Last Updated : 17 Mar, 2019 01:21 PM

 

Published : 17 Mar 2019 01:21 PM
Last Updated : 17 Mar 2019 01:21 PM

பெண்கள் 360: ஒடுக்கப்பட்டவரின் உரிமைக்குரல்

எண்ணமும் சொல்லும்: ஆண்களால் மட்டும் முடியுமா?

உங்கள் மீது ஒருவர் வெறுப்பை உமிழ்ந்தால், அந்த வெறுப்பை உங்கள் காலடியில் போட்டுவிட்டு, பதிலுக்கு அன்பைக் காட்டுங்கள். வாழ்வின் அனைத்தையும் உங்களுக்கு அன்பு கற்றுத்தரும். நீங்கள் ஆண்களைவிட ஸ்மார்ட். உங்களிடம் யாராவது இது பெண்களால் முடியாது என்று சொன்னால், ஆண்களால் மட்டும் அது முடியுமா என்று திருப்பிக் கேளுங்கள். நான் நாடாளுமன்றம், மாநில சட்டப்பேரவைகளைக் கவனிக்கிறேன்.

அங்கு, போதுமான பெண்கள் இல்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது 33% இட ஒதுக்கீடு நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல; மத்திய அரசு வேலைகளிலும் வழங்கப்படும். நான் மேடையிலும் நீங்கள் கீழேயும் நின்றுகொண்டு நடக்கும் இந்தக் கேள்வி - பதில் எனக்கு ஏற்புடையதாக இல்லை. நாம் இருவரும் சமமான தளத்தில் நின்றுதான் இதைப் பேசியிருக்க வேண்டும். பெண்கள் ஆண்களுக்குச் சமமானவர்களாகப் பார்க்கப்பட வேண்டும்.

- ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர்.

ஒடுக்கப்பட்டவரின் உரிமைக்குரல்

‘பசி ஓர் ஆசிரியரும்கூட. பசியால் வாடுபவர்களே வருங்காலம் குறித்தும் தங்கள் குழந்தைகள் குறித்தும் சிந்திப்பவராக உள்ளனர்.’

- கரோலினா மரியா டி ஜீசஸ்

கரோலினா மரியா டி ஜீசஸ், உலகப் புகழ்பெற்ற எழுத்தாளராக மாறுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏன், அவரேகூட அப்படி நினைத்ததில்லை. ஆனால், அவரது முதல் புத்தகமான ‘இருளின் குழந்தை’ சர்வதேச அளவில் அதிகம் விற்ற புத்தகமாகி சாதனை படைத்தது. 1914 மார்ச் 14 அன்று பிரேசிலில் கறுப்பினக் குடும்பத்தில் மரியா பிறந்தார். அப்பா இறந்துவிட்ட நிலையில் தாயாரால் மிகுந்த கஷ்டத்தினூடே வளர்க்கப்பட்டார்.

முறையான கல்வியும் போதிய அளவில் அவருக்கு அளிக்கப்படவில்லை. இருப்பினும், அவரது எழுத்தின் தேர்ந்த நடையும் வாக்கியங்களின் கட்டமைப்பும் வார்த்தைகளின் வீரியமும் மலைப்பை ஏற்படுத்தும்விதமாக இருந்தன.  உலகின் மிகப் பெரும் நகரங்களில் ஒன்றான ‘சாவ் பாலோ ஃபேவலாஸ்’ நகரில் வசித்த மக்களின் துயரத்தைத் தனது தேர்ந்த எழுத்துகளினால் படிப்பவரின் கண்முன்னே நிறுத்தி, அவர்களின் இதயத்தில் தீராத பாதிப்பை ஏற்படுத்தினார்.

குப்பையைப் பொறுக்குவதே அவரது தொழில். அட்டைகளையும் குப்பைகளையும் கொண்டு தனக்கென வீடு கட்டிக்கொண்டார். டைரி எழுதுவது அவரது வழக்கம். ஒருவருடன் சண்டையிடும்போது, ‘நீ மன்னிப்பு கேட்காவிட்டால், உன்னைப் பற்றி எனது டைரியில் எழுதிவிடுவேன்’ என்று 1958-ல் மிகுந்த கோபத்துடன் சத்தமாகச் சொன்னார். அதை அங்கிருந்த ஒரு பத்திரிகை நிருபர் கேட்க நேர்ந்தது. ஆவல் மிகுதியால் அந்த நிருபர், மரியாவின் டைரியைப் படித்தார். அதன்பின் நடந்தவை அனைத்தும் வரலாறு. அவரின் டைரித் தொகுப்பு, புத்தகமாக வெளிவந்த மூன்று நாட்களிலேயே 10,000 பிரதிகள் விற்பனையானது. 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. 40 நாடுகளில் விற்கப்பட்டது. ஒடுக்கப்பட்டவர்களுக்காக பிரேசிலிலிருந்து உலகெங்கும் ஒலிக்கத் தொடங்கிய அவரது குரல், இன்றும் ஒலித்துக்கொண்டுள்ளது. அவரது 105-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகக் கடந்த வியாழன் அன்று சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது.

விண்வெளிப் பெண்கள்

பெண்கள் மட்டும் கலந்து கொள்ளும் முதல் விண்வெளி நடைப் பயணத்தை மார்ச் 29 அன்று நாசா நடத்த உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனைகளான அன்னெ மெக்லைன், கிரிஸ்டினா கோச் ஆகியோர் இந்த நடைப்பயணத்தைச் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து மேற்கொள்ள இருக்கின்றனர். கடந்த கோடைக்காலத்தில் பொருத்தப்பட்ட மின்கலங்களை மாற்றும் பணியை அவர்கள் இந்த நடைப்பயணத்தில் மேற்கொள்ள இருக்கின்றனர்.

இது சுமார் ஏழு மணி நேரம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1984 ஜூலை 25 அன்று ஒன்றுபட்ட சோவியத் யூனியனைச் சேர்ந்த  ஸ்வெட்லானா சாவிட்ஸ்கயா எனும் வீராங்கனை முதன்முறையாக விண்வெளியில் நடைப்பயணம் மேற்கொண்டார். 60 ஆண்டு கால விண்வெளிப் பயண வரலாற்றில், 35 ஆண்டுகளுக்குப் பிறகு, பெண்கள் மட்டுமே மேற்கொள்ளும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடைப்பயணம் நடைபெற உள்ளது.

பெண்கள் நிர்வகிக்கும் 600 வாக்குச்சாவடிகள்

5.03 கோடி வாக்காளர்களைக் கொண்ட கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 28 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. அங்கே ஏப்ரல் 18 முதல் 23 வரை தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு மொத்தம் 58,188 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 600 வாக்குச்சாவடிகள் முற்றிலும் பெண்களால் மட்டுமே நிர்வகிக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பெண்களின் பங்கீட்டை அதிகரிக்கும் நோக்கிலும் பெண்களுக்குச் சம உரிமை அளிக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார் தனது அறிக்கையில் தெரிவித்தார். இந்த 600 வாக்குச்சாவடிகளில் பணியாற்றவிருக்கும் தேர்தல் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் ஆகிய அனைவரும் பெண்களே.

தொடரும் அலட்சியம்

சாத்தூரில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. பாதித்த நபரிடம் இருந்து பெறப்பட்ட ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தின் பரபரப்பு அடங்குவதற்குள்ளாக சென்னையிலும் ஒரு பெண்ணுக்கு எச்.ஐ.வி. பாதித்த ரத்தம் ஏற்றப்பட்டது. சென்னை மாங்காட்டைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் மாங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குப் பரிசோதனைக்குச் சென்றுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ரத்தம் மிகவும் குறைவாக இருப்பதாகவும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குச் செல்லும்படியும் கூறியிருக்கிறார்கள். அதன்படி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவரது ரத்தத்தைப் பரிசோதித்த மருத்துவர்கள், இரண்டு யூனிட் ரத்தத்தை அவருக்கு ஏற்றியுள்ளனர். தொடர்ந்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலேயே மாதம்தோறும் மருத்துவப் பரிசோதனைக்கு அவர் சென்றுள்ளார். எட்டாவது மாதம் மருத்துவப் பரிசோதனை செய்தபோது எச்.ஐ.வி. தொற்று இருப்பதாகக் கூறியிருக்கிறார்கள்.

அதைக் கேட்டதும் அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். எச்.ஐ.வி. பாதிப்பால் மனம் உடைந்த அந்த பெண், தனக்கு ஏற்றப்பட்ட ரத்தத்தில் எச்.ஐ.வி. இருந்ததாகத் தெரிவித்து சுகாதாரத் துறைக்கு மனு அனுப்பினார். கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை நிர்வாகிகள் முதலில் இந்தத் தகவலை மறுத்தார்கள். இந்த நிலையில், அந்தப் பெண்ணுக்கு ‘எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்’தில் ‘சமுதாய நல ஒருங்கிணைப்பாளர்’ என்ற பணியைத் தமிழக அரசு வழங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x