Published : 08 Mar 2019 11:08 AM
Last Updated : 08 Mar 2019 11:08 AM

ராமரைப் போல் வாழ்ந்தவர் நம்பியார்! - கே.பி. ராமகிருஷ்ணன் நேர்காணல்

எம்.ஜி.ஆர் - நம்பியார் நடித்த ஏராளமான படங்களில் இடம்பெறும் சண்டைக் காட்சிகளில் நம்பியாருக்கு ஆஸ்தான டூப் நடிகராகவும் பல நேரத்தில் எம்.ஜி.ஆருக்கும் டூப்பாக நடித்து 50 ஆண்டுகள் தன் வாழ்க்கையை அவர்களுக்காக அர்ப்பணித்தவர் கே.பி.ராமகிருஷ்ணன்.

எம்.ஜி.ஆர். அரசியல் களத்தில் குதித்தபின் நீண்டகாலம் அவரது மெய்க்காப்பாளராகவும் செயல்பட்டுள்ளார். எம்.ஜி.ஆர். - நம்பியார் உடனான நினைவுகளுடன் சென்னை கோபாலபுரத்தில் வசித்துவரும் அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி… 

நம்பியாரை முதன்முதலாக எப்போது சந்தித்தீர்கள்?

1955-ம் வருடம் முதல் எம்ஜிஆர். நாடக மன்ற நாடகங்களில் நான் நடித்துவந்தேன். அவ்வப்போது அந்த நாடகங்களைக் காண நம்பியார் வருவார். முகத் தோற்றத்திலிருந்த ஒற்றுமையும் ஊர்ப்பாசமும் எங்களை இணைத்தது. டி. யோகானந்த் இயக்கிய ‘பூலோக ரம்பை’ (1958) என்ற படத்தில் ஜெமினியின் நண்பனாக நடித்திருந்தார் நம்பியார். பி.எஸ்.வீரப்பாவின் ஆட்கள் நம்பியாரைக் கட்டி வைத்து சாட்டையால் அடிப்பதுபோல் காட்சி.

அதில் நடிக்க ஒரு டூப் வேண்டும் என்று தேடியபோது, அந்த வாய்ப்பு எனக்கு அமைந்தது. அன்று சாட்டை அடியுடன் தொடங்கியது பின்னர் மல்யுத்தம், வாள் சண்டை, ஆபத்தான ஸ்டண்ட் சீன்கள் என்று நம்பியாருக்காக நூற்றுக்கணக்கான படங்களில் டூப் போட்டிருக்கிறேன். அன்றைக்குத் தொடங்கி 53 ஆண்டுகள் அவர் இறக்கும்வரை அவரது அன்புக்குப் பாத்திரமாக இருந்தது என் பாக்கியம்.

நம்பியாரைச் சந்திக்கும் முன்பே எம்.ஜி. ஆருடன் அறிமுகம் கிடைத்துவிட்டதா?

ஆமாம்! அது என் அதிர்ஷ்டம். எனக்கு, பாலக்காடு பக்கத்தில் சின்ன கிராமம். விவசாயக் குடும்பம். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் 12 வயதில் சென்னைக்கு ஓடிவந்து, சௌகார்பேட்டையில் ஒரு பால் கடையில் வேலைக்குச் சேர்ந்தேன். மாதம் 40 ரூபாய் சம்பளம். வாங்கும் சம்பளத்தில் பாதியை சினிமா பார்க்கச் செலவு செய்துவிடுவேன். மீதியை வைத்துக்கொண்டு சினிமா ஸ்டுடியோக்களுக்குப் போய் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தேன். நேரம் கிடைக்கும்போது ஸ்டண்டும் சிலம்பமும் கற்றுக்கொண்டேன்.

ஐந்தாறு வருடங்கள் ஓடிவிட்டன. என்னுடைய கடையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலிருந்த வால் டாக்ஸ் சாலையில்தான் தலைவரின் ( எம்.ஜி.ஆர்) வீடு இருந்தது. அண்ணன், தம்பி இரண்டு பேருமே நான் வேலைசெய்த பால்கடைக்குத்தான் டீ அருந்த வருவார்கள். ‘சாலிவாகனன்’, ‘மாத்ரு பூமி’, ‘கோகிலவாணி’ என்று பல படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் எம்.ஜி.ஆர் நடித்துக் கொண்டிருந்த காலம். நான் அவரை அடையாளம் கண்டுகொண்டு பேசியது, அவருக்குப் பிடித்துப்போய்விட்டது.

அடுத்த சில தினங்களில் பொங்கல் பண்டிகை வந்தது. எம்.ஜி.ஆர். ‘பொங்கலுக்கு என் வீட்டுக்கு வா’ என்று அன்போடு அழைத்தார். நானும் சீதாராம் என்ற கன்னடக்கார நண்பனும் சென்றோம். எம்.ஜி.ஆர் குடியிருந்த அந்த வீட்டுக்கு அப்போது வாடகை மாதம் 15 ரூபாய். அந்த வீட்டின் மாடியில் எம்.ஜி.அருக்குக் கடைசிவரை நெருக்கமான டாக்டராக இருந்த பி.ஆர்.சுப்ரமணியம் கிளினிக் வைத்திருந்தார்.

அவர் எட்டணா மட்டும்தான் நோயாளிகளிடம் வாங்குவார். அந்த வீட்டில் தலைவர், அவருடைய மனைவி சதானந்தவதி, தலைவரின் அண்ணன் சக்கரபாணி, அவரது குடும்பம். அவர்களின் தாயார் என எல்லோரும் கூட்டுக் குடும்பமாக வசித்தார்கள். நாங்கள் போனபோது, பெரிய மனிதர்களுக்கு வைப்பதுபோல பொங்கலுடன் விருந்து உபசாரம் செய்தார் தலைவரின் அம்மா. பின்னர் கிளம்பும்போது எம்.ஜி.ஆர் என் கையில் எட்டணா கொடுத்து அனுப்பினார்.

அவருக்கு வருமானம் ஏதும் இல்லாத காலத்திலேயே யாரையும் வெறுங்கையுடன் அனுப்பமாட்டார். அதன்பின்னர் அவர் ‘ராஜகுமாரி’யில் நடித்ததும் பிரபலமாகிவிட்டார். வீட்டில் கூட்டம் சேரத் தொடங்கிவிட்டதால் வால் டாக்ஸ் வீட்டைக் காலி செய்துகொண்டு அடையாற்றுக்குக் குடி போய்விட்டார். அப்போது நான் எம்.ஜி.ஆரைப் பிரிய நேர்ந்துவிட்டது.

பிறகு மீண்டும் எப்போது அவரைச் சந்தித்தீர்கள்?

எம்.ஜி.ஆர் அடையாற்றுக்குக் குடிபோனபிறகு அவரை என்னால் சந்திக்க முடியவில்லை. எனக்கு ‘மங்கையர்க்கரசி’ (1948) படத்தில் பி.யூ.சின்னப்பாவுடன் சிலம்பச் சண்டைபோடும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டுநாள் ஷூட்டிங். 150 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொடுத்தார் பி.யு.சின்னப்பா. இரண்டு நாட்களுக்கு இவ்வளவு சம்பளமா என்று பால்கடை வேலையை விட்டுவிட்டு முழுமூச்சாக சினிமாவில் இறங்கிவிட்டேன்.

அப்போது ஜெமினி ஸ்டுடியோவிலிருந்து அழைப்பு வந்தது. ‘இன்சானியத்’ (Insaniyat) என்ற இந்திப் படத்துக்குப் பத்து ஸ்டண்ட் மேன்களில் ஒரு ஆளாக என்னை வாசன் தேர்வுசெய்தார். மூன்று வருடம் அக்ரிமெண்ட். மாதம் 500 ரூபாய் சம்பளம். அந்தப் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் பல்ராம். அவர் ஸ்டண்ட் மேன்களுக்காகத் தனிச் சங்கமே வைத்திருந்தார். ‘பல்ராம் மாஸ்டர் பார்ட்டி’ என்றால் ரொம்ப பேமஸ்.

அவரது அன்புக்குப் பாத்திரமாகி அவரது பார்ட்டியில் சேர்ந்து விட்டேன். அவர் ஸ்டண்ட் மாஸ்டர் மட்டுமல்ல; டான்ஸ் மாஸ்டரும் கூட. ஒரு டஜன் படங்களுக்கு மேல் டான்ஸ் மாஸ்டராகவும் வேலை செய்திருக்கிறார். 

படப்பிடிப்பு முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்ற பல்ராம் மாஸ்டரை நாய் ஒன்று துரத்தி வந்து கடித்துவிட்டது. ஒருவார காலத்தில் இறந்துவிட்டார். அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த எம்.ஜி.ஆர் என்னைக் கண்டுகொண்டு, ‘எதற்காக இத்தனை நாள் என்னைப் பார்க்க வரவில்லை?’ என்று கேட்டுக் கடிந்துகொண்டார்.

‘இனிமேல் நீ என்னோடுதான் இருக்க வேண்டும்’ என்று கூட்டிச் சென்றுவிட்டார். எம்.ஜி.ஆருக்காக முதன்முதலில் ‘நாடோடி மன்ன’னில் டூப் போட்டேன். அந்த வருடம்தான் எனக்குத் திருமணம் ஆனது. அதன்பிறகு எம்.ஜி.ஆர் இரட்டை வேடம் போட்ட எல்லாப் படங்களிலும் நான்தான் அவருக்கு டூப். அதேபோல நம்பியார் சாமிக்கும் நான்தான் டூப். இரண்டு பேருமே என்னைக் கண்ணின் மணிபோல பார்த்துக்கொண்டார்கள்.

nambiar-ramakrishnanjpg

எனக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே கதையில் சண்டைக் காட்சி வைக்கச் சொல்லுவார் நம்பியார். அதேபோல எனக்கான சம்பளத்தைக் குறைத்துக் கொடுத்தாலும் நம்பியார் விடமாட்டார். நான் இப்போது குடியிருக்கும் இந்த இடத்தைக் கண்டுபிடித்து என்னை வாங்க வைத்தவர் நம்பியார்தான். எம்.ஜி.ஆர். அரசியலில் இறங்கியபிறகு அவரது இறுதி நாட்கள்வரை அவருக்கு பாடிகார்டாக இருக்கும் அரிய வாய்ப்பை எனக்கு வழங்கினார்.

எம்.ஜி.ஆருக்கும் நம்பியாருக்குமான நட்பைப் பற்றி வெளியே தெரியாத தகவல் ஒன்றைக் கூறுங்களேன்..

படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆரும் நம்பியாரும் பணம் வைத்து சீட்டு விளையாடுவார்கள். நான் பக்கத்தில் இருப்பேன். நம்பியாரிடம் எம்.ஜி.ஆர் தோற்றுக்கொண்டே இருப்பார். வீட்டுக்கு வரும்போது கைநிறைய பணத்துடன் வருவார். ‘நாடோடி மன்னன்’ படத்தில் நடித்தபோது

எம்.ஜி.ஆரிடம் ‘ சம்பளம் வேண்டாம்.. இது என் நண்பனின் படம்’ என்று மறுத்துவிட்டார். எம்.ஜி.ஆர் பிக்சர்ஸின் பல படங்களுக்கு அப்படித்தான். ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படப்பிடிப்புக்காக மனைவி ருக்மணிக்கு தனது சொந்த செலவில் விமான டிக்கெட் போட்டுக்கொண்டார். எந்தப் படமாக இருந்தாலும் மனைவிக்கான செலவு முழுவதையும் நம்பியாரே ஏற்றுக்கொள்வார். அவர் சமைத்ததைத்தான் சாப்பிடுவோர். பிஸ்கட்கூட சாப்பிட மாட்டார். நம்பியாரின் நட்பால் கடந்த 55 ஆண்டு களாக நானும் சுத்த சைவமாக மாறிப் போனேன்.

நம்பியாரிடம் நீங்கள் வியக்கும் குணம் எது?

உடலையும் உள்ளத்தையும் அவரைப் போல் தூய்மையாகப் பாதுகாத்தவர்கள் யாருமில்லை. ராமனைப் போல் வாழ்ந்தவர் அவர். அவரிடம் வீரக்கலைகள் மட்டுமல்ல; இசைக்கலையும் குடியிருந்தது. நாடகத்தில் முதல் வேடம் கிடைத்தபோது அதற்குச் சம்பளமாகக் கிடைத்த மூன்று ரூபாயில் அவர் வாங்கிய ஆர்மோனியப்பெட்டியை 80 வயதுவரை வாசித்துக்கொண்டி ருந்தார். மிக நன்றாகப் பாடுவார். மேகலா பிக்சர்ஸின் ‘நாம்’ படத்தில் மூன்று பாடல்களைப் பாடியிருக்கிறார். காலப்போக்கில் அதையெல்லாம் மறந்துவிட்டார்கள். ஆனால், நம்பியார்சாமி என்ற ஆன்மிகவாதியை யாராலும் மறக்க முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x