Published : 26 Feb 2019 10:32 AM
Last Updated : 26 Feb 2019 10:32 AM

அந்த நாள் 22: எங்கெங்கும் நிறைந்திருக்கும் அசோகர்

“அசோகர் காலத்தின் நல்லது, கெட்டதுகள் எல்லாத்தையும் பார்த்துட்டோம். இந்தியாவில் ஆட்சி நடத்திய அரசர்களில் தனிப் பெருமை வாய்ந்தவர் அசோகர். இந்தியாவின் முதல் பேரரசரான அவரை முழுமையாக நாம் மறக்கவில்லை. இந்த முறை அவருடைய பெருமைகளைப் பத்தித்தான் சொல்லப் போறேன் செழியன்”:

> இந்திய தேசியக் கொடியின் மத்தியில் 24 ஆரங்களைக் கொண்ட சக்கரம் இடம்பெற்றுள்ளது. வெள்ளைப் பின்னணியில் நீல நிறத்தில் இடம்பெற்றுள்ள இந்தச் சக்கரம் அசோகரின் சின்னங்களில் இருந்து எடுக்கப்பட்டது. அதன் பெயரே ‘அசோகச் சக்கரம்’தான்.

> சாரநாத்தில் அசோகர் தூணின் உச்சியில் இருந்த நான்கு சிங்கங்களைக் கொண்ட உச்சிப் பகுதியே இந்திய அரசின் அதிகாரப்பூர்வ சின்னம். நான்கு சிங்கங்கள் முதுகுப் பகுதியை ஒட்டி வைத்தபடி உட்கார்ந்து, வெளியே தலை தெரியும்படி இந்தச் சின்னம் அமைந்திருக்கும். பார்வைக்கு 3 சிங்கங்கள் மட்டுமே தெரியும். இந்திய அரசின் அடையாளம் அவசியமாக உள்ள இடங்களில் எல்லாம் இந்தச் சின்னம் பயன்படுத்தப்படுகிறது.

> போர்க்களத்துக்கு வெளியே ராணுவ வீரர்களின் வீரதீரச் செயல்கள், தியாகத்தை அங்கீகரிக்கும் வகையில் கொடுக்கப்படும் விருதின் பெயர் ‘அசோகச் சக்கரம்’. (போர்க்களத்தில் சிறப்பாகச் செயல்படுபவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது ‘பரம்வீர் சக்ரா’).

> மகாத்மா காந்தியும் ஜவாஹர்லால் நேருவும் அசோகரைப் பெரிதும் மதித்தார்கள். தங்கள் எழுத்திலும் பேச்சிலும் அவரைப் பற்றிப் பல முறை குறிப்பிட்டிருக்கிறார்கள். அசோகர், அவர் சார்ந்த அம்சங்களை இந்திய அரசு பிரதிபலிப்பதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர்களும் இவர்களே.

> டெல்லி, கொல்கத்தாவில் உள்ள தேசிய அருங்காட்சியகங்களில் மௌரியர் காலத்துக் கல்வெட்டுகள், சிற்பங்கள், பானைப் பொருட்கள் பாதுகாக்கப்படுகின்றன. குஜராத் கிர்னாரில் உள்ள அசோகரின் மிகப் பழமையான கல்வெட்டின் நகல் டெல்லி அருங்காட்சியகத்துக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளது. பாட்னா அருங்காட்சியகமும் மௌரிய ஆட்சி குறித்து அறிய உதவும்.

princepjpg ஜேம்ஸ் பிரின்செப்

> அசோகர் கட்டிய சாஞ்சி ஸ்தூபி (ம.பி.), சாரநாத் ஸ்தூபி (உ.பி.) ஆகியவற்றை நேரில் பார்க்கலாம். அசோகரின் தூண்களை டெல்லி பெரோஸ் ஷா கோட்லா கோட்டையிலும், அலகாபாத் கோட்டையிலும் (உ.பி.) பார்க்கலாம்.

அசோகரை மீட்ட பிரின்செப்

இந்திய வரலாற்றில் 19-ம் நூற்றாண்டுவரை அசோகர் பெரிதாகக் கொண்டாடப் படவில்லை. அவரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் படித்தறியப்படாமல் இருந்ததே இதற்குக் காரணம். ஆங்கிலேய அறிஞரும் தொல்லியல் ஆய்வாளுமான ஜேம்ஸ் பிரின்செப் அசோகரின் தூண்கள், கல்வெட்டுகளை ஆராய்ந்தார்.

அவற்றில் பொறிக்கப்பட்டிருந்த பிராமி வரிவடிவ பிராகிருதச் சொற்களுக்கான அர்த்தத்தை

1836-38 ஆண்டுகளில் அவர் கண்டறிந்தார். பிராமி என்பது வழக்கொழிந்து போன பண்டைய வரிவடிவம். இன்றைக்கு வடமொழியும் இந்தியும் தேவநாகரி வரிவடிவத்தில் எழுதப்படுகின்றன. பிராகிருதம், பாலி போன்றவை அந்தக் கால மக்கள் பேசிய மொழி வழக்குகள். ஜேம்ஸ் பிரின்செப்பின் கண்டறிதல்களால் புத்துயிர் பெற்ற அசோகர், கடந்த 200 ஆண்டுகளாகப் பெரும் கவனம் பெற்ற பேரரசராக மாறிவிட்டார்.

asokajpgஅசோக மலர்right

மகிழ்ச்சி தரும் மரம்

Saraca Asoca என்ற தாவரவியல் பெயர் கொண்ட மரத்தின் பொதுப் பெயர் அசோகம். பிரகாசமான ஆரஞ்சு நிற மலர்களைக் கொண்ட இந்த மரத்தை பௌத்தர்களும் இந்துக்களும புனிதமாகக் கருதுகின்றனர்.

அசோகம் என்பதற்குச் சோகம் அற்றது, கவலையும் துயரமும் இல்லாதது என்று அர்த்தம். அசோகர் தன் ஆட்சியின் பிற்பாதியில், மக்களை இந்தப் பண்புடனே வழிநடத்தினார். அசோக மரமும் அதே பண்புகளைப் பிரதிபலிப்பதாக நம்பப்படுகிறது.

தமிழகத்தில் நெட்டிலிங்க மரம், அசோக மரம் என்ற பெயரில் பொதுவாகத் தவறாக அழைக்கப்படுகிறது. இந்தக் குழப்பத்துக்கு விடைகாண இரண்டு மரங்களின் மாறுபட்ட தோற்றமும் மலர்களும் உதவும்.

 

யாருக்கு உதவும்?

போட்டித் தேர்வுகளுக்கான வரலாற்றுப் பகுதி, 6-ம் வகுப்பு வரலாற்றுப் பாடம்

 

தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x