Last Updated : 23 Mar, 2019 05:27 PM

 

Published : 23 Mar 2019 05:27 PM
Last Updated : 23 Mar 2019 05:27 PM

ஆடும் களம் 43: சென்னை ஸ்குவாஷ் புயல்!

இந்திய ஸ்குவாஷ் விளையாட்டைச் சர்வதேச அளவில் உயர்த்திப் பிடித்தவர் அவர். இந்திய ஸ்குவாஷ் விளையாட்டின் முடிசூடா ராணி. உலகத் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த தன்னிகரற்ற வீராங்கனை. இத்தனைப் பெருமைகளையும் படைத்த அந்த வீராங்கனை, தீபிகா பள்ளிக்கல்.

கேரளாவைப் பூர்விகமாகக் கொண்ட தீபிகா பள்ளிக்கல், சென்னையில் பிறந்தவர். அம்மா சூசன், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் விளையாடியவர். அம்மாபோல் தீபிகாவுக்கு கிரிக்கெட் மீதெல்லாம் ஆர்வம் பிறக்கவில்லை. ஸ்குவாஷ் விளையாட்டுக்கு அவர் வந்ததுகூட ஒரு விபத்துதான். பத்து வயதில் தோழி ஒருவர் மூலம் ஸ்குவாஷ் விளையாட்டு தீபிகாவுக்கு அறிமுகமானது. ஆனால், ஸ்குவாஷ் ராக்கெட்டைப் பிடித்த கையோடு, அடுத்த ஓராண்டில் தேசிய சாம்பியனாக தீபிகா உருவெடுத்ததெல்லாம் அதிசயம்!

தொழில்முறை ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனையாக தீபிகா 2006-ல் அடியெடுத்துவைத்தார். தீபிகாவிடமிருந்த ஸ்குவாஷ் திறமை வெளிப்பட்டது 2008-ல்தான். சென்னை ஓபனில் தனது முழுத் திறமையையும் வெளிச்சம் போட்டுக்காட்டினார் தீபிகா.

அதே ஆண்டில் பிரிட்டிஷ் ஓபன் ஜூனியர் சாம்பியன் (இது விம்பிள்டன் ஜூனியருக்கு இணையானது) பிரிவிலும் பல சாதனைகளைப் படைத்தார். அதேவேளையில் தன்னை இன்னும் மெருகேற்றிக்கொள்வதற்காக எகிப்திலும் சில காலம் ஸ்குவாஷ் பயிற்சியில் ஈடுபட்டார். பதின் பருவத்திலிருந்த தீபிகா, பெற்றோரைவிட்டுப் பிரிந்து பயிற்சியில் மூழ்கிக் கிடந்தார்.

aadum-2jpg

பெருமையான தருணம்

ஒரு லட்சியத்தை அடைய விடாமுயற்சி வேண்டும் என்பதற்குச் சரியான உதாரணம் தீபிகா. ஸ்குவாஷில் ஜூனியர் அளவில் பெற்ற தொடர்ச்சியான வெற்றிகள், அவருக்குப் புதிய அடையாளத்தைத் தந்தன. 15 வயதுக்குட்பட்ட ஐரோப்பிய - ஆசிய ஸ்குவாஷ் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை தீபிகா பெற்றார். ஆனால், அதன் பின்னணியில் தீபிகாவின் பெரும் உழைப்பு உண்டு.

16 வயதில் அந்த வயதுக்கே உரிய விளையாட்டு, கேளிக்கை, பொழுதுபோக்கு என எதிலும் தீபிகா ஈடுபாடு காட்டவில்லை. அவருடைய முழுக் கவனமும் ஸ்குவாஷ் மீது மட்டுமே குவிந்திருந்தது. அந்தக் காலகட்டத்தில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்று எப்போதுமே பயிற்சியில் மூழ்கிக்கிடந்தார்.

வேண்டாம் சினிமா

ஃபேஷன் துறையிலும் தீபிகாவுக்கு ஈடுபாடு இருந்தது. தீபிகாவை ஸ்குவாஷ் விளையாட்டின் மரியா ஷரபோவா என அழைத்தவர்கள் ஏராளம்; இந்தியாவின் அழகுப் பொம்மை என்று வர்த்தணித்தவர்களும் அநேகர். அந்த வேளையில் அவருக்கு சினிமா அழைப்புகளும் வந்தன. அப்போது முடிவெடுப்பதில் தடுமாறும் வயதுதான் தீபிகாவுக்கு. ஆனால், தீர்க்கமாக முடிவெடுத்தார்.

“சினிமா எனக்குத் தேவையில்லை; ஸ்குவாஷ் விளையாட்டில் நம்பர் ஒன் வீராங்கனையாக வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய லட்சியம்” என்று வெளிப்படையாக அறிவித்து சினிமா அழைப்புகளுக்கு முற்றுப்புள்ளிவைத்தார்.

தொடர்ந்து சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று வந்த தீபிகாவுக்கு வெற்றிகளும் குவியத் தொடங்கின. ஜெர்மன் ஓபன், பிரெஞ்ச் ஓபன், டச்சு ஓபன், ஆஸ்திரேலிய ஓபன், ஸ்காட்டிஷ் ஓபன், ஐரோப்பிய ஓபன் என ஜூனியர் நிலைகளில் பெரும் வெற்றிகளைப் பதிவுசெய்தார் தீபிகா. அதற்கு முன்புவரை ஆசியாவின் நம்பர் ஒன் ஜூனியர் ஸ்குவாஷ் வீராங்கனையாக மட்டுமே இருந்தார் தீபிகா.

தொடர் வெற்றிகளுக்குப் பிறகு 2012-ல் சர்வதேசத் தரவரிசையில் பெரிய முன்னேற்றத்தைக் கண்டார். சர்வதேசத் தரவரிசைப் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் கால் பதித்தார் தீபிகா. அந்த வகையில் ஸ்குவாஷில் முதல் பத்து இடங்களுக்குள் முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுப் பெருமையை அவர் பெற்றார்.

நாட்டுக்காகப் பதக்கங்கள்

ஸ்குவாஷ் விளையாட்டில் மைல் கல் தருணத்தை அடைந்தபோதும், அந்தப் பெருமை தன்னுடைய தலைக்கு ஏறாமல் தொடர்ந்து விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்திவந்தார். அது அவருக்கு இன்னும் வெற்றிகளைப் பெற்றுத்தந்தது. சீனாவில் நடந்த மக்காவ் ஓபன் போட்டித் தொடரில் ஆஸ்திரேலிய முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ரேச்சல் கிரின்ஹாமை வீழ்த்தி தீபிகா பட்டம் வென்றது அவருடைய திறமைக்கு மற்றுமொரு சாட்சியாக அமைந்தது. 2015-ம் ஆண்டில் கனடா ஓபனிலும் வெற்றி பெற்று அசத்தினார்.

வெறுமனே தொழில்முறைப் போட்டியாளராக மட்டுமல்லாமல், நாட்டுக்காகவும் பல்வேறு தொடர்களில் பங்கேற்று முத்திரை பதித்தவர் தீபிகா. 2014 கிளாஸ்கோ காமன்வெல்த் ஸ்குவாஷ் இரட்டையர் போட்டியில் ஜோஸ்னாவுடன் இணைந்து விளையாடி, தங்கப் பதக்கத்தை தீபிகா வென்றார். இதேபோல 2014 ஆசிய விளையாட்டுப் போட்டி மகளிர் ஸ்குவாஷ் அணி சார்பில் வெள்ளிப் பதக்கத்தையும் ஒற்றையர் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் தீபிகா வென்றார்.

கடந்த ஆண்டு கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் ஜோஸ்னாவுடன் இணைந்து விளையாடி வெள்ளிப் பதக்கத்தையும் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்று நாடு திரும்பினார். கடந்த ஆண்டு ஜகார்தாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டி ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்தார்.

ஒரே லட்சியம்

ஸ்குவாஷ் விளையாட்டில் தொடர்ச்சியாகத் தன்னைத் தக்கவைத்துக்கொள்ள தீபிகாவின் ஃபிட்னஸும் ஒரு முக்கியக் காரணம். ஒரு நாளின் பெரும்பாலான நேரத்தை ஸ்குவாஷ் பயிற்சியில்தான் கழிப்பார் தீபிகா. விளையாட்டில் அவர் காட்டும் வேகமும் துடிப்பும் அவரைச் சிறந்த ஷாட் மேக்கராக மாற்றின. இந்த விஷயத்தில் சக போட்டியாளர் ஜோஸ்னாவோடு தீபிகாவுக்கு ஆரோக்கியமான போட்டி நிலவியது.

பல சந்தப்பங்களில் இருவரும் ஒருவரையொருவர் எதிர்கொண்டும் விளையாடி இருக்கிறார்கள். இருவருக்கும் இடையே போட்டி இருந்தாலும், விளையாட்டு என்ற அந்த எல்லையைத் தாண்டி சிறந்த நட்பையும் ஜோஸ்னாவுடன் தீபிகா கடைப்பிடித்தார்.

ஸ்குவாஷில் உச்சம்தொட்ட 2012-ம் ஆண்டில் தீபிகாவுக்கு அர்ஜுனா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. கிரிக்கெட்டே பிடிக்காமல் இருந்த தீபிகா, கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கை 2015-ல் காதல் மணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு ஸ்குவாஷில் இன்னொரு ரவுண்டு வரும் முயற்சியோடு தீவிரமாகக் களமாடிவருகிறார். காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ள தீபிகாவுக்கு, ஒலிம்பிக்கில் ஸ்குவாஷ் விளையாட்டு இல்லையே என்ற ஆதங்கம் நீண்ட நாட்களாகவே உண்டு.

அந்தக் குறையைப் போக்கிக்கொள்ளச் சர்வதேச ஸ்குவாஷ் தரவரிசையில் முதலிடம் பிடிப்பதே இந்த ஸ்குவாஷ் புயலின் தற்போதைய உயர்ந்த லட்சியம்.

(வருவார்கள் வெல்வார்கள்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: karthikeyan.di@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x