக் கைவிட்டார். அரிய உயிரினங்களைக் காப்பாற்றும் புலவர் குடும்பத்துக்கு உதவி செய்ய விரும்பினார்.  அமைச்சர்களுடன் ஆலோசித்து ஒரு முடிவு எடுத்தார்.

அந்த உயிரினங்கள் வாழ்வதற்காக ஒரு காட்டைத் தானமாக வழங்கினார். மேலும், அங்கு புலவரின் குடும்பத்தினர் தவிர, வேறு யாரும் செல்லக் கூடாது, அங்குள்ள மரங்களை வெட்டக் கூடாது, உயிரினங்களை வேட்டையாடக் கூடாது என்று உத்தரவிட்டார். அத்துடன் புலவருக்குப் பொற்காசுகளையும் வழங்கினார்.

அப்போது மன்னரைத் தேடி ஒரு பாட்டி வந்தார். தான் வளர்க்க ஓர் ஓநாயைக் கேட்டார்.

“ஐயோ… அது பொல்லாததும்மா. வீட்டில் வைத்து வளர்க்க முடியாது” என்றார் மன்னர்.

“எனக்கு யாரும் இல்லை. இதை அன்பாகப் பழக்கிக்கொள்கிறேன். உணவு கொடுத்து அன்பு காட்டினால் அது எனக்குத் துணையாகவும் காவலாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார் பாட்டி.

மன்னருக்கு ஒருபக்கம் வியப்பு. மறுபக்கம் அச்சம். அந்தப் பாட்டியின் நம்பிக்கையை மதிக்க வேண்டும் என்று நினைத்தார். மேலும் பெண்களால் எதையும் அன்பானதாக மாற்றிவிட முடியும் என்றும் நம்பினார்.

பாட்டிக்கு ஓர் ஓநாயைத் தர முடியுமா என்று புலவரிடம் கேட்டார். அவரும் ஒப்புக்கொண்டார். ஓநாய்க் குட்டியைப் பாட்டிக்குத் தந்தார் புலவர்.

பாட்டி அன்று வளர்த்த அந்த ஓநாய்தான், இன்றுவரை நம் வீட்டு நண்பனாகவும் காவலனாகவும் இருந்துவருகிறது. இன்று இதன் பெயர் நாய்.

மன்னரின் உதவியால் விலங்குகளுக்குப் பாதுகாப்பான இடமும் கிடைத்தது, உணவும் கிடைத்தது. அரிய உயிரினங்கள் பெருகின. புலவரது குடும்பமும் பெருகியது. தலைமுறை தலைமுறையாகப் புலவரது குடும்பத்தினர் அரிய உயிரினங்களைப் பாதுகாத்துவருகின்றனர்.

இப்போது அந்த மன்னர் யார் என்றே தெரியவில்லை. அந்தப் புலவர் பெயரும் தெரியவில்லை. ஆனால், அந்தப் புலவரின் வம்சாவளியினர் இன்றும் எங்கோ ஓரிடத்தில் அந்த அரிய உயிரினங்களை வளர்த்துவருகின்றனர்.

எவ்வளவு முயன்றும் அவர்களைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன்.

- நீரோன் காளி,

11-ம் வகுப்பு,

அத்யாபனா பள்ளி,  மதுரை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x