Published : 08 Mar 2019 11:08 AM
Last Updated : 08 Mar 2019 11:08 AM

திரைவிழா முத்துக்கள்: குழந்தைமை மாறாப் பறவைகள்

பயணத்தை அடிப்படையாகக் கொண்ட உலகப் படங்கள், சினிமா ஆர்வலர்களை உடனடியாகக் கவரக்கூடியவை. கதாபாத்திரங்கள் மட்டுமல்ல, பார்வையாளர்களும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் பயணத்தின் எதிர்பாராத் தன்மை அதற்கு முக்கியக் காரணம். ‘வின்டர் ஃப்ளைஸ்’ (Winter Flies) என்ற ஆங்கிலத் தலைப்புகொண்ட செக் குடியரசுத் திரைப்படமும் அந்த வகைதான்.

நடந்துமுடிந்த 16-வது சென்னை சர்வதேச விழாவில் திரையிடப்பட்ட அப்படத்தின் இயக்குநர் ஸ்லோவேனியாவைச் சேர்ந்த ஒல்மோ ஒமெர்ஸு (Olmo Omerzu). பதின்ம வயதுச் சிறுவர்கள் இருவரின் சாகசப் பயணமும் அதில் அவர்கள் எதிர்கொள்ளும் அனுபவங்களும்தாம் 81 நிமிடங்களுக்கு ஓடும் இந்தப் படத்தின் கதை. பீட்டர் பைக்கா (Peter Pycha) என்பவர் இந்தப் படத்துக்குத் திரைக்கதை எழுதியிருக்கிறார்.

மாரா ஒரு விலை மதிப்புமிக்க காரை ஓட்டிவருகிறான். அவனுடைய நண்பன் ஹீடஸ் காரை வழிமறித்து மாராவை வற்புறுத்தித் தானும் ஏறிக்கொள்கிறான். 14 வயதுச் சிறுவனான மாரா விவரம் அறிந்தவனாகவும் பாலியல் உறவு போன்ற பெரிய மனிதர்களுக்கான விவகாரங்களில் தேர்ச்சிபெற்றவனாகவும் தன்னைக் காண்பித்துக்கொள்கிறான்.

12 வயதான ஹீடஸ் அப்பாவித்தனமும் அதேநேரத்தில் பதின்ம வயதுக்குரிய பாலியல் விழைவுகளை அடிக்கடி வெளிப்படுத்துபவனாகவும் இருக்கிறான். இந்தப் பயணத்தில் ஒரு நாயும் ஒரு இளம் பெண்ணும் அவர்களுடன் சேர்ந்துகொள்கின்றனர். அந்தப் பெண்ணைக் கவர முயலும் இருவரது முயற்சிகளும் தோல்வியில் முடிகின்றன. அவளை ஒரு பாலியல் வல்லுறவு முயற்சியிலிருந்து காப்பாற்றுகின்றனர்.

இது தொடர்பான காட்சிகள் அனைத்தும் படத்தைக் கலகலப்பாக நகர்த்திச் செல்கின்றன. மாராவின் ஆதர்சமாக இருக்கும் அவனுடைய தாத்தா உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். அவரையும் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கின்றனர். முன்னாள் ராணுவ வீரரான தாத்தா இப்போது தனிமையில் இருக்கிறார்.

அவரைப் பார்க்க மாரா நீண்ட தூரம் மேற்கொள்ளும் பயணத்திடையே அவன் வளர்க்கப்பட்ட முறையும் பெற்றோரிடம் அவனுக்குப் போதிய அன்பு கிடைக்கவில்லை என்பதும் உணர்த்தப்படுகின்றன.

பயணத்தின் ஒரு புள்ளியில் காவல்துறை அந்த காரைக் கைப்பற்றி மாராவைக் கைது செய்கிறது. ஹீடஸ் தப்பிவிடுகிறான். மாரா ஓட்டிவந்தது திருடப்பட்ட கார் என்ற சந்தேகத்தில் காவல்துறையைச் சேர்ந்த ஒரு பெண் அதிகாரி அவனிடம் விசாரணை நடத்துகிறார். இந்த விசாரணையில் மாரா தனது முன்கதையைச் சொல்லும் வடிவத்தில்தான் திரைக்கதை நகர்கிறது.

மாரா தன் கதையில் உண்மைகளையும் பொய்களையும் கலந்தே சொல்கிறான். அவன் ஓட்டி வந்தது சொந்தக் காரா திருடப்பட்ட காரா என்பதையும் அவனும் ஹீடஸும் ஏன் இந்தப் பயணத்தை மேற்கொண்டார்கள் என்பதும் பார்வையாளர்களின் ஊகத்துக்கே விடப்படுகின்றன.

பேச்சில் தன்னை ‘பெரிய’ மனிதனாகக் காண்பித்துக்கொள்ளும் மாரா, காவல் துறையிடம் தன் உடன் வந்த நண்பனைப் பற்றி ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல் இருக்கும் விதத்தில் உண்மையிலேயே பெரிய மனிதன் ஆகிறான். அந்த நண்பனாலேயே அவன் காவலர்களிடமிருந்து தப்பிப்பது சுவாரஸ்யத் திருப்பம். முந்தைய காட்சிகளில் காமெடியனாக இருந்த ஹீடஸ் இதன் மூலம் நாயகன் ஆகிறான்.

இது இரண்டு பதின்பருவச் சிறுவர்களின் சாகசப் பயணத்தின் கதை மட்டுமல்ல; கார் ஓட்டிச் செல்லும் மாரா காவல்துறையைத் தூரத்தில் பார்த்தவுடன் லிஃப்டுக்காக ஏறிய பெண், காரை ஓட்டத் தொடங்குகிறாள். இதனாலேயே அவர்கள் தப்பித்துவிடுகின்றனர். இதுபோன்ற காட்சிகளின் வழியே செக் குடியரசைப் போன்ற மிக குறைந்த மக்கள்தொகை கொண்ட ஐரோப்பிய நாடுகளின் வாழ்க்கைமுறையும் அன்றாடச் சிக்கல்களும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் உள்ள போதாமைகளும் புரியவைக்கப் படுகின்றன.

மாராவும் ஹீடஸும் உலகின் மீது கோபம்கொண்ட சேட்டைக்காரச் சிறுவர்கள் போலக் காட்சியளித்தாலும் உண்மையில் இருவருமே அன்புக்காக ஏங்குகிறவர்கள், ஆபத்தில் இருப்பவர்களுக்கு இயல்பாக உதவுபவர்கள், எதைச் செய்தாலாவது நினைத்ததை நிறைவேற்றிக்கொள்ளும் சாமர்த்தியம் இல்லாத குழந்தை உள்ளம் கொண்டவர்கள்.

இதை எந்த விதமான சென்டிமெண்ட் காட்சியும் வசனமும் இல்லாமல் உணர்த்திவிடுகிறார் இயக்குநர். அந்த வகையில் ஒரு சுவாரசியமான கேளிக்கைப் படமாகவும் மாறிவிடும்‘வின்டர் ஃப்ளைஸ்’, பதின்ம வயதுச் சிறுவர்களின் குழந்தைமை மாறாத உலகத்தைப் படம்பிடித்துக் காட்டும் படைப்பாகவும் உருப்பெற்றிருக்கிறது.

தொடர்புக்கு: gopalakrishnan.sn@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x