Published : 03 Feb 2019 10:10 AM
Last Updated : 03 Feb 2019 10:10 AM

பார்வை: கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்

பெண் பிறப்புறுப்புச் சிதைப்பு என்ற கொடூரச் செயல் ஆப்பிரிக்காவில் மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள சில சமூகத்தினராலும் பின்பற்றப் படுகிறது. இது மனித உரிமை மீறல் என ஐ.நா. தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மனித தன்மையற்ற இந்தச் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 2003 முதல் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 6-ம் தேதி, பெண் பிறப்புறுப்புச் சிதைப்பை முற்றிலுமாக ஒழிக்கும் நாளாக அனுசரிக்கப் படுகிறது.

பெண் குழந்தைகள் ஆறு, ஏழு வயதாக இருக்கும்போதே அவர்களுடைய பிறப்புறுப்பு சிதைக்கப்படுகிறது. பெண்களின் பாலியல் விழைவைக் குறைப்பதற்காக இந்தக் கொடூரச் செயல் நிகழ்த்தப்படுகிறது. இந்தச் சடங்கை மேற்கொள்ளும்போது சிறு குழந்தைகளுக்கு மயக்க மருந்துகூடக் கொடுக்கப்படுவதில்லை. கடுமையான ரத்தப்போக்குக்கு ஆளாகும் குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பிறப்புறுப்புச் சிதைப்பால் ரத்தப்போக்கு, பிறப்புறுப்பில் நோய்த் தொற்று, எதிர்காலத்தில் குழந்தையின்மை, குழந்தை பிறப்பதில் சிக்கல் போன்ற பிரச்சினைகளை உடல்ரீதியாகப் பெண்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதேபோல் வளரிளம் பருவத்தில் மேற்கொள்ளப்படும் இந்தக் கொடுமை அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஆறாத ரணமாக மனத்தில் நிலைத்துவிடுகிறது. அந்த வலி தங்களுடைய வாழ்நாள் முழுவதும் இருந்துகொண்டே இருக்கிறது என்கின்றனர் இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள்.

இந்தக் கொடூரப் பழக்கத்தைக் கடைப் பிடிப்பவர்களில் 75 சதவீதத்தினர் போரா பிரிவைச் சேர்ந்தவர்கள். ஆனால், இதை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் இதைத் தடுக்க அரசும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. இதைக் குற்றச் செயலாகக் கருதி இந்தக் கொடூரத்தை ஒழிக்க வலியுறுத்தி போரா சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை வெளியே சொல்லத் தொடங்கியுள்ளனர்.

அழிக்க முடியாத நினைவு

தன்னுடைய ஏழு வயதில் பிறப்புறுப்பு சிதைக்கப்பட்ட பத்திரிகையாளர் சலேஹா பத்வாலா கூறுகையில், “எனக்கு ஏழு வயதாக இருந்தபோது நிகழ்ச்சி ஒன்றுக்குப் போகலாம் என என் பாட்டி அழைத்துச் சென்றார். அங்கே என்னுடன் விளையாட நிறையப் பேர் இருப்பார்கள் என்றார். நானும் உற்சாகமாக அவருடன் சென்றேன். நாங்கள் அந்த வீட்டுக்குச் சென்றபோது அங்கே ஒரே ஒரு பெண் மட்டும் இருந்தார்.

அவரைத் தவிர வேறு யாரும் இல்லை. சிறிது நேரத்தில் என்னுடன் விளையாட நண்பர்கள் வந்துவிடுவார்கள் என்றார் பாட்டி. ஒரு மணி நேரமாக அங்கேயே உட்கார்ந்துகொண்டிருந்தோம். கொஞ்ச நேரம் கழித்து மற்றொரு பெண்ணும் வந்தார். எனக்கு அறிமுகமில்லாத அந்தப் பெண்கள் என்னை மாடியில் உள்ள சிறு அறைக்கு அழைத்துச் சென்றனர். அந்த அறை சிறியதாகவும் இருட்டாகவும் இருந்தது. என்னை அங்கிருந்த படுக்கையின் மேல் படுக்கச் சொன்னார்கள். பிறகு என்னுடைய கை, கால்களைப் பிடித்துக்கொண்டனர்.

அந்த நேரத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை என்னால் உணர முடியவில்லை. பிறப்புறுப்பைச் சிதைக்கும்போது வலியாலும் பயத்தாலும் துடித்தேன். இப்போதும் என்னால் அந்த வலியிலிருந்து விடுபட முடியவில்லை. இந்தச் சிதைப்பு நடவடிக்கைக்குப் பிறகு சிறுநீர் கழிக்கக்கூடப் பயமாக இருக்கும்.

கழிவறையில் உட்கார்ந்துகொண்டு அழுது கொண்டிருப்பேன். பிறப்புறுப்பு சிதைப்பால் நான் புனிதமாகிவிட்டேன் எனக் கூறி என்னைச் சுற்றியிருந்தவர்கள் அனைவரும் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர். ஆனால், நான் உயிர்வலியால் மரணத்தின் வாசலில் ஊசலாடிக்கொண்டிருந்தேன்.

இந்த நினைவை என்னால் அழிக்க முடியவில்லை. உடலில் உள்ள பிற உறுப்புகளைப் போல் அந்தக் கொடுமையான நிகழ்வு வலியும் ரத்தமுமாக என் மூளைக்குள் பதிந்துள்ளது. என்னுடைய புனிதம் என் பிறப்புறுப்பில் கிடையாது. பெண் குழந்தைகள் மீதான இந்த வன்முறை கட்டாயம் ஒழிக்கப்பட வேண்டும்” என்கிறார்.

 

paarvai-2jpgright

துளிகள்

# உலக அளவில் 20 கோடி பெண்கள் ஏதோவொரு வகையில் பிறப்புறுப்பு சிதைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

# 14 வயதுக்குட்பட்ட 44 கோடி இளம் பெண்கள் பிறப்புறுப்பு சிதைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

# சோமாலியாவில் 15 வயது முதல் 49 வயது வரையுள்ள பெண்களில் 98 சதவீதத்தினர் பிறப்புறுப்பு சிதைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

# பெரும்பாலும் பெண் பிறப்புறுப்பு சிதைப்பு என்பது 15 வயதுக் குக் குறைவாக உள்ளவர்களுக்கே செய்யப் படுகிறது.

# உலகம் முழுவதும் 29 நாடுகளில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

# ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஈரான், இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இந்தக் கொடுமை நிலவுகிறது.

# இது மனித உரிமைக்கு எதிரானது. பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கை களுக்குப் பிறகு பல நாடுகள் இந்தக் கொடூரப் பழக்கத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x