Published : 07 Apr 2019 10:35 AM
Last Updated : 07 Apr 2019 10:35 AM

விவாதக் களம்: எதற்கும் பயந்து எதற்கும் முடங்கக் கூடாது

பொள்ளாச்சியில் பெண்கள்மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை குறித்து மார்ச் 24 அன்று வெளியான ‘பெண் இன்று’ இணைப்பிதழில் எழுதியிருந்தோம். பெண்கள்மீது நிகழ்த்தப்படும் பாலியல் அத்துமீறல்களை எப்படிக் களைவது எனக் கேட்டிருந்தோம். வந்து குவிந்த கடிதங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றில் சில உங்கள் பார்வைக்கு…

கற்பு என்பது பெண்ணை அடிமைப்படுத்தக் கிடைத்த ஆயுதமென்பார் பெரியார். உண்மைதான். இதில் தொடர்புடைய ஆண்களுக்குக் கற்பில்லையா?

பெண்ணடிமைத்தனம் வீட்டிலிருந்து தொடங்குகிறது. பெண்ணை அடக்கி வளர்ப்பதாலேயே அவர்கள் பிரச்சினைகளைப் பகிர்ந்துகொள்ள முடியாமல் இக்கட்டில் சிக்கிக்கொள்கிறார்கள். அடக்கமும் கோழைத்தனமும் பெண்களுக்கு அழகல்ல.

இரு பெண் குழந்தைகளுக்குத் தகப்பனாக என் குழந்தைகளுக்குச் சொல்லி வளர்ப்பது இதைத்தான். “தவறு செய்தால் மட்டுமே தலை குனிய வேண்டும்; நீ ஒரு பெண் என்று ஒருபோதும் தலை குனியாதே. இந்தச் சமூகம் உன்னை வாயாடி, திமிர் பிடித்தவள் என்று என்ன எள்ளி நகையாடினாலும் அவற்றைப் பொருட்படுத்தாதே. ஆணுக்குப் பயந்து ஒருபோதும் முடங்கிவிடாதே”.

- ச. அரசமதி, தேனி.

எதிர்பாராத விபத்திலோ சம்பவத்திலோ சிக்கிக்கொண்ட பெண்ணைப் ‘பாதிக்கப்பட்டவள்’ எனச் சொல்லலாம். ஆனால், திட்டமிட்டு வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணை, ‘பாதிக்கப்பட்ட’ எனச் சொல்வதில் நியாயமில்லை. முள் மீது ‘சேலை பட்டாலும் சேலை மீது முள் பட்டாலும் பாதிப்பு சேலைக்குத்தான்’ என்ற பிற்போக்குத்தனத்திலிருந்து பிறக்கும் சொல் இது. எது நடந்தாலும் ‘பாதிப்பு’ உனக்குத்தான் எனச் சொல்லிச் சொல்லியே பெண்களை முடக்குவதிலேயே நாம் பெருமிதம் கொள்கிறோம்.

- சித்ரா, சென்னை.

பெண் பலவீனமானவள்; பெண்ணுக்குத்தான் பாதிப்பு அதிகம் எனக் கூறும் சமூகம் அதிலிருந்து பெண் எப்படித் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுத்தர வேண்டும். ஆணோ பெண்ணோ நட்பாகப் பழகும்போது அதன் உச்சபட்ச எல்லை என்ன என்பதையும் அதைத் தாண்டினால் யாராக இருந்தாலும் தடுக்கவும் தாக்கிவிட்டுத் தப்பிக்கவும் தயங்கக் கூடாது என்பதையும் கற்றுத்தர வேண்டும். பெண்களை மட்டும் குறை சொல்வது முற்றிலும் தவறு.

- ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

பாலியல் வன்கொடுமை என்பது தண்டனைக்குரிய குற்றச்செயல் என்ற உணர்வு ஆண் மனத்தில் பதியும் வகையில் நடைமுறைப் பழக்கவழக்கங்களும் படிப்பினைகளும் அமைய வேண்டும்.

ஒரு பெண்ணை அவளது விருப்பமில்லாமல் அணுகும் ஆணுக்குத் தண்டனையைப் பெற்றுத்தர வேண்டுமே ஒழிய, தான் பாதிக்கப்பட்டவள் என்ற குற்றவுணர்வில் பெண் தன்னைப் புதைத்துக் கொள்ளக் கூடாது என்பதைப் பெண் உணர வேண்டும்.

- ம.தனப்பியா,

உதவிப் பேராசிரியர்,

பேரூர் தமிழ்க் கல்லூரி.

தடையின்றிக் கிடைக்கும் ஆபாச வீடியோக்கள், கேட்பாரற்ற சுதந்திரம், முதிர்ச்சியடையாத பருவ வயதுக் காதல், நண்பர்களின் தூண்டுதல் என எல்லாமுமாகச் சேர்ந்து தவறுசெய்யத் தூண்டுகின்றன. விருப்பம் இல்லாத பெண்ணைத் துரத்தித் துரத்திப் பின்தொடர்வதுதான் ஹீரோயிசம் என்ற தவறான கருத்துகளை ஊடகங்களும் திரைப்படங்களும் பரப்புகின்றன. தாராளமாகப் புழங்கும் மது, தவறு செய்கிறோம் என்ற குற்றவுணர்வை மழுங்கடித்துவிடுகிறது.

அரசு, பெண்கள் அமைப்புகள், பெற்றோர் அனைவரும் இணைந்து இம்மாதிரி அநீதிகள் இனியும் நடக்காமலிருக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

- பி. லலிதா, திருச்சி.

பிறந்தது முதலே ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனிச் சட்டங்களையும் நியாயங்களையும் வகுத்துவிடுகிறோம்.  ஒழுக்கம், கலாச்சாரம், மதம், குடும்ப கௌரவம், சாதிப் பெருமை என அனைத்தையும் சுமப்பவளாகவே பெண் பார்க்கப்படுகிறாள். அதனால்தான் ஆண் என்ன செய்தாலும் அது ஆண் என்ற அதிகாரத்துக்குள் மறைந்துவிடுகிறது. இந்த நிலை மாறும்வரை பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க முடியாது.

- அம்பிகா பூபதி,

பேளுக்குறிச்சி, நாமக்கல்.

இன்றைய குடும்ப அமைப்பில் ஆண், பெண் இருவருக்கும் அபரிமிதமான சுதந்திரம் கிடைக்கிறது. அதைப் பயன்படுத்தி வக்கிரபுத்தி கொண்ட ஆண்கள் பெண்களிடம் தவறாக நடந்துகொள்கின்றனர். பெண்கள் மான அவமானத்துக்குப் பயந்து, தவறுகளை வெளியே தெரிவிக்காமல் பாலியல் வன்கொடுமைக்குப் பலியாகின்றனர். குடும்ப, சமூக உணர்வுகள் மாற வேண்டும்.

பி.கே. ஜீவன், கும்பகோணம்.

பெண்களின் அந்தரங்கம் அவர்களின் ஒப்புதல் இல்லாமல் பொதுவெளியில் பகிரப்படும்போது, அது தன் குற்றமில்லை என்ற நிலையில் இயல்பாகக் கடந்துசெல்லும் மனோபாவத்தை இந்தச் சமூகமும் கல்வியும் பெண்களுக்குத் தர வேண்டும். பெண்கள் தங்களது பிரச்சினைகளைப் பெற்றோர்களிடம் சொல்லுமளவு அவர்களிடையே நல்ல பிணைப்பு இருப்பது முக்கியம். பெண்களைக் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லும் அதே நேரம், பெண்களை மதிக்கும் மாண்புகளை ஆண்களுக்குக் கற்றுக்கொடுப்பதும் அவசியம்.

- இரா.பொன்னரசி,

சத்துவாச்சாரி, வேலூர்.

வாழ்க்கை நெறிகளையும் அறத்தையும் மறந்துவிட்டோம். அதனால்தான் இன்று நம் குழந்தை, சகோதரி, அம்மா என்ற எல்லா நிலையையும் தாண்டிச் செல்கிறோம். ஒட்டுமொத்தச் சமூகமும் வெட்கப்பட வேண்டிய வேளை இது. கூடவே, இந்த நிலையை மாற்ற களத்தில் குதிக்க வேண்டிய நேரமும்கூட. இல்லையென்றால் வழியில் செல்பவை நம் வாசல் வரும். ஆணும் பெண்ணும் சமமல்ல. பெண்தான் ஆண் இனத்தைப் பெற்று, காத்து, வளர்க்கிறாள். இங்கே பெண்ணுக்கு ஆண் எப்படிச் சமமாக முடியும்?

பெண்களைப் பண்டங்களாகக் காட்டும் ஊடகங்கள், காமத்தை நோக்கியே காய்களை நகர்த்துகின்றன. ஆணை ஆணாகவும் பெண்ணைப் பெண்ணாகவும் இங்கே எத்தனை பெற்றோர் வளர்க்கிறார்கள்?

அதைச் சரிசெய்தாலே பிரச்சினை குறைந்துவிடும்.

- பத்மநாபன் கோவிந்தசாமி.

தலை குனிந்து நடந்த பெண்களை ஆண்கள் தலையில் குட்டி குட்டியே எழ முடியாமல் செய்துவந்தனர். இப்போது பெண்கள் தலை நிமிர்ந்து சோதனைகளைச் சாதனைப் படிகளாக்கி முன்னேறுவதைப் பார்த்த ஆண்கள், அதன் புழுக்கம் தாங்காமல் பெண்கள் மீது வன்முறையை ஏவுகின்றனர். பெண் பிள்ளைகளைக் கட்டுப்படுத்தும் பெற்றோர், தங்கள் வீட்டு ஆண் பிள்ளைகளையும் அதேபோல் வளர்த்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.

- பிரகதா நவநீதன், மதுரை.

பொள்ளாச்சி சம்பவத்தில் ஆண்களைப் பற்றி எவரும் ஏதும் பேசவில்லை என்பதற்கு ஒரே காரணம் இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளான ஆண்களுக்குக் கடிதினும் கடிய தண்டனை விரைவாக அளிக்கப்பட வேண்டும் என்ற ஒருமித்த கருத்து மக்களிடம் நிலவுவதே. பெண்களுக்கு வழங்கப்படும், ‘அறிவுரை’கள் பிழையானவையல்ல. இப்படிப்பட்ட வன்கொடுமைக்கு வருங்காலத்தில் பெண்கள் ஆளாகக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் தரப்படுபவையே.

- வில்லவன் கோதை

தெருவில் ஒரு வெறிநாய் சுற்றுகிறது என்றால் யாரும் வீட்டைவிட்டு வெளியே வராதீர்கள் என்று சொல்வது சரியா அல்லது வெறிநாயை அப்பறப்படுத்த என்ன செய்ய வேண்டுமோ அதற்குரியவற்றைச் செய்வது சரியா? பாலின பேதமின்றி அனைத்துத் துறையிலும் இருவரும் இணைந்து சாதிக்கும் இந்தத் தலைமுறையில் பெண்ணுக்கு ஆணால் கொடூரம் இழைக்கப்படும்போது பெண் என்ற ஒரே காரணத்துக்காக, அநீதி இழைக்கப்பட்ட பெண்களையே அவதூறு பேசுவது எவ்வகையில் நியாயம்?

 ‘சேலையில் முள் பட்டாலும் முள் மீது சேலை பட்டாலும் பாதிப்பு சேலைக்குத்தான்’ என்ற உதவாத பழமொழியை எத்தனை காலத்துக்குச் சொல்லிக்கொண்டே இருக்கப் போகிறோம்?

அண்மையில் ஜெர்மனிக்குச் சென்று வந்தேன். என் மகளின் வீடு, ஒரு பள்ளிக்கு எதிரில் இருக்கிறது. மாணவர்கள் ஒன்றுகூடி பேசும்போது பெண்கள் அவர்களைக் கடந்து சென்றால், இயல்பாக, ‘ஹாய்’ சொல்வர்; அவ்வளவுதான். பின் அவர்களைத் திரும்பிப் பார்ப்பதோ கிண்டல் அடிப்பதோ கிடையாது. ஒருவரையொருவர் பார்க்கையில் எவ்வித வேறுபாடும் இன்றி நட்பான புன்னகையோடு கடந்து செல்வதை பல நாட்கள் ரசித்ததுண்டு.

 அந்நாட்டில் பாலியல் கல்வி இரண்டாம் வகுப்பிலேயே தொடங்கிவிடுகிறது. அந்தந்த வயதுக்கே உரிய விவரங்களைத் தெளிவாகக் கற்பிக்கின்றனர். உடற்கூறால் நீ ஆண், நீ பெண். மற்றபடி இரு இனத்துக்கும் உரிய உணர்வுகள் எல்லாமே ஒன்றுதான் என்பதை தெளிவாக்கிவிடுகின்றனர். ஏன் இந்தத் தெளிவை நம் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கக் கூடாது? நம் நாட்டில் பாலியல் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டால் பாலியல் வன்கொடுமைகள் குறைய வாய்ப்புள்ளது.

பாலின வேறுபாட்டைக் கல்விக்கூடங்கள் தவிர்க்க வேண்டும். ஆண், பெண்ணுக்கான உளவியல் ரீதியான கருத்துக்கள் பாடமாக்கப்பட வேண்டும். கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். பாடத்திட்டங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தினால் சமுதாய மாற்றம் சாத்தியமே.

- மி.மரிய அமலி, நாகமலை, மதுரை.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x