Published : 22 Apr 2019 11:40 am

Updated : 22 Apr 2019 11:40 am

 

Published : 22 Apr 2019 11:40 AM
Last Updated : 22 Apr 2019 11:40 AM

யு டர்ன் 16: ஜெராக்ஸ் கார்ப்பரேஷன் – காப்பி எடுக்க வாரீகளா?

16

ஜெராக்ஸ் என்ன என்று கேட்டால், சின்னக் குழந்தையும் சொல்லும், “காப்பி எடுப்பது.” சின்னச் சின்ன கிராமங்களில் கூட, ஜெராக்ஸ் கடைகள் இருக்கும்போது, இதில் என்ன ஆச்சரியம்? இது மட்டுமல்லாமல், ஜெராக்ஸ் என்பது Xerox என்னும் ஆங்கில வார்த்தைதானே என்று சொல்கிறீர்களா?

1950 – களுக்கு முன் அச்சிட்ட ஆங்கில அகராதி வீட்டில் இருந்தால், எடுத்துப் பாருங்கள். Xerox என்னும் வார்த்தையே இருக்காது.


இங்கிலாந்தோடு நெருக்கத்தில் இருக்கும் மொழிகளின் பொதுஜன வார்த்தைகளை ஆங்கிலம் சுவீகாரம் எடுத்துக்கொள்ளும். உதாரணமாக, தமிழில் காசு, கட்டுமரம், சுருட்டு, கல்வெட்டு,மிளகுத்தண்ணி, பந்தல் ஆகிய சொற்கள் ஆங்கில அகராதியில் முறையே, Cash, Catamaran, Cheroot, Culvert, Mulligatawny, Pandal என வருகின்றன. இதேபோல்தான், அமெரிக்கப் பொதுஜன வழக்கிலிருந்த Xerox அகராதிக்கு வந்தது.

பார்ப்போமா, இந்த ரிஷிமூலம், நதிமூலம்? செஸ்ட்டர் கார்ல்சன் என்பவர் அமெரிக்காவில் முடிதிருத்துபவரின் ஒரே மகன். கார்ல்சனின் பதினான்காம் வயதில் அப்பாவுக்குக் கீல்வாத (Arthritis) நோய் வந்தது. உயிர் போகும் வலி. அதிக நேரம் வேலை பார்க்கமுடியவில்லை. சோதனைமேல் சோதனை. அம்மாவுக்குக் காசநோய்.

வீட்டில் வறுமை. பள்ளிக்கூடம் முடிந்தபின்னும், சனி, ஞாயிறு, விடுமுறைகளிலும், கிடைத்த வேலைகளுக்கெல்லாம் போனார். அதில், ஒரு அச்சக வேலை அவருக்குப் பிடித்தது. அங்கே தொடர்ந்தார். கார்ல்சனுக்குக் கற்பூர புத்தி. சில வருடங்களில் அச்சுத்தொழிலின் நுணுக்கங்கள் கைவசம்.

கல்லூரியில் பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி ஆகியவற்றுக்கான இளங்கலைப் படிப்பை முடித்தார். 82 கம்பெனிகளுக்கு அப்ளை செய்தார். மூன்று பேர் மட்டுமே இன்டர்வியூவுக்குக் கூப்பிட்டார்கள். ஒரு வேலை கிடைத்தது. பாவி போன இடம் பாதாளம் என்பார்கள்; சில மாதங்களில் இங்கே ஆட்குறைப்பு. வேலை போச்.ஒரு சிறிய எலெக்ட்ரானிக் கம்பெனியில் வேலை கிடைத்தது. சம்பளம் மிகக் குறைவு. வழக்கறிஞராக முடிவெடுத்தார்.

சட்டக் கல்லூரியில் இரவுநேரப் படிப்பில் சேர்ந்தார். பாடப் புத்தகங்கள் வாங்கக் காசில்லை. பொது நூலகம் போவார். புத்தகங்களைக் கையால் எழுதிக்கொள்வார். பகல் முழுக்க அலுவலக வேலை. இரவில் கல்லூரி. கிடைக்கும் ஓய்வுநேரங்களில் நூலகம். இவற்றுக்கு நடுவே, குடும்பச் சொத்தான கீல்வாத நோய் இளம் வயதிலேயே வந்தது. உடல் தளர்ந்தது. புத்தகங்களைக் கையால் எழுதுவது சிரமமானது. மனம் சுலப வழி தேடியது.

சட்டப் படிப்பை முடித்தார். எலெக்ட்ரானிக் கம்பெனியிலேயே காப்புரிமை இலாகாவில் வேலை. இங்கு ஏராளமான ஆவணங்களைப் பிரதிகள் எடுக்கவேண்டும். இவற்றை டைப் அடிப்பவரிடம் கொடுத்து நகல்கள் எடுப்பார். மூட்டுவலியால் அடிக்கடி மேலும் கீழுமாக நடக்க முடியவில்லை. பிரச்சினைக்குத் தீர்வு தேடினார். மனம் நிறையக் கேள்விகள் – உட்கார்ந்தபடியே பிரதிகள் எடுக்கமுடியுமா?

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு – Necessity is the mother of invention (தேவைதான் கண்டுபிடிப்பின் தாய்.) சொலவடை பலித்தது. அச்சக வேலை அனுபவமும், படித்த கெமிஸ்ட்ரி அறிவும் துணை நிற்க, வீட்டு அடுக்களையில் பல வருட ஆராய்ச்சிகள். 1938. இன்றைய போட்டோகாப்பி எந்திரங்களின் முன்மாதிரியைக் கண்டுபிடித்தார்.

அதற்கான காப்புரிமைக்கும் விண்ணப்பம் செய்தார். ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது என்று நம்பினார். கண்டுபிடிப்பைத் தயாரித்து விற்பனைக்குக் கொண்டுவரும் பணவசதி அவரிடம் இல்லை. அன்றைய தொழில்நுட்ப முன்னணிக் கம்பெனிகளான ஐ.பி.எம், ஜெனரல் எலெக்ட்ரிக் போன்ற 20 நிறுவனங்களைத் தொடர்பு கொண்டார். இப்படிப்பட்ட மெஷின் விற்கும் என்கிற நம்பிக்கை அவர்கள் யாருக்குமே இல்லை. கார்ல்சனுக்குக் கதவுகளை மூடினார்கள்.

ஆறு வருடங்கள் இப்படியே ஓடின. 1944 –ல் ஒரு தனியார் ஆராய்ச்சி நிறுவனம், ஆராய்ச்சி தொடர நிதியுதவி தந்தது. 1947 – ல் ஹலாய்ட் கம்பெனி (Haloid Company), கார்ல்சனோடு, போட்டோ காப்பி எந்திரத்தின் தயாரிப்பு, விற்பனை ஆகியவற்றுக்கான ராயல்ட்டி ஒப்பந்தம் போட்டார்கள். தன் கண்டுபிடிப்புக்கு Electro-photography என்று கார்ல்சன் பெயர் வைத்திருந்தார்.

இந்த வார்த்தை உச்சரிக்கக் கஷ்டமாக இருப்பதாக ஹலாய்ட் நினைத்தார்கள். வைக்கும் பெயர் புதுமையாக இருக்கவேண்டும், மக்கள் மனங்களில் ஆர்வத்தைத் தூண்ட வேண்டும் என்று நினைத்தார்கள். கிரேக்க மொழியில் “Xero” என்றால், “உலர்ந்த”. “Graphia” என்றால், ”எழுத்து”.

இவை இரண்டையும் இணத்தார்கள். கார்ல்சன் சம்மதத்தோடு, Xerography என்று மாற்றினார்கள். 1948–ல் முதல் போட்டோகாப்பியரை மார்க்கெட்டுக்குக் கொண்டுவந்தார்கள். தங்கள் எந்திரத்துக்கு அவர்கள் வைத்த பெயர் ‘ஜெராக்ஸ்’. விற்பனை சூடு பிடிக்கப் பல வருடங்களானது. 1959 – ல் கம்பெனி அறிமுகம் செய்த மாடல்914 மாபெரும் வெற்றி கண்டது.

ஹலாய்ட் முதலாளிகளையும், கார்ல்சனையும் கோடீஸ்வரர்களாக்கியது. ஜெராக்ஸ் என்பது மக்கள் அறிந்த பெயராயிற்று. இதனால், ஹலாய்ட் நிறுவனர்கள் கம்பெனி பெயரையே ஜெராக்ஸ் கார்ப்பரேஷன் என்று மாற்றினார்கள். அடுத்த 20 ஆண்டுகள் பிரம்மாண்ட வளர்ச்சி.

காப்பியர் உலகில் தனிக்காட்டு ராஜாவாக ஆட்சி. கஜானாவில் பொன்மழை. ஆராய்ச்சிகளிலும், புதுப்பொருட்கள் கண்டுபிடிப்புகளிலும் கணிசமாக முதலீடு. வகை வகையான காப்பியர்கள், கம்ப்யூட்டர்கள், லேசர் பிரின்ட்டர்கள் என ஏராளமான நவீனத் தொழில்நுட்பக் கருவிகள்.

பெர்சனல் கம்ப்யூட்டர், கிராஃபிக் யூஸர் இன்டர்ஃபேஸ் (Graphic User Interface - GUI )* என்னும் தொழில்நுட்பம் போன்றவை ஜெராக்ஸ் ஆராய்ச்சிக்கூடங்களில் பிறந்தவை. ஆனால், கண்டுபிடிப்பில் காட்டிய ஆர்வத்தைச் சந்தைப்படுத்துவதில் கம்பெனி காட்டவில்லை. ஆப்பிளின் ஸ்டீவ் ஜாப்ஸ், மைக்ரோசாஃப்ட் பில் கேட்ஸ் ஆகியோர் இவற்றை வைத்துப் பல்லாயிரம் கோடிகள் அறுவடை செய்தார்கள்.

# இதனால், மவுஸை நகர்த்துவதன் மூலம் கம்ப்யூட்டரின் திரையில் காணப்படும் குறிப்பான்களை (Icons) நகர்த்தலாம், வேண்டிய பணிகளை எளிதாகச் செய்யலாம். நாம் இன்று இதைத்தான் செய்கிறோம். கம்ப்யூட்டர்களைச் சாமானியர்களின் உபயோகப் பொருளாக்கிய புரட்சி.

இந்தத் தொழில்நுட்பம் இல்லாவிட்டால், நாம் கீ போர்டில் டைப் செய்து திணறிக் கொண்டிருப்போம். ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் கம்ப்யூட்டரிலும், பில் கேட்ஸ் தன் வின்டோஸ் 3 மென்பொருளிலும் வெற்றிகரமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஜெராக்ஸ் கம்பெனியிலிருந்து ‘‘சுட்டதாக” இருவருமே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

1980. பிரச்சினைகள் ஆரம்பம். பிசினஸில் பணத்தட்டுப்பாடுதான் முக்கிய பிரச்சனை என்று எல்லோரும் நினைக்கிறோம். அதிக லாபம் வந்தாலும் பிரச்சினைதான். எல்லாத் துறைகளிலும் நாம் ஜெயிக்கமுடியும் என்னும் தன்முனைப்பு வரும். நிதி நிர்வாகம், இன்ஷூரன்ஸ், துணிகர முதலீடு என சம்பந்தமே இல்லாத தொழில்களி லெல்லாம் மில்லியன்கள் முதலீடு செய்தார்கள்.

இப்போது, அடித்தளமே ஆடும் நிலை. ரீக்கோ (Richo), கானன் (Canon) போன்ற ஜப்பானியக் கம்பெனிகள் தங்கள் காப்பியர்களோடு களத்துக்கு வந்தார்கள். ஜெராக்ஸோடு ஒப்பிடும் தரமல்ல. ஆனால், ஜெராக்ஸின் பாதி விலை. சிங்கத்தை அதன் குகையிலேயே போய்த் தோற்கடிக்கும் முயற்சியாக, ஜெராக்ஸ் ஜப்பானில் ஒரு புதிய வியூகம். போட்டோ ஃபிலிம்ஸ் தயாரிக்கும் ஃப்யூஜி ஃபிலிம்ஸ் (Fuji Films) கம்பெனியுடன் கை கோர்த்து, ஃப்யூஜி ஜெராக்ஸ் பிறந்தது. ஆனால், இந்த நிறுவனத்தாலும், ரீக்கோ, கானன் போட்டியைச் சமாளிக்க முடியவில்லை.

1974 –ல் உலகப் போட்டோகாப்பியர்கள் விற்பனையில் ஜெராக்ஸின் பங்கு 86 சதவிகிதம். 1984 – ல் 17 சதவிகிதமாகச் சரிந்தது. கம்பெனியில் அபாயச்சங்கு ஒலித்தது. உடனே தீர்வு காணாவிட்டால், ஆட்டம் க்ளோஸ் என்று புரிந்தது. ராபர்ட் காம்ப் (Robert Camp) என்னும் அதீத திறமைசாலி தலைமையில் ஒரு குழுவை அமைத்தார்கள்.

காம்ப் வீழ்ச்சிக்கான அடிப்படைக் காரணங்களை ஆராய்ந்தார். ஜப்பானியக் கம்பெனிகளின் உற்பத்திச் செலவு, ஜெராக்ஸின் 40 சதவிகிதம்தான். தரக்கட்டுப்பாடு, குறைவான ஸ்டாக், துரித அக்கவுன்ட்டிங் முறை மூலம் இதைச் சாதிக்கிறார்கள் என்பது புரிந்தது. சாதாரணமாக, கம்பெனிகள் காரணங்களைக் கண்டுபிடித்தால், ரிக்கோ, கானன் ஆகியோரைக் காப்பி அடிப்பார்கள். காம்ப் காட்டினார் வித்தியாசம்.

ஜெராக்ஸின் பலவீனப் பகுதிகளில் உலகிலேயே மிகச் சிறந்த கம்பெனிகள் எவை யெவையென்று கண்டுபிடித்தார். தொழிற்சாலை வடிவமைப்பு மாற்றங்களுக்கு முன்மாதிரியாக ஃபோர்டு கார் கம்பெனி, எஞ்சின் தயாரிப்பாளர்களான கம்மின்ஸ் (Cummins); தர முன்னேற்றத்துக்கு டொயோட்டா கார், ஃப்ளோரிடா பவர்லைட்கம்பெனி (Florida Power Light Company); சப்ளையர் மேனேஜ்மென்டுக்கு ஹோண்டா கார் கம்பெனி; அக்கவுன்ட்டிங் முறைகளுக்கு அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கி என்று தேர்ந்தெடுத்தார்.

காம்ப் இவர்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு அவர்கள் அபரிமித வெற்றிக்கான காரணங்களை விசாரித்தார். அவர்களும், தயக்கமில்லாமல் விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். இவற்றின் அடிப்படையில், காம்ப் புதிய நிர்வாக முறைகளை அரங்கேற்றினார். முந்தைய நம்பர் 1 இடத்தைப் பிடிக்க முடியாவிட்டாலும், ஜப்பானின் போட்டியைப் பெருமளவில் சமாளிக்க இந்த யுக்தி உதவியது.

இந்தக் கொள்கைக்கு, பெஞ்ச்மார்க்கிங் (Benchmarking) என்று காம்ப் பெயர் வைத்தார். விரைவில், ஏராளமான பிற நிறுவனங்களும் இந்தக் கொள்கையைப் பின்பற்றத் தொடங்கினார்கள்*.

# இந்தியாவில் விப்ரோ, இன்ஃபோசிஸ், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, நம்ம மதுரையின் அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியோர் பெஞ்ச்மார்க்கிங் கொள்கையால் பலன்கண்டவர்கள்.1990. மார்க்கெட்டில் மந்த நிலை. ஜெராக்ஸ் விற்பனையும், லாபமும் குறையத் தொடங்கின.ஏப்ரல் 1999.

ரிச்சர்ட் தோமன் (Richard Thoman) சி.இ.ஓ. ஆனார். ஐ.பி.எம். கம்பெனியில் பல சாதனைகள் செய்தவர். ஜெராக்ஸை மறுபடியும் உச்சத்துக்குக் கொண்டுபோகும் லட்சிய வெறி. பெஞ்ச்மார்க்கிங் போன்ற மேனேஜ்மென்ட் யுக்திகள் மட்டும் போதாது, ஆணிவேர் மாற்றங்கள் வேண்டும் என்று முடிவு செய்தார். ஆக்ஷன் ஸ்டார்ட்.

(புதிய பாதை போடுவோம்!)

slvmoorthy@gmail.comஎஸ்.எல்.வி.மூர்த்தி தொடர்நிர்வாகத் திறன்வெற்றிக் கதைகள்நம்பிக்கைக் கதைதன்னம்பிக்கை கதைஜெராக்ஸ் கார்ப்பரேஷன் யு டர்ன்ஜெராக்ஸ் கடைகள்Xerox Necessity is the mother of inventionHaloid CompanyXerography Graphic User Interface - GUIFlorida Power Light CompanyBenchmarking

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x