Published : 17 Jan 2019 06:37 PM
Last Updated : 17 Jan 2019 06:37 PM

கோடம்பாக்கம் சந்திப்பு: மோதும் நமீதா

விஜய், அஜித் உட்பட முன்னணிக் கதாநாயர்களின் நடித்து, ரசிகர்களை ‘மச்சான்ஸ்’ என்று அழைத்துக் கவர்ந்தவர் நமீதா. கடைசியாக ‘பிக் பாஸ்’ சீசன் ஒன்றில் பங்கேற்று வெளியே வந்த கையோடு வீரேந்திரா என்பவரைத்  திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகி இருந்தார். அவரை மீண்டும் நடிக்க அழைத்து வந்திருக்கிறார் ‘சத்ரபதி' படத்தை இயக்கிய ஸ்ரீமகேஷ். இவர் இயக்கிவரும் ‘அகம்பாவம்' என்ற படத்தில் பெண் பத்திரிகையாளராக நடித்துவருகிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, படத்தைத் தயாரித்து வில்லனாகவும் நடிக்கிறார் வாராகி. “சாதியை வைத்துப் பிழைக்கும் அரசியல்வாதிக்கும் ஒரு பெண் பத்திரிகையாளருக்கும் இடையிலான யுத்தம்தான் ‘அகம்பாவம்’ படத்தின் கதை” என்கிறார் இயக்குநர்.

 

மாதவன் அடுத்து!

‘விக்ரம் வேதா’ வெற்றிக்குப் பிறகு இந்தி மற்றும் தெலுங்கில் தனக்குப்பிடித்த கதாபாத்திரங்களில் மட்டுமே வருகிறார் மாதவன். ஷாரூக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி தோல்வி அடைந்த ‘ஸீரோ’ படத்தில் விஞ்ஞானி வேடம் ஏற்றிருந்த இவர், இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதாக இருந்து படமும் நகராமல் அப்படியே இருக்கிறது. இதற்கிடையில் அடுத்து தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்தில் நாயகனாக நடிக்கிறார் மாதவன். ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் பீப்பள் மீடியா பேக்ட்ரி, கோனா ஃபிலிம் கார்ப்பரேஷன் இணைந்து தயாரிக்கும் படம் இது. இன்னும் தலைப்பு சூட்டப்படாத இந்தப் படத்தில் அனுஷ்கா, அஞ்சலி, ஷாலிணி பாண்டே என மூன்று கதாநாயகிகள்.

 

பிரேம்ஜியின் துணிச்சல்!

நகைச்சுவை குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் இசையமைப்பிலும் கவனம் ஈர்த்து வருகிறார் பிரேம்ஜி அமரன். தற்போது தனது அண்ணன் வெங்கட் பிரபு இயக்கி முடித்திருக்கும் ‘பார்ட்டி’ படத்துக்கும் இவர்தான் இசை. இதற்கிடையில் பரத் போதைக்கு அடிமையான இளைஞராக நடித்திருக்கும் ‘சிம்மா’ படத்தில் ஒரு ஆண் நாயின் வேடத்தை துணிந்து ஏற்று, சிறப்பாக நடித்திருக்கிறாராம். போதை மருத்துகளுக்கு அடிமையான ஒரு இளைஞனின் சிக்கலான மன உலகத்தில் தோன்றும் கதாபாத்திரம் இது. அரவிந்த் ஸ்ரீதர் இயக்கத்தில், கே.சிவனேஷ்வரன், வாசு ஆறுமுகம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ஃபேண்டஸி வகைப் படம்.

 

மன்சூரின் மகிழ்ச்சி!

தணிக்கை குழு அறிவுறுத்தும் வெட்டுகளை ஏற்றுக்கொண்டு ‘ஏ’ சான்றிதழ் பெறுவதிலிருந்து தப்பிக்க நினைப்பார்கள் தயாரிப்பாளர்கள். ஆனால் நடிகர் மன்சூர் அலிகான், தனது ‘கடமான் பாறை’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைத்ததைக் கொண்டாடி இருக்கிறார். “ நான் என்ன எதிர்பார்த்தேனோ அதுவே கிடைத்துவிட்டது” என்று கூறும் மன்சூர், இந்தப் படத்தில் தனது மகன் அலிகான் துக்ளக்கை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள கடமான் பாறை பகுதிக்கு சுற்றுலா வரும் காதல் ஜோடி, அந்தப்பகுதியில் வசிக்கும் காட்டின் மைந்தர் ஒருவரிடம் மாட்டிக்கொண்டு தப்பிப்பதுதான் இந்தப் படத்தின் கதையாம்.

 

ரகசியப் படப்பிடிப்பு!

காதும் காதும் வைத்தமாதிரி படங்களை இயக்கி முடித்துவிடுவதில் கெட்டிக்கார இயக்குநர் ஏ.எல்.விஜய். இதுவரை இவர் இயக்கிய பன்னிரெண்டு படங்களில் ஏழு படங்களுக்கு இசை அமைத்திருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவரையே கதாநாயகனாகக் கொண்டு ‘வாட்ச்மேன்’ என்ற படத்தை ரகசியமாக எடுத்து முடித்துவிட்டாரம் விஜய். இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடி  சாயிஷா. ‘2.0’ படத்தின் ஒளிப்பதிவு செய்திருந்த, இயக்குநர் விஜயின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான நீரவ்ஷாவும் சரவணன் ராமசாமியும் இணைந்து ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷே இசை அமைத்துவருகிறாராம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x