Published : 22 Feb 2019 10:55 am

Updated : 22 Feb 2019 10:55 am

 

Published : 22 Feb 2019 10:55 AM
Last Updated : 22 Feb 2019 10:55 AM

தரைக்கு வந்த தாரகை 02: வானர வாத்தியார்

02

தலைவாரி பூச்சூடி உன்னை

பாடசாலைக்குப் போ என்று

சொன்னாள் உன்அன்னை!

சிலைபோல ஏன் அங்கு நின்றாய் நீ

சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்

- ‘ரங்கோன் ராதா’ (1956) படத்தில் பானுமதி பாடியது.

பள்ளிக் கூட நினைவுகளைத் தொடர்ந்தார் பானுமதி “என் மனசில் ஏதேதோ எண்ணங்கள். ஆசிரியர் கையில் இருக்கும் பிரம்பு ஏன் இவ்வளவு அழுக்காக இருக்கிறது, அது சரி பிரம்பைத்தான் ஏன் வைத்திருக்க வேண்டும்? எங்கள் வகுப்பில் நல்ல பிள்ளைகள் மட்டுமல்ல, துஷ்டப் பிள்ளைகளும் இருந்தார்கள். அவர்களில் சிலர் கையில் பசையைத் தடவி வைத்திருப்பார்கள்.

ஆசிரியர் அடிக்கும்போது அது பிரம்பில் ஒட்டிக்கொண்டு விடும். ஆனால், ரங்கையா வாத்தியாரின் பிரம்பு அப்பாவிப் பிள்ளைகளைத்தான் பதம் பார்த்தது. பிரம்பில் பசை ஒட்டிய துஷ்டப் பிள்ளைகள் தப்பித்து விடுவார்கள்.

பள்ளி மாணவர்களில் துஷ்டத்தனம் மிகுந்தவர்கள் இருந்ததுபோல், ஆசிரியர்களிலும் சிலர் இருந்தார்கள். அப்படிப்பட்ட வாத்தியார்தான் ஹனுமய்யா. ஹனுமய்யா முகமே ஒரு வானரம் மாதிரிதான் இருக்கும். அவர் சேஷ்டைகளும் அப்படியே. ஹனுமய்யா சில சமயம் தமாஷ் செய்வார். ஆடுவார், பாடுவார் என்று சொல்லி நிறுத்திய பானுமதியின் குரல் கொஞ்சம் தாழ்ந்தது. ஆனால், சற்றுக் கோபம் கூடியது.

“என்னோடு படித்த சேஷம்மாவுக்கு வயதுக்கு மீறிய வளர்ச்சி. அழகாக கொழுக் மொழுக்கென்று இருப்பாள். ஹனுமய்யா வாத்தியார் சேஷம்மாவை விசேஷமாக ‘கவனித்தார்’. தன் பக்கத்திலேயே உட்கார வைத்துக்கொண்டார். ஒருநாள் ஹனுமய்யா வாத்தியார் சேஷம்மாவைத் தொடக் கூடாத இடத்தில் கிள்ளிவிட்டார். அந்தப் பெண் அழுதுகொண்டே ரங்கையா பந்துலுவிடம் சொல்ல அவர் ஹனுமய்யாவை கடுமையாகத் திட்டிவிட்டார். ஹனுமய்யா மன்னிப்பு கேட்டார்.

இது பெற்றோருக்குத் தெரிந்தது. அவர்கள் கும்பலாக ஹனுமய்யாவை அடிக்க வந்து விட்டார்கள். ரங்கையா பந்துலு தலையிட்டதால் விஷயம் அத்தோடு முடிந்தது. ஆனால், அவர்கள் தங்கள் குழந்தையை வேறு பள்ளியில் சேர்ப்பதாகக் கூறி அவளை அழைத்துக் கொண்டு போய் விட்டார்கள். பிற்காலத்தில் நான் புதிதாகத் தொடங்கிய பள்ளிக் கூடத்துக்கு ஆசிரியர் தேவைப்பட்டார். அதற்கு அப்ளை பண்ணியிருந்த ஒருத்தர் பெயர் அருண்பிரசாத் மற்றவர் பெயர் அனுமந்தராவ்.

‘அருண் பிரசாதை, நியமியுங்கள். அனுமந்தராவ் வேண்டாம் அவரை அனுப்பி விடுங்கள்’ என்றேன். எனக்கு ஹனுமய்யா ஞாபகம் வந்துவிட்டது” என்றபோது எனக்கும் கொஞ்சம் திக்கென்று ஆகிவிட்டது.

பாட்டியும் நெய்வடையும்

பானுமதி அம்மையார் வீட்டில் ஒருநாள் காலைச் சிற்றுண்டி சாப்பிடும்படி ஆயிற்று.

‘உங்கள் வீட்டு நெய்தோசை பிரமாதம்!’ என்றேன். பானுமதி சிரித்தபடி “நெய்தோசை என்றதும் எனக்கு நெய்வடை ஞாபகம் வந்துவிட்டது” என்றார்.

“நெய் வடையா?”

“ஆமாம்” ஊரில் எனக்கு ஒரு பாட்டி இருந்தார். நெய்வடை செய்வதில் அவருக்கு நிகரே இல்லை. பாட்டியின் நெய்வடைக்குப் பின்னால் ஒரு கதையே இருக்கிறது. பாட்டியின் பெயரில் 36 ஏக்கர் நில புலன்களை எழுதிவைத்துவிட்டு தாத்தா செத்துப்போனார். பாட்டி வருஷம் தவறாமல் ஒரு ஏக்கரை விற்றுக் கிடைத்த பணத்தில் நெய்வடை செய்து சாப்பிட்டார். நெய்வடை என்றால் நெய்யில் சுடுவது என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். நெய்வடையை நெய்யில் சுட்டு நெய்யிலேயே ஊறப்போட வேண்டும். பிறகு நெய் ஊற்றிச் சாப்பிட வேண்டும்.

அம்மாவுக்கும் பாட்டிக்கும் அடிக்கடி மாமியார்-மருமகள் சண்டை வந்துவிடும். அப்போதெல்லாம் அம்மா புருஷன் வச்சுட்டுப்போன நிலத்தை எல்லாம் வித்து நெய்வடையா செஞ்சு இந்தக் கிழவி சாப்பிடறா. குழந்தைக்கு ஏதாவது மிச்சம் வைக்க வேண்டாமா?’ என்பாள். பாட்டியோ, ‘நெய் வடைன்னா எனக்கு இஷ்டம். நான் சாப்பிடறேன். என் புருஷன் எனக்கு வச்சுட்டுப்போன சொத்தில் நான் நெய்வடை என்ன, எது வேணும்னாலும் செஞ்சு சாப்பிடுவேன். உன்னிடமோ உன் புருஷனிடமோ வந்து எனக்கு நெய்வடை வேணும்னு கேட்டேனா?’ என்று வைரம்போல் கடினமான வைராக்கியத்துடன் கடைசிவரை ஜொலித்தவள்.

பாட்டி சொன்ன மாதிரியே கடைசி ஏக்கர் நிலத்தை விற்று நெய்வடை செய்து சாப்பிட்டுவிட்டுத்தான் போய்ச்சேர்ந்தாள். “பாட்டிக்குப் பிறகு அப்படி ஒரு நெய்வடையை நான் சாப்பிடவே இல்லை” என்றார் பானுமதி.

இப்படி நெய்யில் மிதக்கவிட்டு செய்தால் வடை ருசிக்கத்தான் செய்யும் என்றேன் நான். “இருக்கலாம். சில சமயம் மிகவும் எளிமையாகச் செய்யப்படும் பதார்த்தங்கள், அதைவிடச் சுவையோடு அமைந்துவிடும்” என்று தொடர்ந்தார்.

எங்கள் வீட்டருகே ஒரு தாத்தா இருந்தார். அவரை பஞ்சாபித் தாத்தா என்போம். நல்ல உயரம். பார்க்க லட்சணமாக இருப்பார். பெரிய ஹாண்டில்பார் மீசை. அவர் என்ன பண்ணுகிறார் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், அவர் சமையல் எனக்குப் பிடிக்கும். தானே சுயமாகச் சமைத்துக்கொள்வார். சில ரொட்டிகளும் கொஞ்சம் சாதமும் அவ்வளவுதான். அவர் பருப்பு சாம்பார், காய்கறி கூட்டு என்று எதுவும் செய்வதில்லை.

பத்துப் பன்னிரண்டு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்வார். ஸ்டவ்வில் வாணலியை வைத்து கொஞ்சம் எண்ணெய் ஊற்றுவார். கொஞ்சம் வெந்தயம், உப்பு, மஞ்சள் தூளைக் கலந்து கொதிக்கவிடுவார். நறுக்கிவைத்த வெங்காயத்தை அதில் போடுவார். அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி மூடிவைத்துவிடுவார். அவரிடம் கொஞ்சம் கறிவேப்பிலை கொடுத்து அதில் போடுங்களேன் என்பேன். “நோ..நோ. இது எங்க சமையல்...அதெல்லாம் போட மாட்டோம்” என்பார்.

அவரைப் பார்த்தால் பாவமாக இருக்கும். அம்மாவிடம் கொஞ்சம் பருப்பு சாம்பாரும் வாங்கிக்கொண்டு செல்வேன். என் பாசத்தில் நெகிழ்ந்துபோன தாத்தா அவர் செய்த பொரியலில் கொஞ்சம் கொடுப்பார். நான் அதை வீட்டுக்குக் கொண்டுபோவேன். அம்மா அதை ருசி பார்த்துவிட்டு “என்ன பண்டம் இது? ஒரு ருசியும் இல்லை. முதலில் அதை எறிந்துவிட்டு வா” என்பார். அம்மா சொல்வதைக் கேட்காமல் தாத்தா பிரியத்துடன் கொடுத்த பொரியலைச் சாதத்தில் கலந்து சாப்பிடுவேன். சுவை பிரமாதமாக இருக்கும்!

இப்பவும்கூட பஞ்சாபித் தாத்தா பொரியலை சாப்பிடணும்னு ஆசையா இருந்தா, நானே சமையல் அறைக்குள் நுழைந்து என் கையாலேயே அதைச் செய்து சாப்பிடுவது உண்டு.

(தாரகை ஜொலிக்கும்)
தொடர்புக்கு:- thanjavurkavirayar@gmail.com | படங்கள் உதவி: ஞானம்

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை


தரைக்கு வந்த தாரகைதமிழ் சினிமா தொடர்தமிழ் சினிமா பிளாஷ்பேக்தமிழ் சினிமா நினைவுகள்பானுமதி நினைவுகள் பானுமதி படங்கள்பானுமதி நடிப்புரங்கோன் ராதாஹனுமய்யா பஞ்சாபித் தாத்தா

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author