Last Updated : 30 Mar, 2019 05:50 PM

 

Published : 30 Mar 2019 05:50 PM
Last Updated : 30 Mar 2019 05:50 PM

ஆடும் களம் 44: ஒரு அம்பின் லட்சியப் பயணம்!

இந்தியாவில் யாரும் எளிதில் தேர்வுசெய்ய முன்வராத ஒரு விளையாட்டை, ஒருவர் ஈடுபாட்டுடன் விளையாடுகிறார் என்றால், அந்த விளையாட்டு மீது அவருக்கு எவ்வளவு காதல் இருக்கும்? இருக்க முடியும். வில்வித்தைமீது காதல்கொண்டு விளையாடி, சுயம்புவாக உருவெடுத்தவர் தீபிகா குமாரி. வில் வித்தையில் நம்பர் ஒன் வீராங்கனை என்ற மகத்தான பெயரெடுத்தவர் இவர்!

கிரிக்கெட் மூலம் தன் ஊரை உலகறியச் செய்த மகேந்திர சிங் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியிலிருந்து வந்தவர் தீபிகா குமாரி. ராஞ்சியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் இருக்கும் ரட்டு ஷாட்டி கிராமத்தில் தீபிகா பிறந்து வளர்ந்தார். அவருடைய அப்பா சிவ்நாராயண் மகத்தோ, ஆட்டோ ஓட்டுநர். அம்மா கீதா, செவிலி. வளரிளம் பருவத்தினருக்கே உரிய துடுக்குத்தனத்துடன் கிராமத்தைச் சுற்றிவந்த தீபிகா, எதையும் குறி பார்த்து கல்லால் அடிப்பதில் திறமைசாலி. மாமரத்தில் காய்களைக் குறி பார்த்து வீழ்த்தும் தீபிகாவைச் சுற்றி எப்போதும் நண்பர்கள் குழுமி இருப்பார்கள்.

மாங்காய் மீது குறி

மாங்காய்களைக் குறி பார்த்து வீழ்த்தும் தீபிகாவின் சாகசம் அவருடைய அம்மா, அப்பாவுக்குத் தெரிந்தபோது, மற்ற பெற்றோரைப் போல் கோபப்படவில்லை. தீபிகாவுக்குள் வில்வித்தை திறமை இருக்கிறது என மகிழ்ந்தார்கள். அதில் அவரைக் களமிறக்கினால், பெரிய ஆளாக வருவார் என நினைத்தார்கள். எப்படியாவது தீபிகாவை வில்வித்தைப் பயிற்சியில் சேர்க்கப் பெற்றோர் பகீரத முயற்சி செய்தார்கள். ஆனால், அந்த முயற்சிகள் எல்லாவற்றுக்கும் முட்டுக்கட்டையாகப் பொருளாதாரவசதி இருந்தது.

மூங்கிலில் பயிற்சி

வில்வித்தைப் பயிற்சியில் சேர்க்க அம்மாவும் அப்பாவும் எடுத்த முயற்சிகளை அருகே இருந்து கவனித்த தீபிகாவால் சும்மா இருக்க முடியவில்லை. தன் பெற்றோரின் கனவுக்கு உயிர்கொடுக்க நினைத்தார். சிறு வயதிலேயே மூங்கிலால் வில்லையும் அம்பையும் செய்து பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினார். வீட்டில் செய்த வில்லால் குறி பார்த்து இலக்கை அடையும் திறமையை வளர்த்துவந்தார் தீபிகா.

அவருடைய திறமை நாளுக்கு நாள் மேம்படுவதை அறிந்த பெற்றோருக்கு இருப்புக்கொள்ளவில்லை. தங்கள் மகளின் திறமையை வீணடிக்க அவர்கள் தயாராக இல்லை. தங்களுடைய எல்லாத் தேவைகளையும் சுருக்கிக்கொண்டு மகளுக்காகச் செலவுசெய்யத் தொடங்கினார்கள்.

தீபிகாவுக்கு 11 வயது ஆனபோது ராஞ்சியில் இருந்த ‘அர்ஜுன் வில்வித்தை அகாடமி’யில் சேர்த்தார்கள். வீட்டில் செய்த வில்லை வைத்தே தன் திறமையை வளர்த்த தீபிகா, வசதி, வாய்ப்புகளுடன் கூடிய களம் கிடைத்தால் சும்மா இருந்திருப்பாரா? வேகமாக வில்வித்தை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். 2006-ல் உறவினர் மூலம் ‘டாடா வில்வித்தை அகாடமி’யில் தீபிகாவுக்கு இடம் கிடைத்தது. 500 ரூபாய் ஊக்கத்தொகையுடன் மூன்று ஆண்டுகளுக்கு அங்கே தீவிரப் பயிற்சியில் தீபிகா ஈடுபட்டார்.

வில்வித்தை சாம்பியன்

வில்வித்தையில் முன்னேற்றம் அடைந்த தீபிகா, 15 வயதில் ‘கேடட் உலக சாம்பியன்ஷிப்’பில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றார். முதல் சர்வதேசப் போட்டியிலேயே பட்டம் வென்றார். அதே ஆண்டில் அமெரிக்காவில் நடந்த இளையோர் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றார். அதே தொடரில் மகளிர் குழுவிலும் இடம்பிடித்துத் தங்கப் பதக்கம் வென்றார். அதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கும் சென்று வில்வித்தைப் போட்டியில் பங்கேற்கத் தொடங்கினார். ‘ரிகர்வ்’ பிரிவில் திறமைவாய்ந்த தீபிகா, பங்கேற்ற பெரும்பாலான போட்டிகளில் வெற்றியை வசப்படுத்தினார். இதனால், பதக்கங்கள் குவியத் தொடங்கின.

2010-ல் நடைபெற்ற டெல்லி காமன்வெல்த் போட்டியில் இரு தங்கப் பதக்கங்களை தீபிகா கைப்பற்றினார். அதே ஆண்டு சீனாவில் குவாங்ஷு நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். 2012-ல் சீனாவில் நடைபெற்ற உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் முதன் முறையாகப் பங்கேற்று, தங்கப் பதக்கம் வென்று உலக சாம்பியனாக உருவெடுத்தார். தொடர்ச்சியாகப் பல்வேறு போட்டிகளில் உலக சாதனைகள் படைத்ததால், முதல் நிலை வீராங்கனை என்ற அந்தஸ்தையும் தீபிகா பெற்றார்.

ஏமாற்றிய ஒலிம்பிக்

தொடர் வெற்றிகளால் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் தீபிகா மீது எதிர்பார்ப்பு குவிந்தது. ஆனால், தனிநபர் முதல் சுற்றுப் போட்டியில் தீபிகா குமாரி, இங்கிலாந்தின் ஆமி ஆலிவரிடம் தோற்று, கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் நம்பிக்கையைத் தகர்த்தார். ஒலிம்பிக்கில் சறுக்கியபோதும் சர்வதேசத் தொடர்களில் தீபிகாவின் வெற்றிப் பாய்ச்சல் தொடர்ந்தது.

2013-ல் பிரான்ஸில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் அதே ஆண்டில் ஷாங்காயில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். 2015-ல் டென்மார்க்கில் நடைபெற்ற உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் மகளிர் குழுப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

aadum-2jpgright

2016 ரியோ ஒலிம்பிக் ரிகர்வ் மகளிர் பிரிவில் தகுதிபெற்ற தீபிகா குமாரி அடங்கிய இந்திய அணி, 7-வது இடத்தைப் பிடித்து வெளியேறியது. இரண்டாவது முறையாக ஒலிம்பிக் பதக்க வாய்ப்பு பறிபோனதில் தீபிகாவுக்குச் சற்று வருத்தம்தான். 2020-ல் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் எப்படியும் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் முன்பைவிடத் தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் தீபிகா.

காத்திருக்கும் லட்சியம்

கடும் பயிற்சியின் விளைவாகக் கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடந்த உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டி தனிநபர் பிரிவில் ஐந்து ஆண்டுகள் கழித்துத் தங்கப் பதக்கத்தை வென்று தன்னுடைய பழைய பாணிக்குத் திரும்பியிருக்கிறார். வில்வித்தையில் சாதனை மேல் சாதனை படைத்த தீபிகாவைப் பாராட்டி 2012-ல் மத்திய அரசு அர்ஜுனா விருது வழங்கிக் கவுரவித்தது. இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருது 2016-ல் இவருக்கு வழங்கப்பட்டது.

இரண்டு ஒலிம்பிக்கில் பங்கேற்றும் தடம்பதிக்க முடியாத வலி தீபிகாவுக்கு நிறையவே உண்டு. அதனாலேயே, ஒலிம்பிக்கில் வெல்ல வேண்டும் என்ற கனவோடு ஒவ்வொரு நாளையும் பயிற்சிக்காகச் செலவிட்டு வருகிறார். இளமை, ஆற்றல், வெற்றிக்காகக் கடைசிவரை போராடும் உறுதியான மனம் போன்றவையே தீபிகாவின் வெற்றி மந்திரங்கள். எனவே, டோக்கியோ ஒலிம்பிக்கில் வில்வித்தையில் தீபிகா இந்தியாவுக்குப் பெருமை சேர்ப்பார் என்பதில் சந்தேகமில்லை.

(அடுத்த இதழில் நிறைவடையும்)

கட்டுரையாளர் தொடர்புக்கு: karthikeyan.di@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x