Published : 07 Jan 2019 11:39 AM
Last Updated : 07 Jan 2019 11:39 AM

விதி மீறும் வாகன ஓட்டிகள் கவனத்துக்கு...

இந்தியாவில் சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு போதிய அளவு வாகன ஓட்டிகள் மத்தியில் இல்லை என்பது அடிக்கடி நிரூபணமாகி வருகிறது. சமீபத்தில் ஃபோர்டு நிறுவனம் நடத்திய ஆய்வுகளிலும் இது தெளிவாக தெரியவந்துள்ளது. அதிகரித்து வரும் வாகன விபத்துகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் ஒவ்வோராண்டும் உயர்ந்து வருவது இதைத்தான் உணர்த்துகிறது.

ஃபோர்டு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கார் ஓட்டுபவர்கள் இன்னும் எச்சரிக்கையாகவும், சாலை விதிகளை பின்பற்றுபவர்களாகவும் மாறவேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளது.

டெல்லி, மும்பை, கொல்கட்டா, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், லக்னோ, லூதியானா, புணே, இந்தூர் உள்ளிட்ட 10 நகரங்களில் மொத்தம் பல்வேறு வயதுப் பிரிவினர் மற்றும் பல தரப்பட்ட மக்கள் உள்பட 1,600-க்கும் அதிகமானோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவெனில் கார் வைத்திருப்போரில் 51 சதவீதம் பேருக்கு காரின் சீட் பெல்ட் அணிவதற்கும் உயிர் பாதுகாக்கும் ஏர் பேக்கிற்கும் தொடர்பு உள்ளது என்ற விவரமே தெரியவில்லை. போக்குவரத்து போலீஸ்காரர்களிடம் தப்பிப்பதற்காகத்தான் அவர்கள் அணிந்து செல்வதாக தெரிவித்துள்ளனர்.

இதில் இன்னும் வியப்பான விஷயம் என்னவெனில் குழந்தைகளை காரில் அழைத்து செல்லும் கார் உரிமையாளர்களில் 42 சதவீதம் பேருக்கு குழந்தையும் பாதுகாப்பாக பயணிக்க உதவும் சைல்ட் லாக் வசதி பற்றியே அறிந்திருக்கவில்லை. கார் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தினால் கவனம் சிதறும் என்று தெரிந்திருந்தாலும் அதை பயன்படுத்துவதாக 22 சதவீதம் பேர் தெரிவித்தனர்.

மனிதாபிமானத்துக்கும் தங்களுக்கும் ரொம்ப தூரம் என்பதைப் போல 41 சதவீதம் பேர் தங்கள் காரில் அடிபட்டவர்களை மருத்துவமனையில் சேர்க்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். அடிபட்டவர்களை அப்படியே விட்டு விட்டு தப்பிச் செல்லத்தான் இவர்கள் பார்ப்பார்களாம்.

கார் பார்க்கிங் விஷயத்திலும் விதிகளை பின்பற்றுவதே கிடையாது. 32 சதவீதம் பேர் தங்கள் இஷ்டம் போல எங்கு வேண்டுமானாலும் காரை நிறுத்திவிட்டு சென்றுவிடுவதாக தெரிவித்துள்ளனர். அதைவிட மோசம் 42 சதவீதம் பேர் பாதசாரிகளுக்கென போடப்பட்ட பாதைகளில் தங்கள் வாகனங்களை நிறுத்துவதாக தெரிவித்துள்ளனர். 

படித்த படிப்புக்கும் கார் ஓட்டுவதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இரவில் வாகனம் ஓட்டும்போது கண் கூசுவதை எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு உணர்த்த முகப்பு விளக்கை அணைத்து போடும் வழக்கமே இல்லை என்று 22 சதவீதம் பேர் தெரிவித்திருப்பதிலிருந்தே, இரவில் வாகனம் ஓட்டுவது எந்த அளவுக்கு அபாயகரமானது என்பது புலனாகிறது.

போலீஸ்காரர் இல்லாவிட்டால் சிக்னலை மீறுவதில் தப்பில்லை என்ற கண்ணோட்டம் 22 சதவீதம் பேரிடம் இருப்பது அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. இதில் ஒரே ஆறுதல் அளிக்கும் விஷயம் 18 வயது முதல் 34 வயதுப் பிரிவினரில் பலரும் எச்சரிக்கை உணர்வோடு வாகனம் ஓட்டுவது தெரியவந்துள்ளது. பார்வையற்றோருக்காக காரை நிறுத்துவதில்லை என 8 சதவீதம் பேர் தெரிவித்திருப்பதிலிருந்தே மனிதாபிமானம் எந்தளவுக்கு மலிந்து வருகிறது என்பதை உணரலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x