Last Updated : 03 Apr, 2019 02:18 PM

 

Published : 03 Apr 2019 02:18 PM
Last Updated : 03 Apr 2019 02:18 PM

திறந்திடு சீஸேம் 26: மெர்ச்சென்ட் ராயல்

மெர்ச்சென்ட் ராயல். பிரிட்டனின் வணிகக் கப்பல். லண்டனில் டெப்ட்ஃபோர்டு டாக்யார்டு என்ற நிறுவனத்தால் கி.பி. 1627-ல் உருவாக்கப்பட்டது. பெருங்கடல்களைக் கடந்து சென்று தங்கத்தையும் வெள்ளியையும், பிற செல்வங்களையும் அள்ளி வருவதற்காகவே உருவாக்கப்பட்ட கப்பல் என்பதாலேயே ‘மெர்ச்சென்ட் ராயல்’ என்று பெயரிட்டார்கள்.

அப்போது அனைத்து ஐரோப்பிய தேசங்களும் ‘யார் பெரியவன்?’ என்ற கர்வத்துடன் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டிருந்தன. குறிப்பாக, கடல் கடந்து கப்பல்களை அனுப்பி பிற கண்டங்களில் புதிய காலனிகளை அமைப்பதிலும், அங்கிருந்து செல்வங்களைக் கொள்ளையடித்து வருவதிலும் போட்டிப் போட்டுக் கொண்டிருந்தன. பிரிட்டனுக்கும் ஸ்பெயினுக்கும் அந்தப் போட்டியும் அது சார்ந்த அரசியல் பகையும் நிறையவே உண்டு. ஆனால், அவை இரண்டும்

1630-களில் நட்பு நாடாக இருந்தன. பிரிட்டன் காலனி அமைத்திருந்த பகுதிகளில் ஸ்பெயின் வணிகம் செய்தது. ஸ்பெயினின் காலனி நாடுகளில் பிரிட்டன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டது.

sesame-2jpgசார்லஸ் மன்னர்

அப்படிப்பட்ட ஒரு சுமுகமான சூழலில்தான், அதாவது கி.பி. 1637-ல் மெர்ச்சென்ட் ராயல், மேற்கு இந்தியத் தீவுகளில் வணிக நோக்கில் நங்கூரமிட்டிருந்தது. அப்போது அந்தத் தீவுகள் ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் இருந்தன. 1640-ல் மெர்ச்சென்ட் ராயல் கிளம்பத் தயாரானது. அதில் ஏகப்பட்ட செல்வம் (தங்கம், வெள்ளிக் கட்டிகள், நாணயங்கள்) ஏற்றப்பட்டன. அது லண்டனை நோக்கிப் புறப்பட்டது. உடன் அதன் தங்கைக் கப்பலாக டோவர் மெர்ச்சென்ட் என்ற சிறிய கப்பலும் சென்றது.

வட அட்லாண்டிக் பெருங் கடலில் பயணம். காற்று, புயல், மழை, மோசமான வானிலை அனைத்தையும் தாங்கிக்கொண்டு இலக்கை வெற்றிகரமாக அடைய வேண்டும். ஆனால், ஆங்காங்கே கசிவுகள் இருந்ததால், மெர்ச்சென்ட் ராயல் கொஞ்சம் பலவீனமாகத்தான் இருந்தது. கேப்டன் லிம்ப்ரே, அதைப் பற்றிப் பெரிதாகக் கவலைப்படாமல், கசிவுகளைத் தற்காலிகமாகப் பழுது பார்த்துவிட்டுக் புறப்பட்டிருந்தார்.

சில மாதங்கள் பயணம் செய்து வட அட்லாண்டிக் பெருங்கடலை மெர்ச்சென்ட் ராயலும் அதன் தங்கை டோவர் மெர்ச்சென்டும் கடந்தன. ஸ்பெயினின் காடிஸ் துறைமுகத்தில் சில நாட்கள் இளைப்பாறின. அடுத்த கட்டப் பயணத்துக்கான உணவு, நீர் போன்றவற்றை நிரப்பிக்கொண்டிருந்தார்கள். முந்தைய கடினமான பயணத்தால் மெர்ச்சென்ட் ராயலில் கசிவுகள் அதிகமாயிருந்தன. கேப்டன் லிம்ப்ரே அப்போதும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. பெருங்கடலையே கடந்த கப்பல், லண்டனையும் சிரமமின்றி அடைந்துவிடும் என்று நம்பினார்.

அப்போது கேடிஸ் துறைமுகத்தில் நின்றுகொண்டி ருந்த ஸ்பெயினின் கப்பல் ஒன்று திடீரென தீ விபத்துக்கு உள்ளானது. கேப்டன் லிம்ப்ரேவை, ஸ்பெயின் அதிகாரிகள் அணுகினர். ‘கேப்டன், பெல்ஜியத்தின் ஃப்ளாண்டர்ஸ் நகரத்தில் சுமார் 30,000 ஸ்பானிய வீரர்கள் பணியில் இருக்கிறார்கள். அவர்களுக்கான சம்பளத்தை நாங்கள் அனுப்புவதாக இருந்த கப்பல் தீக்கிரையாகிவிட்டது. தாங்கள் அந்த நாணயங்களை பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் துறைமுகத்தில் சேர்த்துவிட முடியுமா?’

கேப்டன் லிம்ப்ரே பெருந் தன்மையுடன் ஒப்புக்கொண்டார். காரணம், அந்தச் சரக்குகளை ஏற்றிச் செல்வதற்கு ஸ்பெயின் நல்ல வாடகை கொடுக்கும். வந்தவரைக்கும் தன் ராஜ்யத்துக்கு லாபம்தானே!

700 டன் வரைக்கும் சரக்கு ஏற்றும் வலிமைகொண்டது மெர்ச்சென்ட் ராயல். கேடிஸில் ஸ்பெயினின் சரக்குகளையும் ஏற்றியபிறகு, அதைவிட அதிக எடையுடன் இருந்ததா என்பது தெரியவில்லை. கேடிஸில் இருந்து மெர்ச்சென்ட் ராயலும் டோவர் மெர்ச்சென்டும் கிளம்பின. இங்கிலாந்தின் தென்முனையான கார்ன்வெல் கடல் பகுதியை அடைந்தன.

கி.பி. 1641, செப்டம்பர் 23. கார்ன்வெல்லின் மேற்குப் பகுதியான லேண்ட்ஸ் எண்ட் கடல் பகுதி. மிக மோசமான வானிலை. கடல் கொந்தளிப்பு. தத்தளித்த மெர்ச்சென்ட் ராயலில் கடல் நீர் கட்டுப்பாடின்றிப் புக ஆரம்பித்தது. சில பாகங்கள் உடைய ஆரம்பித்தன. அதிலுள்ள சரக்குகளை உடனே டோவர் மெர்ச்சென்டுக்கு மாற்ற கொஞ்சமும் அவகாசம் இருக்கவில்லை. மெர்ச்சென்ட் ராயல் மூழ்க ஆரம்பித்தது.

கேப்டன் லிம்ப்ரே வேறு வழியின்றிக் கப்பலைக் கைவிடச் சொன்னார். ஒரு சிறு படகு மெர்ச்சென்ட் ராயலில் இருந்து கடலுக்குள் இறக்கப்பட்டது. கேப்டன் உள்பட பலரும் வேகமாக அதில் ஏறினார்கள். அந்தப் படகு தள்ளாட்டத்துடன் டோவர் மெர்ச்சென்டை நோக்கி நகர்ந்தது. கேப்டன் லிம்ப்ரேவின் கண் முன்னாலேயே ஏகப்பட்ட செல்வம் நிரம்பிய மெர்ச்சென்ட் ராயல் கடலுக்குள் மூழ்கியது.

கேப்டனுடன் 40 பேர் உயிர் பிழைத்திருக்க, மீதி 18 பேர் நீரில் மூழ்கி இறந்து போயிருந்தார்கள். வெறும் கையுடன் லண்டனுக்கு வந்து சேர்ந்தார் லிம்ப்ரே. அப்போதைய இங்கிலாந்து அரசர் முதலாம் சார்லஸின் குறிப்புகளைக் கொண்டு மெர்ச்சென்ட் ராயலில் எவ்வளவு செல்வம் இருந்தது என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது.

ஒரு லட்சம் பவுண்ட் தங்கம். அதன் இன்றைய மதிப்பு 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள். 400 மெக்ஸிகன் வெள்ளிக் கட்டிகள். இன்றைய மதிப்பு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள். கேடிஸில் ஏற்றப்பட்ட ஐந்து லட்சம் pieces of eight என்று அழைக்கப்பட்ட ஸ்பெயின் ராஜ்யத்தின் வெள்ளி நாணயங்கள். கொஞ்சம் தங்க நாணயங்கள். இவற்றை எல்லாம் சேர்த்து வைத்துப் பார்க்கும்போது, உலக வரலாற்றில் இதுவரை கடலில் மூழ்கிய கப்பல்களில் மெர்ச்சென்ட் ராயலில் இருந்த செல்வத்தின் மதிப்புதான் மிக மிக அதிகம்.

ஆனால், இப்போதுவரை மெர்ச்சென்ட் ராயல் மூழ்கிய இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது வரலாற்றுச் சோகம். பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு நபர்கள் கார்ன்வெல் கடல் பகுதியில் மெர்ச்சென்ட் ராயலைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். தேடிக்கொண்டே இருக்கிறார்கள். இரண்டு குறிப்பிட்ட சம்பவங்களைச் சொல்லலாம்.

2007-ல் ஒடிஸி மரைன் எக்ஸ்ப்ளோரேஷன் என்ற அமெரிக்க நிறுவனம் Black Swan Project என்ற பெயரில் 500 மில்லியன் அமெரிக்க டாலர்களைச் செலவு செய்து கார்ன்வெல் கடல்பகுதியில் பெரும் தேடலை மேற்கொண்டனர். ஆழ்கடலில் ஒரு கப்பலைக் கண்டறிந்தனர். அது மெர்ச்சென்ட் ராயல்தான் என்று நம்பினர்.

sesame-4jpgநங்கூரம்right

அந்தக் கப்பலின் சிதிலங்களில் இருந்து ஏகப்பட்ட வெள்ளி மற்றும் தங்க நாணயங்களை மீட்டெடுத்தனர். பின்புதான் அது கி.பி. 1804-ல் மூழ்கிப் போன ஸ்பெயின் கப்பலான Nuestra Seora de las Mercedes என்பது தெரிய வந்தது. 2009-ல் டிஸ்கவரி சேனலும் Treasure Quest என்ற நிகழ்ச்சிக்காக மெர்ச்சென்ட் ராயலைத் தேடும் கடும் முயற்சியை மேற்கொண்டு தோல்வியைச் சந்தித்தது.

2019, மார்ச் மாதம் கார்ன்வெல் கடல்பகுதியில் ஒரு மீன்பிடிக் கப்பலின் வலையில் நங்கூரம் ஒன்று சிக்கியது. அதை வெளியே எடுத்தார்கள். ஆய்வு செய்து பார்த்ததில் அது நிச்சயம் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கப்பலின் நங்கூரம்தான் என்று கண்டறியப்பட்டது. அதன் வடிவத்தை வைத்து மெர்ச்சென்ட் ராயலின் நங்கூரமாக இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது என ஆய்வாளர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

நங்கூரம் கிடைத்துவிட்டது. மெர்ச்சென்ட் ராயலுடன் மூழ்கிப் போன செல்வங்களும் கிடைத்துவிடுமா என்பதற்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

(பொக்கிஷங்களைத் தேடுவோம்!)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: mugil.siva@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x