Last Updated : 22 Apr, 2019 12:00 PM

 

Published : 22 Apr 2019 12:00 PM
Last Updated : 22 Apr 2019 12:00 PM

உங்கள் உலகம் கூகுள் கையில்!

இணையதள பயன்பாடு பட்டிதொட்டியெல்லாம் வந்துவிட்ட இன்றைய சூழலில் இணையம் என்றாலே எல்லோருக்கும் தெரிந்த ஒரே பெயர் ‘கூகுள்’தான்.  கூகுள் என்பது வெறும் தேடுபொறி மட்டுமல்ல. அது அதற்கெல்லாம் மேல். மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது இன்று, மாதா, பிதா, கூகுள், தெய்வம் என்றாகிவிட்டது.

இன்று கூகுள் நினைத்தால் நம்முடைய அன்றாட வாழ்க்கையையே முடக்கிப்போட முடியும். அந்த அளவுக்கு இன்றைய இணைய தலைமுறையோடு ஒன்றிணைந்து பயணப்படுகிறது. நமக்கு நெருக்கமானவர்களிடம் பகிரப்படாத விஷயங்களைக்கூட நாம் இணையத்தில் பகிர்கிறோம். மிகவும் ஆற்றல் மிக்க அதேசமயம் மிகவும் ஆபத்தான தொழில்நுட்பம் தான் இந்த இணையம். இதில் கூகுள் நம் வாழ்க்கையை எப்படி புரட்டிப்போடும் என்பதைப் பார்க்கும் முன் கூகுளைப் பற்றி சில விஷயங்களைப் பார்க்கலாம்.

தேடுபொறி சேவையில் கூகுளுக்குப் போட்டியாக எவ்வளவோ நிறுவனங்கள் இருந்தாலும் கூகுளின் சந்தை மதிப்பு மட்டுமே 90 சதவீதம். கூகுள் பற்றிய இந்தக் கட்டுரையைக் கூட நீங்கள் கூகுள் தேடுபொறியில்தான் படித்துக்கொண்டிருப்பீர்கள்.

கூகுளுக்கு நெருங்கிய போட்டியாளராக இருக்கும் ‘பிங்’ வெறும் 2% மட்டுமே பங்கு வகிக்கிறது. அதுமட்டுமல்லாமல்  இன்டர்நெட் உலகின் விளம்பரச் சந்தையில் 60 சதவீத வருவாயை கூகுள் தான் தீர்மானிக்கிறது. உலகின் மிகப்பெரிய மோனோபாலி என்றால் அது கூகுள்தான்.

பிக் டேட்டாக்களின் பிக் பாஸ்

இதற்கெல்லாம் காரணம் டேட்டா. உலகின் எந்தவொரு இணைய நிறுவனத்திடமும் இல்லாத அளவில் கூகுளிடம் டேட்டாக்கள் உள்ளன. நீங்கள் கூகுள் நிறுவனத்தின் பயன்பாடுகளில் ஏதோ ஒன்றில் ஏதோ ஒரு விஷயத்தைச் செய்கிறீர்கள் என்றால் அத்தனை விவரங்களும் கூகுள் சர்வரில் சேமிக்கப்பட்டுவிடும்.

கூகுளின் பிரதான தொழில், நீங்கள் தேடுவதை கொடுப்பதோ, ஜிமெயில் சேவையோ அல்ல. மாறாக அதன் வேலையே உலகின் மொத்த தரவுகளையும் திரட்டுவதுதான். இவ்வாறு திரட்டும் தகவல்களை ஒருங்கிணைத்து ஒவ்வொரு பயனாளர் குறித்தும் ஒரு புரொஃபைலை உருவாக்குகிறது.

நீங்கள் யார், எங்கு இருக்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள், என்ன வாங்குகிறீர்கள், என்ன சாப்பிடுகிறீர்கள், என்ன வாங்க விரும்புகிறீர்கள், எதைத் தேடுகிறீர்கள், உங்கள் ஆர்வம் என்ன, உங்கள் தேவை என்ன? அனைத்து விவரங்களையும் உங்களைவிட மிகத் துல்லியமாக கூகுள் அறிந்துவைத்திருக்கிறது.

என்ன செய்கிறது கூகுள்?

அது நம்மிடமிருந்து இலவசமாகப் பெறும் நம்முடைய தனிநபர் தகவல்கள், நடவடிக்கைகள் குணாம்சங்கள் என ஒவ்வொரு தகவல்களுக்கும் ஒரு சந்தை இருக்கிறது. அந்தச் சந்தையில் அதை விற்று காசாக்குகிறது கூகுள். நம்முடைய ஒவ்வொரு க்ளிக்கும் கூகுளுக்கு ஒரு தகவலைப் பகிர்கிறது. மிக விரைவாகவும் அதிகமாகவும் பணம் புரட்ட நினைப்பவர்களுக்கு இதைவிட  வேறு என்ன பெரிதாகத் தேவையாக இருக்கப் போகிறது.

நம்முடைய இருப்பிடம், சர்ச் ஹிஸ்டரி, பர்சனலைஸ்டு விளம்பர புரொஃபைல், ஆப் பயன்பாடு, யுட்யூப் ஹிஸ்டரி, மைக்ரோபோன் ஆக்சஸ், வெப்கேம் ஆக்சஸ், போட்டோஸ், ஈவென்ட்ஸ், காலெண்டர் ஹிஸ்டரி, ஃபிட்னஸ் விவரங்கள், இமெயில் ஹிஸ்டரி, டெலிட் செய்துவிட்டதாக நாம் நினைக்கும் விவரங்கள், ஆவணங்கள் என அனைத்துமே கூகுளின் கைப்பிடியில் இருக்கிறது.

ஆல்பாபெட் ஒரு ஆக்டோபஸ்

கூகுள் சிஇஓவாக இருந்த எரிக் ஸ்கிமிட் ஜிமெயிலில் பரிமாறப்படும் ஒவ்வொரு வார்த்தையும், கூகுள் குரோமில் செய்யப்படும் ஒவ்வொரு க்ளிக்கும் கூகுளின் பார்வையில் இருந்து தப்ப முடியாது.

அவை அனைத்துமே கூகுள் சர்வரில் இருக்கும் என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். எப்படி கொட்டிவிட்ட வார்த்தைகளைத் திரும்பப்

பெற முடியாதோ அதேபோலத்தான் இணையத்தில் பகிரப்பட்ட, பதிவேற்றப்பட்ட தகவல்கள் ஆவணங்களை நம்மால் அழிக்கவே முடியாது.

கூகுள் நிறுவனத்துக்கு இதற்கான அத்தனை செயற்கை நுண்ணறிவு சார்ந்த திட்டங்களையும் செயல்படுத்தி கொடுப்பது யார் என்றால் அதுதான் ‘டீப்மைண்ட்’. 2010-ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தை 2014-ல் கூகுள் வாங்கிவிட்டது. இதில் 700 செயற்கை நுண்ணறிவு ஆய்வாளர்கள் பணிபுரிகிறார்கள். கூகுளில் சேகரிக்கப்படும் பயனா

ளர்களின் அனைத்து விவரங்களுமே பல நூறு அல்காரித கணக்குகளில் உருவான  புரோகிராமிங் பின்னணியில்தான் சேகரிக்கப்படுகின்றன.

கூகுள், ஆல்பாபெட் என தன் பெயரை மாற்றிக்கொண்டது. ஆல்பாபெட் தாய் நிறுவன

மாகவும், கூகுள் துணை நிறுவனங்களில் ஒன்றாகவும் ஆனது. நமக்குத் தெரிந்ததெல்லாம் கூகுள் மட்டும்தான் ஆனால், கூகுளில் நாம் பெறும் சேவைகள், அதற்குப் பின்னணியில் அது நடத்தும் தகவல் சேகரிப்பு என அனைத்துக்கும் தனித்தனி நிறுவனங்கள் செயல்படுகின்றன.

கடந்த 14 வருடங்களில் கூகுள் 200 நிறுவனங்களை வாங்கியிருக்கிறது. தொடர்ந்து வாங்கிக்கொண்டும் விரிவுபடுத்திக்கொண்டும் இருக்கிறது. இதன் மூலம் மேலும், மேலும் அழியா சக்தியாகவும், இணைய உலகின் தாதாவாகவும் மாறிக்கொண்டிருக்கிறது.

கூகுள் மீது நம்பிக்கையில்லா வழக்குகள்

2011-ல் கூகுளுக்கு எதிராக அமெரிக்கா ஆன்ட்டி ட்ரஸ்ட் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தது. எந்தவொரு இணைய அடிப்படையிலான நிறுவனங்களின் தகவல்களையும் கூகுள் நினைத்தால் திருடிவிட முடியும் என்ற நிலையில் கூகுள் இருக்கிறது. அது போட்டி நிறுவனங்களின் ரகசிய தகவல்களைத் திருடிவிடுகிறது என சொல்லப்பட்டது.

கூகுளுக்கு எதிராக யெல்ப், அமேசான், மைக்ரோசாஃப்ட், இபே, எக்ஸ்பிடியா மற்றும் யாஹூ உலகின் முன்னணி நிறுவனங்கள் பலவும் புகார்களை அடுக்கின. கூகுள் நிறுவனத்தின் ஆன்ட்டி காம்பட்டிட்டிவ் நடவடிக்கைகளால் தங்களுடைய தொழில் பாதிக்கிறது என புகார் அளித்தன. பிற தேடுதல் பொறிகளை பயன்படுத்தாத வண்ணம் கூகுள் திட்டமிட்டு காய் நகர்த்துகிறது என்று கூறின. ஆனால், அதையும் எளிதில் கடந்தது கூகுள்.

கூகுளின் நிறுவன கையகப்படுத்தல்கள் பெரும்பாலும் விசாரணைக்குட்படுத்தப்படவில்லை. சில மட்டும் மேலோட்டமான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், கூகுளின் எந்த ஒரு கையகப்படுத்தல்களையும் யாரும் ஆட்சேபிக்கவில்லை. இதற்கெல்லாம் பின்னணியில் அரசியலும் உண்டு. அரசியல் பின்புலம் இல்லாமல் ஒரு நிறுவனத்தால் மோனோபாலியாக இருக்கவே முடியாது.

(இந்தியாவில் அம்பானி நிறுவனத்தைப் போல) கூகுள் நிறுவனம் அரசியல் லாபி செய்வதற்காகவே 25 நிறுவனங்களை கைவசம் வைத்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அரசின் எல்லா நிலைகளிலும் அதற்கு ஆதரவு இருக்கிறது. அதற்கும் காரணம், ரகசியத் தகவல்கள்தான்.

இதுபோக, வர்த்தக கூட்டமைப்புகள், திங்க் டேங்க் என்று சொல்லக்கூடிய உலகின் முன்னணி சமூகப் பொருளாதார நல அமைப்புகள், மேலும் சில முக்கியமான அமைப்புகள் என 300-க்கும் மேற்பட்ட அமைப்புகளுக்கு கூகுள் நிதியுதவி வழங்குகிறது.  இதன் மூலம் எளிதில் அரசாங்க கொள்கைகள் முதல், நீதி அமைப்புகள் வரை செல்வாக்கு செலுத்துகிறது.

கூகுளுக்கு எதிரான எந்த ஒரு வழக்கு விசாரணை ஆகட்டும், அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை முடிவு செய்பவர்களுக்கு முன்னதாகவே கூகுள் தெரிந்து வைத்திருக்கும். அந்த அளவுக்கு கூகுளுக்கு செல்வாக்கு உள்ளது. இதனால் அனைத்து விசாரணைகளிலும் கூகுள் தப்பித்தது. வழக்குகள் முடித்துவைக்கப்பட்டன.

கூகுளை எதிர்த்த தனியொருத்தி?

கூகுளுக்கு எதிராகவும் ஒரு தனியொருவர் போராடி வென்றார். தனிநபர் தகவல் விதிமீறல்களுக்காக 2.7 பில்லியன் டாலர் அபராதம் செலுத்தியது. கூகுள் மட்டுமல்ல ஃபேஸ்புக், ஆப்பிள் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தியவர். இவர் ஐரோப்பிய யூனியனின் காம்படிஷன் கமிஷனராக தற்போது இருக்கிறார்.

அவர் பெயர் மார்கரெதா வெஸ்தாகர். கூகுள் நினைப்பது மட்டும்தான் உங்கள் கண்முன் வரும். கூகுள் தனது தேடுபொறியில் தனது போட்டியாளர்களை எவ்வளவு ஆழத்தில் புதைக்க முடியுமோ புதைத்துவிடுகிறது. தன்னுடைய தயாரிப்புகளை, சேவைகளை புரொமோட் செய்வதில் முதன்மையாக உள்ளது என்று குற்றம் சாட்டினார் மார்கரெதா வெஸ்தாகர்.

இன்று கூகுள் அரசாங்கம், உணவு உற்பத்தி,மருத்துவம், கல்வி, மிலிட்டரி என அனைத்திலும் இறங்கிவிட்டது. இதற்கெல்லாம் அதற்கு தெம்பூட்டும் டானிக்காக இருப்பது அது கையில் வைத்திருக்கும் உலக மக்களின் மொத்த டேட்டாக்கள்தான்.

கூகுள் போன்ற நிறுவனங்களின் மோனோபாலி வளர்ச்சியில் உள்ள பிரச்சினையும் சிக்கலும் ஒரு தனிநபரின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவது அல்ல, அது ஒரு சமூகத்தையே மாற்றக்கூடியது.கூகுளின் தொழில் விரிவாக்கத்தையும், தகவல் மற்றும் பாதுகாப்பு விதிமீறல்களையும் கண்டு அமெரிக்க அரசாங்கமே அதிர்ந்து போனது.

அரசாங்கத்தின் குடுமியிலும் சில சமயங்களில் கையை வைக்கிறது கூகுள். சமீபத்தில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையிடம் அமெரிக்க காங்கிரஸ் பல மணி நேரம் விசாரணை நடத்தியதும் இதன் பின்னணியில் தான். கூகுளின் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் தகவல்களை திரட்டும் விதிமுறைகளை ஆராயுமாறு அமெரிக்க அரசாங்கம் உத்தரவிட்டதும் இதனால்தான்.

பயனாளரின் இருப்பிடத்தை கூகுள் சேவைகளைப் பயன்படுத்தாத போதும் கூகுள் கண்காணிக்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று. அமெரிக்க பென்டகன் அமைப்பின் புராஜக்ட் மாவென் (Project Maven) திட்டத்துக்கு செயற்கை நுண்ணறிவு

சேவையை வழங்க கூகுள் சம்மதிக்க கூடாது என்று சிஇஓ சுந்தர் பிச்சைக்கு கூகுள் பணியாளர்கள் 3,100 பேர் கடிதம் எழுதினார்கள் என்றால் பாருங்கள். ஆனால், அதையும் மீறி கூகுள் அந்த திட்டத்துக்கு துணை போனது. ஆனால் எல்லாவற்றையும் தாண்டி மிகப்பெரிய யூசர் ஃப்ரெண்ட்லி என்ற ஆணித்தரமான நம்பிக்கையை மக்களிடம் கூகுள் விதைத்திருக்கிறது. இதுவே அதன் தொடர் வெற்றிக்கு காரணம். கூகுள் நாம் நினைப்பது போல் யூசர் ஃப்ரெண்ட்லி அல்ல. அது அழிக்க முடியாத அசுரனைப் போன்றது. எனவேதான் சர்வதேச அளவில் கூகுளுக்கு எதிராக  "Don't be evil" என்ற மக்கள் கையெழுத்து இயக்கம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

இந்த நவீன யுகத்தில் கூகுள் நம் வாழ்க்கையை எளிமையாக்குகிறது என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அந்த அளவுக்கு நமக்கு அச்சுறுத்தலாகவும் அது இருக்கிறது என்பதும் நூற்றுக்கு நூறு உண்மை. ஏனெனில் நம்முடைய தனிநபர் பாதுகாப்பு என்பது கூகுளின் பார்வையில் பூஜ்யம். தனி

நபர் விவரங்கள் நமக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் அச்சுறுத்தலை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டால் அதற்கு மிகப்பெரிய விலையை நாம் கொடுக்க நேரிடும். ஆனால், அதுவரையிலும் கூகுள் என்னவோ வரப்பிரசாதம் என்றே நம்பிக்கொள்ள வேண்டியதுதான். அதேசமயம் மோனோபாலிகள் எப்போதுமே மனித குலத்துக்கு அச்சுறுத்தல்தான் என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

கூகுள் மட்டுமல்ல சீனாவின் இணைய சேவைகள், ஆப்களிலும் தகவல் சேகரிப்புகள் நடக்கின்றன. அமேசான், அலிபாபா உள்ளிட்ட நிறுவனங்களும் தகவல்களை சேகரிக்கின்றன. பாதுகாப்பான இணைய பயன்பாட்டுக்கு பலரும் பரிந்துரைப்பது, அனைத்து இணைய சேவைகளையும் ஒரே நிறுவனத்தின் தயாரிப்புகளிலிருந்து பெறாமல், வெவ்வேறு நிறுவன தயாரிப்புகளைப் பயன்படுத்தலாம் என்பதே.

கூகுளின் அடுத்த அடி

உலகின் மிகப்பெரிய வீடியோ பிளாட்ஃபார்ம் யுட்யூப். இது எத்தனை பேரை பிரபலமாக்கியிருக்கிறது, எத்தனை பேருக்கு புகழ் சேர்த்திருக்கிறது, எத்தனை பேருக்கு தொழில் வாய்ப்பையும் வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது என்பதற்கு கணக்கே இல்லை.

நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்றவை கட்டண அடிப்படையில் சேவை வழங்கி வருகின்றன. இனி யுட்யூப் தளமும் பிரீமியம் சேவையாக மாறும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இது மெல்ல  ஜிமெயில்,  கூகுள் மேப் என தொடரலாம். கூகுள் சேவைகளைப் பயன்படுத்த மாதம் இவ்வளவு கட்டணம் கட்டாயம் என்றால் என்ன ஆகும்?

இலவசம் போல இன்று எதையும் அருளிக் கொண்டிருக்கும் ‘கூகுள்’ ஆண்டவர், எந்த நிமிடமும் கேட்கலாம் - காணிக்கை!

கூகுளுக்கு மாற்று சேவைகள் பல உள்ளன. கூகுளுக்குப் பதிலாக duckduckgo.com ஜிமெயிலுக்குப் பதிலாக அவுட்லுக். கூகுள் மேப்புக்குப் பதிலாக Here We Go.

 

- saravanan.j@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x