Published : 08 Apr 2019 12:34 PM
Last Updated : 08 Apr 2019 12:34 PM

ராயல்டியை தானம் செய்யும் டொயோடா

காற்று மாசு நாளுக்கு நாள் மிக மோசமாகிக் கொண்டிருப்பது எல்லோரும் அறிந்ததே. அதற்காகத்தான், எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவேண்டும் என்று சூழலியலாளர்கள் வலியுறுத்துகிறார்கள். அரசும் அதற்கான முயற்சிகளை எடுத்துவருகிறது, ஆனால், எலெக்ட்ரிக் கார்களுக்கான சந்தை எப்போது உருவாகும் என்று தெரியாத நிலைதான் நீடிக்கிறது.

பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார்கள் உற்பத்தியைச் செயல்படுத்த காத்திருக்கின்றன. இந்நிலையில், டொயோடா ஒரு படி மேலே போய்தனது ஹைபிரிட் கார்களின் தொழில்நுட்பங்கள் அனைத்தையும் காப்புரிமை இன்றி 2030 வரை யார் வேண்டுமானாலும் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிப்பதாகக் கூறியுள்ளது.

டொயோடா நிறுவனம் தனது ஹைபிரிட் ரகக் கார்களுக்கான தொழில்நுட்பங்களுக்கு 24 ஆயிரம் காப்புரிமைகளை வைத்துள்ளது. அவற்றில், மோட்டார்கள், பவர் கன்வெர்ட்டர்கள், பேட்டரிகள் என அனைத்தும் அடங்கும்.

இந்த 24 ஆயிரம்காப்புரிமைகளையும் இலவசமாகத் தர முன்வந்துள்ளது. பல நிறுவனங்களின் கோரிக்கைகளின் பேரில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டொயோடா நிறுவனத்தின் நிர்வாகத் துணை தலைவர் ஷிகேகி தெராஷி கூறியுள்ளார். 

டொயோடா ஹைபிரிட் கார்களின் ஜாம்பவான் என்றே சொல்லலாம். அதன் முதல் ஹைபிரிட் கார் 1997-ல் உருவான பிரியஸ். இதுவரை டொயோடா 1.3 கோடி ஹைபிரிட்கார்களை விற்பனை செய்திருக்கிறது. ஆனால், உலக அளவில் விற்பனையான மொத்த கார்களில் 3 சதவீதம் மட்டுமே ஹைபிரிட் கார்கள்.

இதில் 80 சதவீதம் டொயோடாவுடையதுதான். டொயோடா தனது ஹைபிரிட் கார் தொழில்நுட்பத்தை இலவசமாகக் கொடுப்பதிலும் பிசினஸ் உத்தி இருக்கிறது. முழுமையான எலெக்ட்ரிக் கார்களுக்கான சந்தையும் வரவேற்பும் உருவாவதற்கு முன்பாகவே, தனது ஹைபிரிட் கார்தொழில்நுட்பம் உலக ஆட்டோமொபைல் சந்தை முழுவதும் விரிவடைய வேண்டும் என விரும்புகிறது.

எனவேதான் 20 ஆண்டுகளாக விட்டுக் கொடுக்காத காப்புரிமைகளை இன்று தானம் செய்கிறது.மேலும், முழுமையான எலெக்ட்ரிக் கார்கள் விலை அதிகமாக இருப்பதால் அவை சந்தையைப் பிடிக்க கொஞ்சம் தாமதமாகும். அதற்கு முன் தனது ஹைபிரிட் கார் தொழில்நுட்பத்தை உலகம் முழுவதும் பரப்ப டொயோடா முடிவு செய்துள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x