Last Updated : 09 Apr, 2019 01:02 PM

 

Published : 09 Apr 2019 01:02 PM
Last Updated : 09 Apr 2019 01:02 PM

சேதி தெரியுமா? - ‘எமிசாட்’ செயற்கைக்கோள் வெற்றி

ஏப்ரல் 1: நாட்டின் முதல் மின்னணுக் கண்காணிப்பு செயற்கைக்கோளான ‘எமிசாட்’, பி.எஸ்.எல்.-சி45 ஏவுகணையில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அத்துடன், 28 சர்வதேச வாடிக்கையாளர் செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டன.

‘இஸ்ரோ-டி.ஆர்.டி.ஒ.’ இணைந்து மேம்பட்ட மின்னணு நுண்ணறிவுச் செயற்கைக்கோளான ‘எமிசாட்’டை உருவாக்கியிருக்கின்றன. இந்தச் செயற்கைக்கோள், பனி, மழை, கடலோர மண்டலங்கள், நிலப்பரப்பு, காடுகள், அலை உயரங்கள் ஆகியவற்றைத் துல்லியமாகக் கண்காணிக்க உதவும்.

உணவுத் தட்டுப்பாடு: 11.3 கோடி பேர் பாதிப்பு

ஏப்ரல் 2: 2018-ம் ஆண்டில், உலகின் 53 நாடுகளைச் சேர்ந்த 11.3 கோடி பேர் அதீத உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டதாக ஐ.நா-ஐரோப்பிய யூனியன் கூட்டறிக்கை தெரிவிக்கிறது. ‘உலகளாவிய உணவுத் தட்டுப்பாட்டு அறிக்கை’ என்ற தலைப்பில் வெளியான இந்த அறிக்கை, கடந்த மூன்று ஆண்டுகளில் 10 கோடிக்கும் அதிகமான மக்கள் உலக அளவில் தீராத-பசியால் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கிறது.

ஆப்கானிஸ்தான், காங்கோ, எத்தியோப்பியா, நைஜீரியா, தெற்கு சூடான், சூடான், சிரியா, ஏமன் ஆகிய எட்டு நாடுகள் கடுமையான உணவுத் தட்டுபாட்டை எதிர்கொள்வது தெரியவந்துள்ளது. பருவநிலை மாற்றத்தால், இயற்கைப் பேரிடர்களால், 2.9 கோடி பேர் கடந்த ஆண்டில் கடுமையான உணவுத் தட்டுப்பாட்டை எதிர்கொண்டிருக்கின்றனர்.

முதல் 5ஜி மொபைல் நெட்வர்க்

ஏப்ரல் 3: உலகின் முதல் 5ஜி மொபைல் நெட்வர்க் தென் கொரியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ‘எஸ்கே டெலிகாம்’, ‘கேடி’, ‘எல்ஜி யூப்ளஸ்’ ஆகிய மூன்று டெலிகாம் நிறுவனங்களும் இணைந்து 5ஜி சேவையை வழங்கியிருக்கின்றன.

எந்த நாடு முதலில் 5ஜி சேவையை அறிமுகம் செய்யப்போகிறது என்ற போட்டாபோட்டி இருந்த நிலையில், அமெரிக்காவின் வெரிஸோன் டெலிகாம் நிறுவனமும் சிகாகோ, மினியாபொலிஸ் பகுதிகளில் ஏப்ரல் 3 அன்று 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியது. ஆனால், அமெரிக்காவைவிட இரண்டு மணி நேரம் முன்னதாக தென் கொரியாவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

யூ.பி.எஸ்.சி.: ராஜஸ்தான் முதலிடம்

ஏப்ரல் 5: குடிமைப் பணிகளுக்கான 2018 தேர்வு முடிவுகளை யூ.பி.எஸ்.சி.
வெளியிட்டது. இதில் ராஜஸ்தானைச் சேர்ந்த கனிஷ்க் கட்டாரியா முதலிடத்தையும் அக் ஷத் ஜெய்ன், இரண்டாம் இடத்தையும் பிடித்திருக்கின்றனர்.

 மத்திப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜுனைத் அஹமது மூன்றாவது இடத்தையும், ஸ்ருஷ்டி ஜெயந்த் தேஷ்முக் பெண்களில் முதலிடத்தையும் ஒட்டுமொத்த தரவரிசையில் ஐந்தாவது இடத்தையும் பிடித்திருக்கின்றனர். இந்தத் தேர்வில், 577 ஆண்கள், 182 பெண்கள் என ஒட்டுமொத்தமாக 759 பேர் தேர்வாகியிருக்கின்றனர். 2018, ஜூன் 3 அன்று நடைபெற்ற யூ.பி.எஸ்.சி. தொடக்கநிலைத் தேர்வை 4,93,000 பேர் எழுதியிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x