Published : 27 Jan 2019 12:56 PM
Last Updated : 27 Jan 2019 12:56 PM

நிதர்சனம்: உழைக்கும் பெண்களின் எதிர்பார்ப்புகள்

திருப்பூரின் அடையாளம் பின்னலாடைத் தொழில். இந்த அடையாளத்தை ஏற்படுத்த ஆண்கள் எந்த அளவு உழைத்திருக்கிறார்களோ அதே அளவுக்குப் பெண்களும்  உழைத்திருக்கிறார்கள். இன்றைக்கும் உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

திருப்பூரின் பின்னலாடை உற்பத்தியில் சரிபாதியாக ஆண்களோடு பெண்களும் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு இந்தத் துறை பெண்களின் அளவற்ற உழைப்பை நம்பியே இருக்கிறது. பின்னலாடை நிறுவனங்களில் இரவு பகலாக உழைக்கும் பெண்களுக்கு, பல்வேறு எதிர்பார்ப்புகள், தேவைகள், ஏக்கங்கள் உள்ளதாகச் சொல்கின்றனர் திருப்பூர் பெண் தொழிலாளர்கள்.

“இந்த ஊரை மட்டும் நம்பிவந்தால் போதும். எவ்வித முதலீடும் இல்லாமல் நாள் ஒன்றுக்குக் குறைந்தபட்சம் 300 ரூபாய் சம்பாதிக்கலாம். ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்றாலும் அவர்களின் வேலைக்கு ஏற்பப் பாலின பேத மின்றி ஊதியம் வழங்குகிறார்கள்.  கிராமங்களில் உள்ள விவசாயக் கூலித் தொழில்களில்கூட இப்படிப் பாகுபாடின்றி ஊதியம் வழங்கப்படுவதில்லை. ஆனால், பின்னலாடை நிறுவனங்களில் பாலின பேதமின்றி எங்களின்  வேலையைப் பொறுத்து ஊதியம் வழங்குவது வரவேற்க வேண்டிய விஷயம்தான். 

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, தாறுமாறாக அதிகரித்துவரும் வீட்டு வாடகை, குழந்தைகளின் படிப்பு, மருத்துவம்  என அனைத்திலும் திருப்பூர் மாநகரத்தில் கொட்டிக்கொடுக்க வேண்டியிருக்கிறது. வாரம் முழுவதும் சம்பாதிக்கும் தொகை இது போன்றவற்றுக்கே  செலவாகிறது” என்கின்றனர் சில பெண் தொழிலாளர்கள்.

கட்டுப்பாடற்ற வாடகை

பெண் தொழிலாளர்கள் குறிப்பிடுவதைப் போல் திருப்பூரில் வீட்டு வாடகை எப்போதும் உச்சாணிக் கொம்பில் தான் உள்ளது. எவ்வித வசதிகளுமற்ற சிறிய அறைக்குக்கூட  2,000 ரூபாய் வாடகை வசூலிக்கப்படுகிறது. பெரும்பகுதியினர் வெளியூர்க்காரர்கள் என்பதால் பிழைப்புக்காக இங்கே தங்க வேண்டிய நிர்பந்தம் இருப்பதால் வேறு வழியின்றி அதிக வாடகைக்குக் குடியிருக்க வேண்டிய கட்டாயம். “இங்கே வீட்டு வாடகைக்குக் கட்டுப்பாடு என்பதே கிடையாது.

இதனால், பலரும் வாழ வசதியற்ற நிலை என்பதைவிட, வாழத் தகுதியற்ற வீடுகளைக்கூட அதிக வாடகை கொடுத்துக் குடியிருக்கும் நிலைதான் உள்ளது. தொழிலாளர்களுக்குத் தேவையான அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டம் குறித்து வழங்கப்பட்ட கோரிக்கை மனுக்கள்  காலத்தின் ஓட்டத்தில் நமுத்துவிட்டன” என்கின்றனர்  மூத்த பெண் தொழிலாளர்கள் சிலர்.

குழந்தைகள் காப்பகங்கள்

பெரும்பாலான பெண்கள் வேலைக் குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் இருப்பதால் குழந்தைகளை அக்கம் பக்கத்து வீட்டினரை நம்பி அவர்களிடம் விட்டுவிட்டுச் செல்கின்றனர்.  நிறு வனங்களில் குழந்தைகளைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் காப்பகங்கள் இருந்தால் பெண்கள் தங்கள் குழந்தைகள் குறித்த கவலையின்றி வேலையில் ஈடுபட முடியும். பெரிய நிறுவனங்களில்கூடக் குழந்தைகள் காப்பகங்கள் இல்லை.

“பெண்ணை வெறும் உற்பத்தி இயந்திரமாகப் பார்ப்பதால் குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள். நிறுவனங்கள் குழந்தைகள் காப்பகங்கள் அமைத்துத் தந்தால், குழந்தைகள் பாதுகாப்பான சூழலில் வளரும் வாய்ப்பு ஏற்படும். அதேபோல் காலை, மாலை வேளைகளில் வேலைக்குச் சென்றுவரும் பெண் தொழிலாளர்களுக்காக மகளிர் சிறப்புப் பேருந்துகளை அரசு இயக்க வேண்டும். இதன் மூலம் பாலியல் துன்புறுத்தல்கள் பெருமளவு குறையும்” என்கிறார் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் ஆர். மைதிலி.

குடியால் அழியும் குடும்பங்கள்

தமிழகத்தில் டாஸ்மாக் வருவாயை வாரி வழங்கும் நகரங்களில்  திருப்பூருக்கு தனிப்பெரும் இடம் உண்டு. அரசின் வருவாய்க்குப் பின் ஒளிந்திருக்கும் குடும்பங்களின் பெரும் துயரம் பலரும் அறியாதது. பின்னலாடைத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆண்களில் பெரும்பாலானோர் தினமும் குடிக்கிறார்கள்.  பகல் முழுவதும் அயராத உழைப்பு, மாலை நேரத்தில் டாஸ்மாக் கடையில் செலவு எனப் பலர் திசைமாறியதால் குடும்பங்களை வறுமை சூழ்ந்துகொள்கிறது.

அந்த வீடுகளில் நிம்மதி என்பது பெயரளவுக்குக்கூட இருப்பதில்லை. பல குடும்பங்கள் குடியின் பாதிப்பால் தத்தளிக்கின்றன. ஆண்கள் பலர் குடிநோய்க்கு அடிமையாகிவிட்டதால், பெண்கள்தாம் வேலைக்குச் சென்று குடும்பங்களைக் காப்பாற்றுகின்றனர். “கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரின் குடிப் பழக்கத்தை நிறுத்த வலியுறுத்திய இளம்பெண், கணவர் பழக்கத்தைத் தொடர்ந்ததால் தற்கொலை செய்துகொண்டார். அந்தத் தம்பதியருக்கு மூன்று பெண் குழந்தைகள். அதேபோல் குடிநோய்க்கு ஆளான தந்தையால் மகளே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட கொடூர நிகழ்வும் சில மாதங்களுக்கு முன் திருப்பூரில்  அரங்கேறியது.

தாய் இரவு நேரத்தில் பின்னலாடை நிறுவன வேலைக்குச் சென்றுவிட்டதால் குழந்தைகளுக்குத் தாயாக இருக்க வேண்டிய தந்தை, குடியால் மகளுக்கு இழைத்த கொடுமையும் அதனால் அந்தக் குழந்தை அடைந்த வேதனையும் விவரிக்க இயலாதவை. குடிக்குப் பின்னால் அரங்கேறும் குற்றங்கள் திருப்பூரில் நாளுக்கு நாள் அதிகரித்துவருவது அனைத்துத் தரப்பினரையும் கவலையடையச் செய்துள்ளது.

குடும்பத் தலைவர் குடிக்கு அடிமையாகும்போது, அந்தக் குடும்பத்தில் உள்ள பெண்களும் குழந்தைகளும் மனதளவில் பாதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்ட இங்கே உதாரணங்கள் ஏராளம்” என்கின்றனர் குடியால் பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவிகள் சிலர்.

தற்கொலைத் தடுப்பு மையம்

திருப்பூர் மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் சாவித்திரி கூறியபோது, “பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாமல் அதற்கான விழிப்புணர்வு இன்றி, பிரச்சினைக்குத் தீர்வாகப் பலரும் தற்கொலைக்கு முயல்கின்றனர்.  தற்கொலை செய்துகொள்கிறவர்களின்  எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில், ஆட்சியர் அலுவலகத்தில்கூடத் தற்கொலைத் தடுப்பு மையம் இல்லாதது பெரும் கொடுமை.

தற்கொலைத் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு போதுமான அளவு இல்லாததால் தற்கொலைகள் அதிகரிக்கின்றன. மாநகர, மாவட்ட போலீஸார் சார்பிலும் இதற்கான முயற்சிகள் எடுக்கப்படாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.

பெண்கள் வேலை செய்யும் இடங்களில் பாலியல் சீண்டல்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் போன்றவை குறித்துப் புகார் அளிக்க உள்ளகப் புகார் குழு அமைக்க வேண்டும் என்பது அரசின் சட்டம். ஆனால், அதைப் பலரும் பின்பற்றாததால், நிறுவனங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் வெளியே தெரிவதில்லை. வீட்டு வேலை, நிறுவனத்தில் பணிச் சுமை, குழந்தைகளுடன் அமர்ந்து பேச நேரமின்மை எனப் பல்வேறு வகையான மனச்சிக்கல்களுக்குப் பெண்கள் ஆளாகிவருகின்றனர். இவற்றைக் களைவதில் அரசு ஓரளவாவது அக்கறை காட்ட வேண்டும்” என்கிறார்.

ஆண்களும் பெண்களும் ஒரே வகையான வேலையை செய்தாலும் இருவரும் உடலளவிலும் மனதளவிலும் வெவ்வேறுவிதமான பாதிப்புக்கும் நெருக்கடிகளுக்கும் ஆளாகிறார்கள். பெரும்பாலான பெண்கள் தங்கள் மீது நிகழ்த்தப்படும் சீண்டல்களைச் சகித்துக்கொண்டே பணியைத் தொடர வேண்டிய சூழல் நிலவுகிறது. இதில் குழந்தை வளர்ப்பும் குடும்பப் பொறுப்புகளும் அவர்களுக்குக் கூடுதல் சுமையாகின்றன. பெண்களின் சுமையைக் குறைப்பதில் குடும்ப உறுப்பினர்களும் வேலை வழங்கும் நிறுவனங்களும் அரசும் தங்கள் பங்கைச் சரிவர செய்தாலே பெண்களின் உழைப்பு பன்மடங்கு உயரும் என்பதே பெண் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x