Published : 08 Jan 2019 10:46 AM
Last Updated : 08 Jan 2019 10:46 AM

ஐ.ஏ.எஸ். கனவை நனவாக்கும் தொலைக்காட்சி

ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ். உள்ளிட்ட உயர் பணிகளுக்காக நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வில் சமீபக் காலமாகத் தமிழக மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் வெற்றிபெற்று வருகிறார்கள். அதுவும் கிராமத்து மாணவர்களும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் அதிகம். சிவில் சர்வீஸ் தேர்வு குறித்துப் பட்டிதொட்டியெல்லாம் விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பது இதற்கு முக்கியக் காரணம்.

தமிழக அரசு சிவில் சர்வீஸ் தேர்வுக்கு இலவசமாகப் பயிற்சி அளித்து வரும் அதேவேளையில், சென்னையில் சைதை துரைசாமியின் மனிதநேயம் அறக்கட்டளை நடத்தும் மனிதநேயம் கட்டணமில்லா ஐ.ஏ.எஸ். அகாடமியும் திறமை வாய்ந்த ஏழை மாணவர்களுக்கு, கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களுக்கு உணவு, தங்கும் வசதியுடன் இலவசப் பயிற்சி அளித்து அவர்களின் கனவை நனவாக்கி வருகிறது.

இங்கு சிவில் சர்வீஸ் தேர்வு மட்டுமின்றி யூ.பி.எஸ்.சி.-யின் இதர தேர்வுகள், எஸ்.எஸ்.சி., ரயில்வே வாரிய தேர்வுகள், டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1, குரூப்-2 என அனைத்து வகையான தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகின்றன. 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மையம் இதுவரை 3,200-க்கும் மேற்பட்ட சிவில் சர்வீஸ் அதிகாரிகளை உருவாக்கியுள்ளது.

எங்கிருந்தும் பார்த்துப் பயிற்சி பெறலாம்!

சிவில் சர்வீஸ் தேர்வு குறித்த விழிப்புணர்வு பள்ளியில் படிக்கும்போதே மாணவர்களுக்கு ஏற்பட்டால், கல்லூரிப் படிப்பை முடிக்கும் தறுவாயில் முழு தயாரிப்புடன் தேர்வைச் சந்தித்து இளம்வயதிலேயே வெற்றிபெற்று பல்வேறு துறைகளில் தலைமைப் பொறுப்புகளுக்குச் செல்ல முடியும் என்கிறார் மனிதநேய மையத்தின் தலைவரான முன்னாள் மேயர் சைதை துரைசாமி சிவில் சர்வீசஸ் தேர்வு உள்பட போட்டித்தேர்வுகள் குறித்தும் பயிற்சித் தளங்களை விரிவுபடுத்த இந்தப் புத்தாண்டில் மேற்கொள்ள உள்ள- புதுமையான திட்டங்கள் குறித்தும் பகிர்ந்துகொள்கிறார்:

“பொதுவாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்குப் பயிற்சி பெற வேண்டுமானால், தங்குமிடம், சாப்பாட்டுச் செலவு, பயிற்சிக் கட்டணம் என ஆண்டுக்கு எப்படியும் இரண்டரை லட்சம் ரூபாய்வரை ஆகிவிடும். மனிதநேய மையத்தில் இவை அனைத்தையும் இலவசமாக அளித்துவருகிறோம்.

IAS-2jpgright

அதேவேளையில் ஐ.ஏ.எஸ். ஆக விரும்பும் பலரும் பயிற்சி மையங்களுக்குச் சென்று படிக்க முடியாத நிலையில் உள்ளனர். வெளியூரில் தங்கியிருந்து படிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக ஐ.ஏ.எஸ். கனவை உதற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட பெண்கள் அநேகம்.

வீட்டில் இருந்தவாறு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் சூழலை உருவாக்க வேண்டும், பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்கள் பட்டப் படிப்பு முடிக்கும் தறுவாயில் யூ.பி.எஸ்.சி.க்குத் தயாராகி இளம் வயதிலேயே வெற்றிபெறும் வகையில் உதவ வேண்டும் என்ற சிந்தனை நெடுங்காலமாக இருந்துவந்தது. அதனால், போட்டித் தேர்வுகளுக்கு வழிகாட்டும் பிரத்யேகத் தொலைக்காட்சி அலைவரிசையை ஆரம்பிக்க முடிவுசெய்துள்ளோம்.

பிப்ரவரி மாதம் தொடங்கப்பட உள்ள இத்தொலைக்காட்சி அலைவரிசையில் காலையில் யூ.பி.எஸ்.சி. தேர்வுகள் தொடர்பான நிகழ்ச்சிகளும் இரவில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் தொடர்பான நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகும். மேலும், போட்டித் தேர்வுகளுக்கு அடிப்படை விஷயமான செய்தித்தாள் வாசிப்பு உள்ளிட்ட தேர்வுத் தயாரிப்பு தொடர்பான அனைத்து விஷயங்களும் இடம்பெறும்.

உடனுக்குடன் யூடியூபிலும்

6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பணியில் இருந்துகொண்டு சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராக விரும்புவோர், வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்துகொண்டே படித்து முன்னேற விரும்பும் பெண்கள் எனப் பல்வேறு தரப்பினருக்கும் இந்த தொலைக்காட்சி ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். அந்த நிகழ்ச்சிகள் யூடியூப்பிலும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.

இவ்வாறாகப் போட்டித் தேர்வு குறித்து அடிப்படைப் பயிற்சி பெற்ற மாணவர்களுக்குத் தேர்வு நடத்தி ஒவ்வொரு மாவட்டத்திலும் நல்ல மதிப்பெண் பெறுவோரைத் தேர்வுசெய்து அவர்களுக்குச் சிறப்பு பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்தத் தொலைக்காட்சி வாயிலாக பைசா செலவு இல்லாமல் உங்களுடைய ஐ.ஏ.எஸ். கனவை நனவாக்க விருக்கிறோம்” என்று கூறுகிறார் சைதை துரைசாமி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x