Last Updated : 18 Feb, 2019 11:11 AM

 

Published : 18 Feb 2019 11:11 AM
Last Updated : 18 Feb 2019 11:11 AM

பெண்கள் 360: இந்தியாவின் மர்லின் மன்றோ

இந்தியாவின் மர்லின் மன்றோ

மதுபாலா, மென்சோகம் ததும்பும் முகமும் நளினமும் ஒளிரும் அழகும் கொண்ட பேரழகி. இந்தியாவின் மர்லின் மன்றோ என்றழைக்கப்பட்ட மதுபாலாவின் இயற்பெயர் மும்தாஜ் ஜஹான் பேகம் தெலாவி. 1933-ல் காதலர் தினத்தன்று டெல்லியில் பிறந்தார். குழந்தைப் பருவத்திலேயே நடிக்கத் தொடங்கிவிட்டார். ஒன்பது வயதில் அவரது முதல் படமான ‘பஸந்த்’ வெளியானது.

doodle-2jpgright

பேபி மும்தாஜ் என்று அழைக்கப்பட்ட அவர், 14 வயதில் ‘நீல் கமல்’ படத்தில் நடித்ததன் மூலம் மதுபாலா ஆனார். ‘நீல் கமல்’ அவரைப் புகழின் உச்சியில் நிறுத்தியது. வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. குடும்பத்தைக் காப்பாற்ற ஓய்வின்றி நடித்தார். 1949-ல் அவரது நடிப்பில் ஒன்பது படங்கள் வெளியாயின.

அவற்றில் அவரது மிகப் பெரிய வெற்றிப்படமான ‘மஹாலு’ம் ஒன்று. திலீப் குமார், கிஷோர் குமார், குரு தத், அசோக் குமார், தேவ் ஆனந்த் போன்ற பெரும் நடிகர்களுடன் நடித்தபோதும் தனது தனித்துவம் மிக்க நடிப்பாற்றலால் ஜொலித்தார். இதயத்தில் ஏற்பட்ட பாதிப்பால் ஒன்பது ஆண்டுகள் படுக்கையில் இருந்தவர், 36 வயதில் மரணத்தைத் தழுவினார். அவரது 86-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக பிப்ரவரி 14 அன்று சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது.

 

சாதி மதம் கடந்த முதல் பெண்

திருப்பத்தூரைச் சேர்ந்த சிநேகா (35) வழக்கறிஞராகப் பணியாற்றுகிறார். இவருடைய கணவர் பார்த்திபராஜா, திருப்பத்தூர் தூயநெஞ்சகக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். 2017-ல் சாதியும் மதமும் அற்றவர் என்று சான்றிதழ் வழங்குமாறு சிநேகா விண்ணப்பித்தார். நீண்ட விசாரணைக்குப் பின்னர் பிப்ரவரி 5-ல் சிநேகாவுக்குச் சாதி, மதம் அற்றவர் என்று சான்றிதழ் வழங்கப்பட்டது. இப்படியான சான்று பெறும் முயற்சி தன் பெற்றோரிடமிருந்தே தொடங்கியதாக சிநேகா குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியா போன்ற சாதிய ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த நாட்டில் சாதிய அடிப்படையில் சிலர் ஒடுக்கப்பட்டுவருகின்றனர். அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த உருவாக்கப்பட்டதுதான் இட ஒதுக்கீடு. சாதியைத் துறப்பதன் மூலம் இட ஒதுக்கீடு கிடைக்காமல் போகக்கூடும். சாதி அமைப்பை ஒழிக்காதவரைக்கும் சாதியில்லாச் சான்றிதழ் பெறுவதால் எந்தப் பலனும் இல்லை என்ற எதிர் கருத்துகளும் கேட்ட வண்ணம் இருக்கின்றன.

பெண் குழந்தைகளே விருப்பத் தேர்வு

ஆண் வாரிசை விரும்புவதே இந்தியப் பெற்றோர்களின் பொது ஆசையாக உள்ளது. இந்தியாவில் அதிகரித்துவரும் சிசுக்கொலைகளே அதற்குச் சான்று. ஆனால், குழந்தை இல்லாத பல பெற்றோர்கள் தத்தெடுக்கும்போது பெண் குழந்தைகளைத் தத்தெடுப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மூன்று ஆண்டுகளில் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளில், பெண் குழந்தைகளே அதிகம் எனப் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 2015-ல் இருந்து 2018 வரை 11,649 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 6,962 என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, தத்தெடுக்கப்படும் குழந்தைகளில் 60 சதவீதத்தினர் பெண் குழந்தைகளே!

ட்ரம்பை எதிர்த்துக் களமிறங்கும் பெண்கள்

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2020) நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  தற்போதுவரை அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் 12 பேர் அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் ஐவர் பெண்கள். இவர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி. கமலா ஹாரிஸ், துளசி கப்பார்ட் ஆகியோர் அடக்கம். அமெரிக்க வரலாற்றில் இதுவரை பெண் ஒருவர் அதிபரானது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜனநாயகக் கட்சியில் களத்தில் உள்ள ஐந்து பெண்களில் ஒருவர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டால் ட்ரம்ப் மீண்டும் ஒரு பெண்ணை எதிர்த்துப் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்படும். இதற்கிடையில், தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள பெண்களை ட்ரம்ப் விமர்சித்துவருகிறார்.

அமைச்சரின் அநாகரிகம்

திரிபுரா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடந்துவருகிறது. அங்கே அகர்தலா நகரில் கடந்த 9-ம் தேதி வளர்ச்சி திட்டப் பணிகளின் தொடக்க விழா நடைபெற்றது.  விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போது மேடையில் மாநில அமைச்சர் மனோஜ் காந்தி தேவ், சக பெண் அமைச்சரான சாந்தனா சாக்மாவைத் தகாத முறையில் தொட்டார். 

இது தொடர்பான காட்சி, சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்த அநாகரிகச் செயலுக்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துப் போராடிவருகிறது. அமைச்சர் மனோஜை பதவி நீக்கம் செய்து, கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அக்கட்சி வலியுறுத்தி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x