Published : 03 Feb 2019 10:04 AM
Last Updated : 03 Feb 2019 10:04 AM

வானவில் பெண்கள்: வரலாறு படைத்த வரலாற்று ஆசிரியர்

பல்வேறு துறைகளில் சாதிக்கும் கனவைக் காணக் குழந்தைகளுக்குக் கற்றுத் தந்திருக்கும் நாம் அவர்கள் நம் நாட்டின் வரலாற்றைச் சரியான விதத்தில் தெரிந்துகொள்ள வேண்டும் என நினைத்திருக்கிறோமா? வரலாற்றைத் தெரிந்துகொள்ளாமல் எதிர்காலத்தைப் பற்றிக் கனவு காண்பதில் அர்த்தமில்லை என்பதை இன்றைய இளம் தலைமுறையினரிடம் கொண்டுசேர்ப்பதைக் கடமையாகக் கருதுகிறார் ஆசிரியர் சுலேகா பானு.

மதுரை விராட்டிப்பத்தைச் சேர்ந்த சுலேகா, அரசரடி ராஜம் வித்யாலயம் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் வரலாற்று ஆசிரியராகப் பணிபுரிந்துவரு கிறார். நூறு முறை கூப்பிட்டாலும் ஏன் என்று கேட்காத குழந்தைகளிடம் கத்தி கத்தி, சில பெற்றோருக்குத் தொண்டையே புண்ணாகிவிடும்.

ஆனால், ஆசிரியர் பணியில் இருப்பவர்கள் முதல் வரிசை தொடங்கி கடைசி வரிசையில் அமர்ந்திருக்கும் மாணவர்கள்வரை எல்லோருக்கும் கேட்கிறதா கேட்கிறதா எனக் கேட்டுக் கேட்டுப் பாடம் நடத்துவார்கள். ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பாடம் எடுத்தே பல ஆசிரியர்களுக்குத் தொண்டையில் அடிக்கடி பிரச்சினை உண்டாகும்.

இதையெல்லாம் ஒரு பொருட்டாகக்கூட நினைக்காமல் 50 வயதிலும்  மாணவர்களுக்கு வரலாற்றின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக ஒரு சாதனையை அரங்கேற்றியுள்ளார் அவர். தொடர்ச்சியாக 40 மணி நேரம் பாடம் எடுத்து அனைவரையும் வியக்கவைத்திருக்கிறார்.

வரலாற்றுத் தரவுகளைத் திரட்டுவது, அவற்றைப் பற்றி ஆராய்வது, மாணவர்களுக்குப் பள்ளிப் பாடங்களுடன் உள்ளூர் முதல் உலக வரலாறுவரை சொல்லிக்கொடுப்பது என ஆசிரியர் சுலேகா பானு முத்திரை பதித்துவருகிறார். “இன்று ஒரு குழந்தையை அழைத்துக் கேட்டால் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டிக்கு முந்தைய தலைமுறையினர் பெயர்களைச் சொல்லத் தெரியவில்லை. ஏதோ உலக வரலாற்றைக் கேட்டதுபோல் திருதிருவென்று முழிப்பார்கள். குடும்ப வரலாற்றில்தான் இப்படி என்றால் நம் நாட்டின் வரலாறே இன்று பெரும்பாலான குழந்தைகளுக்குத் தெரிவதில்லை.

வீடியோ கேம் விளையாடுவது, ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்றவற்றைப் பார்ப்பது என செல்போனில் மூழ்கிக் கிடக்கின்றனர். பள்ளிக்கூடங்களிலும் கணினி, கணிதம், அறிவியல் பாடங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். வாசிப்புப் பழக்கம் இல்லாததால் குழந்தைகளிடம் வரலாறு குறித்த ஆர்வம் குறைவாக உள்ளது” என  ஆதங்கப்படுகிறார்  ஆசிரியர் சுலேகா பானு.

vaanavil-2jpg

வரலாறு முக்கியம்

மாணவர்களின் இந்த வரலாற்று அறிவு குறித்த போதாமையே அவர்களுக்கு வரலாற்றுப் பாடத்தை மட்டும் எடுக்க வேண்டும் என சுலேகாவை முடிவெடுக்கவைத்தது. அதற்காக மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கான வகுப்பை ஒன்றை ஏற்படுத்தினார். ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கான சமூக அறிவியல் பாடத்தைத் தேர்வு செய்தார். இந்த வகுப்பில் பல பள்ளிகளிலிருந்து மாணவர்கள் கலந்துகொண்டனர். 

2018 டிசம்பர் தொடங்கிப் பகல் முழுவதும் பாடம் நடத்தினார் சுலேகா. மதிய உணவுக்கும் கழிப்பறைக்குச் செல்வதற்கும்  பத்து நிமிடங்கள் மட்டும் இடைவேளை எடுத்துக்கொண்டார். சுலேகா தொடர்ந்து 40 மணி நேரத்துக்குப் பாடங்களை நடத்த, மாணவர்கள் ஒவ்வொரு பிரிவாகப் பிரிந்து பங்கேற்றனர்.

வரலாற்றுப் பதிவுகளை வீடியோவாக புரொஜெக்டரில் காட்டி விளக்குவது, அதிலிருந்து மாணவர்களிடம் கேள்விகள் கேட்பது, வினாடி வினா நடத்துவது, சந்தேங்களுக்கு விளக்கம் கொடுப்பது, கலந்துரையாடுவது என சுலேகா பானு பாடம் நடத்திய  40 மணி நேரமும் கலகலப்பாகவும் உற்சாகமாகவும் சென்றது.

‘‘நம்முடைய பாரம்பரியமும் கலாச்சாரமும் மட்டுமல்ல, நாட்டின் வரலாறும் மறைந்துவருகிறது; மறைக்கப்பட்டுவருகிறது. இந்தியா எப்படியிருந்தது, அதன் தற்போதைய நிலைமை என்ன என்ற வரலாறெல்லாம் பிள்ளைகளுக்குத் தெரிவதில்லை. நேருவின் காலத்தில் இருந்துதான் நம் நாட்டின் வரலாறு தொடங்குவதாகப் பெரும்பாலான குழந்தைகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கம்ப்யூட்டரிலும் செல்போனிலும் திறமையாக விளையாடத் தெரிந்த நம் குழந்தைகளுக்கு வரலாறு தெரியவில்லை. அதனால், பள்ளிக் குழந்தைகளிடம் ஒரு மாற்றத்தை உருவாக்கும் லட்சியத்துக்காகவும் விழிப்புணர்வுக்காகவும் 40 மணி நேரம் வகுப்பை எடுத்தேன்’’ என்கிறார் சுலேகா.

படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x