Published : 28 Jan 2019 12:19 PM
Last Updated : 28 Jan 2019 12:19 PM

புத்தாண்டின் புதுவரவுகள்

கார் பிரியர்களுக்கும் புதிதாக கார் வாங்க விரும்பியவர் களுக்கும் 2018-ம் ஆண்டில் புதிய கார் அறிமுகங்கள் சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லாதது ஏமாற்றமாக இருந்தது. ஆனால், புத்தாண்டு தொடங்கியதும் முதல் மாதமே வரிசையாக கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டு திக்குமுக்காட செய்துவிட்டன.

 

கலக்கும் கிக்ஸ்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிசான் கிக்ஸ் ஜனவரி 22-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. நிசான் கிக்ஸ், ரெனோவின் மேம்படுத்தப்பட்ட எம்ஓ பிளாட்பார்மில் தயாரிக்கப்பட்டாலும், சர்வதேச மாடலைவிடப் பெரிதாக இருக்கிறது. கேப்டரில் உள்ள 4 சிலிண்டர் இன்ஜின் தான் இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெட்ரோல், டீசல் என இருவகை மாடல்கள் உள்ளன. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் 110 பிஹெச்பி பவரை வெளிப்படுத்துகிறது.

5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 106 பிஹெச்பி பவரை வெளிப்படுத்துகிறது. இதில் தரப்பட்டுள்ள 360 டிகிரி கேமரா மூலம் பாதுகாப்பான, கச்சிதமான பார்க்கிங் சாத்தியம் என நம்பலாம். மேலும் இதில் ஃப்ளோட்டிங் 8 அங்குல தொடுதிரை, ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் கனெக்டிவிட்டி, ஆட்டோமேட்டிக் எல்இடி ஹெட்லைட், கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, குரூஸ் கன்ட்ரோல் ஆகிய வசதிகள் உள்ளன. இதன் ஆரம்ப விலை ரூ. 9.55 லட்சம்.

 

கிளாஸான கேம்ரி

டொயோட்டா நிறுவனம் கேம்ரி மாடலில் புதிய ஹைபிரிட் செடான் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. வி-வடிவ கிரில், பெரிய ஏர் இன்டேக், அழகான எல்இடி ஹெட்லைட், ஸ்டைலான பக்கவாட்டு பாடி லைன்கள், உயர்த்தப்பட்ட டெயில்கேட் என இதன் அட்டகாசமான வெளிப்புறத் தோற்றம் காருக்கு பிரீமியம் லுக் தருகிறது. இதன் 2.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், எலெக்ட்ரிக் மோட்டாருடன் சேர்ந்து 218 ஹெச்பி பவரை வெளியிடுகிறது. இன்ஜின் சிவிடி (continuously variable transmission) ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்களைப் பொருத்தவரை, இந்தக் காரில் 9 ஏர் பேக்குகள் உள்ளன. மேலும், ஏபிஎஸ் இபிடி பிரேக்கிங் சிஸ்டம், டிராக்‌ஷன் மற்றும் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், குழந்தைகள் பாதுகாப்பு இருக்கை ஆகியவை இதில் உள்ளன. மேலும் 3 விதமான கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், எலெக்ட்ரிக் மற்றும் வென்டிலேட்டட் முன்பக்க இருக்கைகள், 9 ஸ்பீக்கர்களைக் கொண்ட ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம், ரிவர்ஸ் கேமரா, என இந்தப் புதிய கேம்ரி ஹைபிரிட் கார் ஸ்மார்ட் கிளாஸ் என்றே சொல்லலாம். இதன் விலை ரூ. 36.95 லட்சமாகும்.

 

வியப்பூட்டும் வி-கிளாஸ்

இந்தியாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும், மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்திலிருந்து புத்தாண்டு வரவாக புதிய வி-கிளாஸ் மாடல் கார் ஜனவரி 24-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்பெயினில் உருவாக்கப்படும் இந்த கார் 2014-ம் ஆண்டிலிருந்தே பல நாடுகளில் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இந்தியாவில் 5 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் அறிமுகப்படுத்தப்படுகிறது. இது 5,170 மி.மீ. மற்றும் 5,370 மி.மீ. ஆகிய நீளங்களில், 6 இருக்கை, 7 இருக்கை என இரண்டு ஆப்ஷன்களில்  கிடைக்கிறது.

இதில்  2.2 லிட்டர் 4 சிலிண்டர் 2143 சிசி டீசல் இன்ஜின் உள்ளது. இது பிஎஸ் 6 விதிப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 194 ஹெச்பி திறன் மற்றும் 400 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்துகிறது. 10.9 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டுகிறது. இதில் பாதுகாப்பு அம்சங்களும் சிறப்பு. 6 ஏர்பேக்குகள், அட்டென்ஷன் அசிஸ்ட், 360 டிகிரி கேமராவுடன் பார்க்கிங் அசிஸ்ட் ஆகியவை உள்ளன. ஆம்பியன்ட் லைட்டிங், எலெக்ட்ரிக் ஸ்லைடிங் டோர் ஆகியவை இதன் அட்டகாச அம்சங்கள். வி-கிளாஸ் எக்ஸ்பிரஷன் மாடல் ரூ. 68.40 லட்சத்திலிருந்தும் வி-கிளாஸ் எக்ஸ்க்ளூசிவ் ரூ. 81.90 லட்சத்திலிருந்தும் தொடங்குகிறது.

 

புதிய வேகன் ஆர்

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான மாருதி புதிய வேகன் ஆர் மாடலை ஜனவரி 23-ம் தேதி அறிமுகம் செய்தது. மாருதியின் லேட்டஸ்ட் கார்கள் தயாரிக்கப்படும் ஹார்டெக்ட் பிளாட்பார்மில்தான் புதிய வேகன் ஆர் காரும் தயாரிக்கப்பட்டுள்ளது. முந்தைய வேகன் ஆர் மாடல்களில் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இருந்தது. புதிய வேகன் ஆர் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினையும் சேர்த்துள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது ஆட்டோ கியர் ஷிப்ட் வசதி. மேலும் முந்தைய மாடல்களை விட அதிக வீல் பேஸ், அதிக அகலம் கொண்டதாக புதிய வேகன் ஆர் உள்ளது. டிசைனிலும் புதிய வேகன் ஆர், முந்தைய மாடல்களை விட வித்தியாசமாகவும், அழகாகவும் தோற்றமளிக்கிறது. மொத்தம் ஏழு வேரியன்ட்களில் புதிய வேகன் ஆர் கிடைக்கிறது. பேஸ் வேரியன்ட்களைக் காட்டிலும் டாப் வேரியன்ட்களில் கூடுதலான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் விலை ரூ. 4.19 லட்சத்திலிருந்து ரூ. 5.69 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

அசத்தும் ஹாரியர்

டாடா நிறுவனம் எஸ்யுவி கார்களை அதிகம் உருவாக்கிவந்துள்ளது. தற்போது 5 பேர் பயணிக்கக்கூடிய பிரீமியம் மிட்சைஸ் எஸ்யுவி கார் ஹாரியரை ஜனவரி 23-ம் தேதி அறிமுகப்படுத்தியது. இது லேண்ட் ரோவர் கார்கள் தயாரிக்கப்படும் ஒமேகா  பிளாட்பார்மில் தயாரிக்கப்படுவதால் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்டி, எக்ஸ் இசட் ஆகிய வேரியன்ட்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் வெளிப்புறத் தோற்றம், உட்புற வடிவமைப்பு பொருத்தவரையில் எதிர்பார்த்ததுபோலவே அட்டகாச எஸ்யுவி காராக ஹாரியர் தன்னை நிரூபித்துள்ளது.

கிட்டத்தட்ட லேண்ட் ரோவர் காருக்கு நிகரான லுக் மற்றும் ஸ்டைல் இதில் உள்ளது என்றே சொல்லலாம். இதிலுள்ள பியட் நிறுவன கிரையோடெக் 2 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 138 பிஹெச்பி பவரும், 350என்எம் டார்க் திறனும் வெளிப்படுத்துகிறது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் பேஸ் வேரியன்ட் விலை ரூ. 12.69 லட்சத்திலிருந்து தொடங்குகிறது. டாப் வேரியன்ட் ரூ. 16.25 லட்சத்திலிருந்து தொடங்குகிறது. தோற்றத்தில் அனைத்து வேரியன்ட்களும் ஒன்றாக இருந்தாலும், டாப் வேரியன்டில் இருக்கும் சில அம்சங்கள் பேஸ் வேரியன்ட்களில் இல்லை.

குறிப்பாக ட்ராக்‌ஷன் கன்ட்ரோல், ஹில் ஹோல்டு, ஹில்  அசிஸ்டென்ட் கன்ட்ரோல் ஆகியவை டாப் வேரியன்டில் மட்டுமே தரப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் ஏர் பேக்குகள், பாதுகாப்பு அம்சங்களும் டாப் வேரியன்ட் மாடலில் மட்டுமே உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x