Published : 15 Apr 2019 12:58 pm

Updated : 15 Apr 2019 12:58 pm

 

Published : 15 Apr 2019 12:58 PM
Last Updated : 15 Apr 2019 12:58 PM

பொருளாதாரமும் தேர்தலும்!

திருமணம், தேர்தல் இரண்டிலும் நாம் விரும்புவது கிடைப்பதில்லை என்பார்கள். முந்தையது முடிந்துபோனது. அதை விட்டுவிடலாம். அரசியல் கட்சிகள் பற்றி அலசும் ஐடியாவும் இல்லை.

ஏதாவது எக்குத்தப்பாகச் சொல்ல, கட்சிக்காரர்கள் அடிக்க வருவார்கள். ஒரு மாறுதலுக்கு எந்தக் கட்சி சார்பும் இல்லாமல் தேர்தல் களோடு நாட்டின் பொருளாதாரத்துக்கு உள்ள தொடர்பு பற்றி பேசுவோம்.

அரசியலுக்கும் பொருளாதாரத்துக்கும் பத்து பொருத்தம் உண்டு. ஏழாம் பொருத்தமும் உண்டு என்பார்கள் சிலர். அதைப் பற்றி பிறகு பார்ப்போம். பொதுவாகவே தேர்தல் சமயத்தில் இந்தியப் பொருளாதாரம் லேசாக தொய்வடைகிறது என்கிறது ஒரு ஆய்வு.

கடந்த முப்பது வருடங்களாக முக்கிய பொருளாதார காரணிகளை ஆய்வு செய்ததில், தேர்தல் நெருங்கும் போது பொருளாதார செயல்களின் வேகம் குறைகிறது என கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், அரசாங்க செலவுகள் அதிகரிக்கிறதாம். ஏற்கெனவே போட்ட ரோட்டுக்கு மேலேயே புது ரோடு போடுவது, விவசாய கடன் முதல், காலை கடன் வரை எல்லா கடன்களையும் தள்ளுபடி செய்வது என ‘ஊரான் வீட்டு நெய்யே பொண்டாட்டி கையே’ என ஆகிவிடுகிறது.

இதன் விளைவு, நம்முடைய பர்ஸ் வீக்கமடைகிறதோ இல்லையோ பணவீக்கம் நன்றாக வீக்கமடைகிறது. ஆனால், நீண்டகால அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சியைப் பார்த்தால் பெரியதாக ஒன்றும் இருப்பதில்லை.

கட்சிகள் வாரி இறைக்கும் பணமும் அப்படியொன்றும் அதிக ஓட்டாக மாறி விடுவதில்லை. இருந்தும் எல்லா அரசுகளும், எல்லா கட்சிகளும் அதைத்தான் செய்கின்றன. மக் களுக்காக ஆக்கபூர்வமாக எதையும் செய்யாத பட்சத்தில், பணத்தைக் கொடுத்து வாயை அடைக்கும் செயலாகவே இது இருக்கிறது.

ஒருவர் பொருளாதாரத்தைப் புரிந்து கொண்டால், எந்த நாட்டின் அரசியலையும், அரசியல் தலைவர்கள் எடுக்கும் முடிவுகளையும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.

இலவசங்கள் கிடையாது, சலுகைகள் கிடையாது, நாட்டின் வளர்ச்சியும், மக்களின் நலனும் நீண்டகால நோக்கில் திட்டமிட்டு மேம்படுத்தப்படும், வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றபடியான வாக்குறுதிகளை மட்டுமே அளிக்கும் அரசியல் கட்சிகள் அல்லது தலைவர்கள் நாட்டில் உண்டா என்றால், சத்தியமாக இல்லை.

தேர்தல் முன் புதிய திட்டங்கள் தொடங்கப் படுவது கணிசமாக குறைகிறது. கண்முன் இருப்பது பிசாசு என்றாலும் வரப்போகும் புதிய அரசு மட்டும் தேவதையாகவா இருக்கப்போகிறது என்று, முதலீட்டாளர்களும் தொழிலதிபர்களும் புதிய தொழில்கள் தொடங்க தயங்குகிறார்கள்.

தொழிற் கடன் பெறுவது வெகுவாக குறைகிறது. எதற்கு இப்பொழுது கடன் வாங்கி முதலீடு செய்ய வேண் டும், அடுத்தது யார் வருகிறார்கள், அவர்கள் ‘கொள்கை’ என்ன என்று அதற்கு பிறகு பார்ப்போம் என காத்திருக்கின்றனர். கொள்கை என்பதற்கு எத்தனை கமிஷன் என்றும் பொருள் காணலாம்!

அதுவும் சில அரசாங்கங்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். பாவம் அவர்களுக்கு கூட்டணி தர்மசங்கடங்கள் இருக்கும். அமைச்சரவை களுக்கிடையே அக்கப்போர் நடக்கும். நல்ல நாளிலேயே ஒரு திட்டம் தயாரித்தோம் அதை ஒழுங்கு மரியாதையாய் அமுல்படுத்துவோம் என்றில்லாமல் அடித்துக்கொண்டு இழுத் தடிப்பார்கள்.

தேர்தல் சமயமென்றால் கேட்கவே வேண்டாம். ஏதோ கொள்ளை போவது போல் கொள்கை முடிவு எடுக்கவே தயங்குவார்கள். பொருளாதாரம் பாயை விரித்து படுத்து அதுவும் பத்தாமல் குறட்டை விட்டுத் தூங்கும்!

புதிய தொழில்கள் தொடங்குவது குறையும். அதேநேரம் இருக்கும் தொழில்களும் ம்யூட் பட்டனை அமுக்கியது போல் கம்மென்று இருக் கும். தொழிலை விருத்தி செய்யும் எண்ணம் உள்ளவர்கள் கூட தங்கள் ஆசையை சுருக்கிக் கொள்வார்கள். வேலைக்கு ஆளெடுப்பதும் குறை யும். இது ஒருபக்கம் என்றால், தேர்தல் சமயத்தில் நுகர்வு சந்தையும் கணிசமாக அடிவாங்குகிறதாம்.

அதாவது, தேர்தல் சமயத்தில் மக்கள் பொருட்கள் வாங்குவதை குறைத்துக் கொள்கிறார் கள் என்கிறது ஆய்வு. அதற்காக தேர்தல் முடியும் வரை பல் தேய்ப்பதையும், காபி குடிப்பதை யும் நிறுத்துகிறார்கள் என்றில்லை. புதிய டீவி வாங்குவது, வீடு வாங்குவதை தள்ளிப் போடுகிறார்கள்.

காரணம், புதிய அரசு ஏதாவது சலுகை தராதா என்ற நப்பாசை ஒரு புறம். அடுத்து யார் வருவார்களோ என்ன நடக்குமோ என்ற ஒருவித ‘மூட் அவுட்’ மறுபுறம்.

அதெல்லாம் இல்லை ஒரு கை பார்ப்போம் என்று நினைக்கும் கம்பெனி கள் விளம்பரங்களை கூட்ட முயன்றாலும், அரசியல் கட்சி விளம்பரங்களின் சத்தத்தில், அவை விழலுக்கு இறைத்த விளம்பர நீராகிவிடும். சாலைகளில் ஒரு பேனர் வைக்க கூட இடமில்லாமல் அரசியல் கட்சிகள் விளம்பர தட்டிகளைக் கட்டினால் கம்பெனி விளம்பரதாரர்கள் எங்கு தான் போவார்கள் பாவம்.

போதாக்குறைக்கு இந்த மாரல் கோட் ஆஃப் காண்டக்ட் என்ற சமாச்சாரம் வேறு. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அரசாங்கம் புதிய திட்டங்கள், அறிவுப்புகள் செய்யக்கூடாதென்று சட்டம் பாயும். ஐந்து வருடம் ‘மாரலே’ இல்லாமல் ஆட்சி செய்யலாம், தேர்தல் சமயத்தில் மட்டும் ‘மாரல்’ வேண்டும் என்று என்ன நேர்த்திக் கடனோ? இதனால் அரசின் கொஞ்ச நஞ்ச செயல்பாடும் ஸ்தம்பிக்கும்.

அரசின் கால்களை கரையான் அரிக்கத் தொடங்கும். அரசு அதிகாரி கள் அலுவலகத்தில் முழு நேர ஓய்வில் இருப்பார் கள். அரசு அலுவல்கள் தொடர்பாக எந்த விஷயத்தைக் கேட்டாலும், தேர்தல் முடியட்டும் பார்க்கலாம் என்பதுதான் பதிலாக இருக்கிறதாம்.

பிறகு பார்ப்போம் என்று கூறிய விஷயத்துக்கு வருகிறேன். எது என்கிறீர்களா? இதுதான் நம் பிரச்சினையே. எளிதில் மறப்பது நம் பிறவி குணம். அதுவும் தேர்தல் சமயங்களில் இந்த வியாதி முற்றி ஊரெங்கும் தொற்று நோயாய் சுற்றியடிக்கும்.

அரசியல்வாதிகள் செய்த தவறை, புரிந்த ஊழலை, அடித்த கொள்ளையை காலம் ஓடி விட்டது ஒழிந்து போகிறது என்று சுத்தமாய் மறந்து நம் ஓட்டுகளை மொத்தமாய் சாக்கடையில் போடுவோம்.சரி, அதை விடுங்கள். விஷயத்துக்கு வருகிறேன்.

ஒரு கட்சியின் பொருளாதார செயல் திறனுக்கும் அதன் தேர்தல் வெற்றி வாய்ப்புகளுக்கும் சம்பந் தம் இருக்கிறதா? நல்ல பொருளாதார செயல் திறன் ஒரு கட்சியின் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத் துமா? இல்லை ஜாதி, மதம், கோயில், சிறு பான்மையினர் ஓட்டு போன்றவைதான் தேர்தலில் ஒர்க் அவுட் ஆகிறதா?

நம் போறாத காலம், நமக்கென்று வாய்க்கும் பல டிவி சேனல் பேச்சாளர்கள், பத்திரிகைகள் சிருஷ்டிக்கும் கட்டுக்கதைகளை, பத்து பைசா வுக்குப் பெயராத வெட்டிப் பேச்சுக்களை, அடித் தளமே இல்லாத அரைகுரை அட்வைஸ்களை கேட்டுத் தொலைக்கிறோம். கேட்டது போதாமல் அதை வேத வாக்காக நம்பித் தொலைக்கிறோம்.

ஆதாரம் சார்ந்த பகுத்தாய்வை தேடிப் பிடித்துப் படித்துப் பார்ப்பதில்லை. 2004-ல் பிஜேபி ‘ஒளிரும் இந்தியா’ என்று பிரச்சாரம் செய்ததால் தான் அது தோற்றது என்று அடித்துக் கூறினர் சிலர். ஏழைபாழைகளுக்கு எரிச்சலாம். கிராம மக்களுக்கு அந்த பிரச்சாரம் குடைச்சல் கொடுத்ததாம். ஏதோ ஓட்டு போட்ட ஒவ்வொருவரும் பொத்தானை அழுத்தும் முன் ஒரு பாடு இதை புலம்பியது போல் புளுகுகிறார்கள்.

அதேபோல் 2009-ல் யூபிஏ அரசு வெற்றி பெற்றதற்கு மொத்த காரண மும் MGNREGA திட்டம் தான் என்று, ஏதோ அதில் பயனடைந்தவர்கள் எல்லாரும் சங்கம் வைத்து சேர்ந்து வந்து ஓட்டு போட்டது போல் ஓளமிடுகிறார்கள்.

உண்மை இந்த இரண்டுக்குள் எங்கோ தான் இருக்கிறது என்று எத்தனையோ ஆய்வுகள் தெளிவாக விளக்கிவிட்டன. அதைப் பற்றிப் பேச ஆளில்லை, ஆர்வமுமில்லை.

80 கோடி மக்களுக்கு மேல் ஓட்டுச் சாவடிக்கு காவடி எடுத்துச் செல்லும் நாடு இது. அவர்களை விட அதிகமாக ஜாதிகள். மதம் பிடித்த யானைகளை விட தன் மதம் பிடித்த வாக்காளர்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மொழி.

ஒவ்வொரு மொழியையும் அது சரிந்து விழுவது போல் தாங்கிப் பிடிக்கிறேன் பேர்வழி என்று தடியெடுத்தவனெல்லாம் தலைவர்கள். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு பிரச்சினை. இத்தனைக்கும் நடுவில் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாத பொய் பிரச்சாரங்கள்.

நம் ஜனநாயகத்துக்கு எழுபத்திரண்டு வயதானாலும் அது தன்னை தெரிந்துகொள்ள ஐம்பது அறுபது வருடங்கள் தேவைப்பட்டுவிட்டது. மக்களிடையே படிப்பறிவு இப்பொழுது தான் கொஞ்சத்துக்கு கொஞ்சம் வளர்ந்திருக்கிறது.

தாராளமயமாக்கம், உலகமயமாக்கம், தனியார்மயமாக்கம் போன்ற வார்த்தைகளுக்கு முதலில் எதிர்ப்பு கிளம்பி பிறகு காலப்போக்கில் அவைகளைப் பற்றிய புரிதல் பெற்று இனி இதை எதிர்த்து பயன் இல்லை, இந்த தத்துவங்களை நமக்கேற்றபடி வளைத்தால்தான் வாழ முடியும், வளர்ச்சியடைய முடியும் என்ற பிரக்ஞையே இந்த நூற்றாண்டில் தான் வளரத் தொடங்கியிருக்கிறது.

இன்னும் சில தேர்தல்களைக் கண்டு, மேலும் சில மாற்றங்களை கடந்து சென்றால் மட்டுமே முதிர்ச்சி வரும். தெளிவு பெறும். பொருளாதாரம் சார்ந்த செயல்திட்டங்களின் உண்மையான தாக்கம் அப்பொழுது தான் தேர்தலில் வெளிப்படையாகத் தெரியும். அவைகள் தான் தேர்தலின் போக்கையே நிர்ணயிக்கும். அது வரை காத்திருந்துதான் ஆக வேண்டும்.

ஆனால், ஒன்று சொல்ல முடியும். பொருளாதார செய்திகளும் சிந்தனைகளும் அதைப் பற்றிய விவாதங்களும் தெய்வாதீனமாக இப்பொழுது தான் பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் பிரசுரிக்கப்படுவதைப் பார்க்கிறோம்.

ஒன்றும் வேண்டாம். ரிசர்வ் வங்கி என்று ஒன்று உண்டு, அதற்கு கவர்னர் என்று ஒருவர் இருக்கிறார் என்பதே இப்பொழுது தான் பலருக்கு தெரிந்திருக்கிறது. அவர் ராஜினாமா செய்த விஷயம் மக்கள் மத்தியில் பேசப்பட்டதே ஒரு வெற்றி தான். பொருளாதார சிந்தனைகள் பற்றி விவாதிக்க தொடங்கியிருக்கிறோம்.

பைசா பேராத காலாவதியான சித்தாந்தங்களை கட்டிக்கொண்டு அழுது, நம்மையும் அழவைக்கும் கட்சிகளை இப்பொழுது தான் ஓரம்கட்ட தொடங்கியிருக்கிறோம். இந்த நாட்டுக்கும் ஒரு நாள் இல்லை ஒரு நாள் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

வரும் தேர்தலில் இல்லையென்றாலும் வருங்கால தேர்தல் ஒன்றில் ஒரு மாறுதலுக்கு மக்கள் வெற்றி பெறுவார்கள் என்று நம்புவோம்!

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

பொருளாதாரமும் தேர்தலும்தேர்தல்அரசாங்க செலவுகள் இந்தியப் பொருளாதாரம்பொருளாதார வளர்ச்சிவாரி இறைக்கும் பணம்வேலைவாய்ப்புதேர்தல் சமயம்MGNREGA திட்டம்ஒளிரும் இந்தியா

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author