Published : 07 Jan 2019 11:39 AM
Last Updated : 07 Jan 2019 11:39 AM

தலைமுறை தாண்டிய வெற்றிக்கு என்ன வழி?

ஜாவா, யெஸ்டி பைக்குகளைப் பார்த்த ஞாபகம் இருக்கிறதா? இருந்தால் இந்நேரம் உங்களுக்கு தலைமுடி கொட்டியிருக்கும். அட்லீஸ்ட் நரைத்திருக்கும். பிள்ளைகளுக்கு கல்யாணம் ஆகியிருக்கும். இல்லை வரன் பார்த்துக்கொண்டிருப்பீர்கள். நாலு படி ஏறி இறங்குவதற்குள் மூச்சு வாங்கும்.

ஜாவாவும் யெஸ்டியும் அறுபது எழுபதுகளில் ரோட்டில் ரோமியோக்கள் ஓட்டிச் சென்ற மன்மத ரதங்கள். இப்பொழுது போல் இல்லாமல் அக்கால ரதிகள் ஏறி அமர்ந்து சவாரி செல்ல வெட்கப்பட்ட காலத்தில் கூட சக்கை போடு போட்ட வண்டிகள். அதை ஸ்டார்ட் செய்யும் சத்தம் சுகம். ஒடும் சத்தம் சங்கீதம்.

ரோடில் அந்த ரதங்கள் செல்லும் அழகை வேலை மறந்து, வாய் திறந்து, கண்கள் விரிய, கன்னத்தில் போட்டு தரிசித்தோம். காலியான அன்றைய ரோடுகளில் ஜாலியாக நாமும் ஒரு நாள் ஓட்டமாட்டோமா என்று ஏங்கினோம். காலம் ஓடியது. திரும்பிப் பார்ப்பதற்குள் ஒரு நாள் நம் இளமையோடு சேர்ந்து ஜாவாவும் யெஸ்டியும் தொலைந்து போயின!

இன்று அந்த வண்டிகளுக்கு மறுபிறவி அளித்திருக்கிறது ’மஹிந்திரா & மஹிந்திரா’. பழைய பைக்குகளுக்கு புனர்ஜென்மம் தந்து ‘கிளாசிக் லெஜண்ட்ஸ்’ என்ற கம்பெனி மூலம் பழைய ஜாவாவை புதுசாக்கி இறக்கியிருக்கிறது. நீங்களும் நானும் இந்த வயதில் அதை வாங்கப் போவதில்லை என்பது கம்பெனிக்கு தெரிந்திருக்கும். தெரிந்திருக்க வேண்டும்.

இக்கால இளைஞர்கள் ஜாவா, எஸ்டியை ஆரத் தழுவி ஆராதிப்பார்கள் என்று நினைக்கிறது. வெட்கப்படாமல் பின்னால் அமர ரதிகள் ரெடியாய் இருக்கும் இக்காலத்தில் ‘மன்மத ரதம் 2’-வாக பவனி வரும் என்று கணக்குப் போடுகிறது.

தன் அப்பா ஓட்டிய, ஓட்ட ஆசைப்பட்ட வண்டி என்று தெரிந்தால் இன்றைய இளைஞன் வாங்குவானா? நம்மையே பெரிசு என்று பெயர் வைத்து அழைத்து ஒதுக்கியிருக்கும் இன்றைய தலைமுறை ஜாவாவை பழையது என்பதற்காக வாங்குமா? சந்தேகமே.

புல்லட் இருக்கிறதே என்பீர்கள். இன்றும் ஜோராய் விற்கிறதே என்று கேட்பீர்கள். உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது. புல்லட் இருக்கிறது. அது எங்கும் போகவில்லை. அன்று முதல் இன்று வரை நம் கண்ணில் பட்டுக்கொண்டிருக்கிறது. புதுமைகள் புகுத்தப்பட்டு, இமேஜ் கெடாமல் காலத்திற்கேற்ப மெருகேற்றப்பட்டு வந்திருக்கிறது. அதனாலேயே நம் மனதில் இன்றும் புது பிராண்டாய் இருக்கிறது. மாடர்ன் கிளாசிக் என்ற அந்தஸ்துடன் சாஸ்வதமாய் வாழ்கிறது!

ஜாவா காணாமல் போன வண்டி. ஒரு தலைமுறை தாண்டி மீண்டும் வருகிறது. அது தான் வித்தியாசம். அங்கு தான் விசேஷம். அது இருந்த போது பிறக்காத ஜெனரேஷன் தான் இன்று அந்த பிராண்டை பார்க்கப் போகிறது. அவர்களுக்கு அது புது பிராண்ட். இன்னும் சொல்ல போனால் அது தான் ஜாவாவின் அட்வாண்டேஜ் கூட. இன்றைய தலைமுறைக்கு ஜாவா ஒரு புதிய அறிமுகம். ஒரு காலத்தில் அந்த பிராண்ட் இருந்தது என்று அவர்களுக்கு தெரிந்திருக்கலாம்.

அந்த பிராண்டில் ஒரு கிளாசிக் டச் இருக்கலாம். ரெட்ரோ ஃபீல் தெரியலாம். ஆனால், கிளாசிக் என்பதால் மட்டுமே இக்கூட்டம் ஜாவாவை வாங்காது. இதை ஏன் வாங்கவேண்டும் என்ற காரணத்தை, ஆதார பொசிஷனிங்கை சரியாய் வடிவமைத்தால் மட்டுமே ஜாவாவை வாங்கும்.

புல்லட் என்றால் ஆண்மை. அதை ஓட்டினால் ராஜகம்பீரமாக பார்க்கப்படுவோம் என்று அந்த நாள் முதல் கூறி வருவதால் தான் புல்லட் ரோடுகளில் மட்டும் இல்லாமல் ஷோரூம்களிலிருந்தும் பறக்கிறது. ஜாவாவுக்கும் தேவை அது போன்ற பொசிஷனிங். வெறும் கிளாசிக் என்று மட்டும் கூறி அதையே கட்டிக்கொண்டு அழுதால் ஜாவாவை வா வா என்று இத்தலைமுறை அழைக்காது. ஜரிகண்டி ஜரிகண்டி என்று வேண்டுமானால் ஒதுக்கும்!

புல்லட், ஜாவா பிராண்டுகளை வைத்துக்கொண்டு ஜெனரேஷன் மார்க்கெட்டிங் பற்றி சற்று பேசலாம். அரசியல் பற்றி கூட கொஞ்சம் அலசலாம். இந்த மேட்டருக்கு பின்னால் வருகிறேன்.

அந்த கால பிராண்டுகளைக் கூட இந்த காலத்திலும் புதியதாய், ஃப்ரெஷ்ஷாய், ரெலவண்டாய் வைத்திருந்தால் எந்த காலத்திலும் விற்க முடியும். ‘பெப்சி’ போல. ’இசைஞானி இளையராஜா’ போல. இவ்வகை பிராண்டுகளும் மேதைகளும் மாடர்ன் கிளாசிக்ஸ்.

பழையதாய் இருந்தாலும் தங்கள் ஆதார பொசிஷனிங்கை மாற்றிக்கொள்ளாமல் காலத்திற்கேற்ப தங்களை புதுப்பித்துக்கொண்டு புதிய தலைமுறைக்கேற்ப தங்களை அழகாக செதுக்கிக்கொண்டு கடந்து வந்த தலைமுறை முதல் பிறந்து வரும் புதிய ஜெனரேஷன் வரை புதியதாய் தோற்றமளித்து வெற்றியைத் தக்க வைக்கும் ஜகஜ்ஜால பிராண்டுகள், யுக புருஷர்கள்!

‘சிக்லட்ஸ்’ பிராண்ட் ஞாபகம் இருக்கிறதா? மஞ்சள் கலர் பாக்கெட்டில் இரு வெள்ளை மாத்திரை இருக்குமே. ’அட ஆமா’ என்று பள்ளி பருவ நினைவுகள் துள்ளிக்கொண்டு வருமே. அந்த பிராண்ட் காணாமல் போய் வெகு நாட்கள் ஆகிறது. சிக்லட்ஸ் தனிப் பிணம் அல்ல, சனிப் பிணம். கூடவே நிறைய பிராண்டுகளை கூட்டிக்கொண்டு சென்றது. சிக்னல் டூத்பேஸ்ட், பபுள் கம், லூனா, வீவா, மால்டோவா, ரீகல் சொட்டு நீலம், காஃபி பைட், ஓவல்டின் இன்னும் பல.

ஒரு காலத்தில் சக்கை போட்ட இவ்வகை பிராண்டுகள் ஏன் கரையான் அரித்து காணாமால் போயின? தங்கள் வெற்றி சாஸ்வதம் என்று இவை நம்பின. தங்களை புதிப்பித்துக்கொள்ள தவறின. கால மாற்றத்திற்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ள மறுத்தன. அவுட் ஆஃப் சைட் இஸ் அவுட் ஆஃப் மைண்ட் என்பார்கள். கண்களிலிருந்து காணாமல் போனால் மனதிலிருந்து மறையவேண்டியது தான்!

அரசியலுக்கு வருவோம். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கிறேன் என்று ஒரு வருடம் முன் கூறிவிட்டு அதற்கான முயற்சி எடுக்காமல் படத்திற்கு மேல் படம் கமிட் ஆகிவிட்டார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது.

அரசியல் சீரியஸ்னஸ் இல்லாமல் இருக்கிறார் என்கிறார்கள் விமர்சகர்கள். கட்சி வேலை பார்க்காமல் நடிப்பதால் மக்கள் மதிப்பை மொத்தமாய் இழக்கிறார் என்கிறார்கள் சில பத்திரிகையாளர்கள். அப்படியா? ரஜினி அரசியலுக்கு வருவதில் ஆர்வமில்லாமல் சும்மா உலலாங்காட்டி தன் படங்களை பிரமோட் செய்ய மட்டும் அறிக்கை விட்டு எஸ்கேப் ஆகுகிறாரா?

ரஜினி ஒரு மாஸ்டர் ஸ்ட்ராடஜிஸ்ட். மார்க்கெட்டிங் வித்தை தெரிந்தவர். பிராண்டிங் சூட்சமம் புரிந்தவர். சினிமா ரசிகனாய் இதைச் சொல்லவில்லை. தள்ளி நின்று அவர் பயணத்தை பார்த்து வரும் ஒரு மார்க்கெட்டிங் ஆலோசகனாய் இதைச் சொல்கிறேன். ரஜினிகாந்த் என்ற வார்த்தை இந்த நாட்டின் பிரதான பிராண்டுகளில் ஒன்று.

ஸ்டைல்தான் தன் பொசிஷனிங் என்பதை எழுபதுகளில் எண்ட்ரி கொடுத்த நாள் முதல் தனக்கென்று ஒரு பாதையிட்டு அதில் மட்டுமே பவனி வந்திருப்பவர். அவர் படம் என்றால் லாஜிக் இருக்கிறதோ இல்லையோ மாஜிக் மறக்காமல் இருக்கும் என்று அந்த தலைமுறையினர் முதல் இத்தலைமுறையினர் வரை அவர் படம் எப்பொழுது ரிலீஸ் ஆகும், திருவிழா எப்பொழுது துவங்கும் என்று ஏங்க வைத்திருப்பவர். அவர் தலைமுறை தாண்டிய புல்லட். காலத்தை வென்ற பெப்சி!

மார்க்கெட்டில் இருக்கும் பிராண்டுகள் போல தனக்கென்ற ஒரு பொசிஷனிங், தனித்தன்மையான ஆளுமை என்று மார்க்கெட்டிங் தத்துவங்களை இம்மி பிசகாமல் கடைபிடித்து வந்ததால் மட்டுமே அவரால் வேகமாக மாறும் படத் துறையில் தாக்கு பிடிக்க முடிந்தது. தனி ஆளாய் ஒரு இண்டஸ்ட்ரியையே தூக்கிப் பிடிக்க முடிந்தது!

இத்தனை காலம் மார்க்கெட்டிங் நெறிகளுக்கேற்ப தன்னை பிராண்டாய் செதுக்கி வந்தவர் அரசியல் என்ற முக்கியமான அடுத்த கட்டத்திற்குள் நுழையும் போதா தவறு செய்யப் போகிறார்? இல்லை சார். தன் படங்களுக்கிடையே போதிய இடைவெளி தந்திருப்பதை அவர் உணர்ந்திருக்கிறார்.

சில காலமாக பொது வாழ்வில் தன்னை காண்பித்துக்கொள்ளாமல் இருந்ததை புரிந்திருக்கிறார். புதிய தலைமுறைக்கு இன்னும் புதியதாய் தன்னை படைக்கவேண்டும் என்பதை அறிந்திருக்கிறார். அவுட் ஆஃப் சைட் இஸ் அவுட் ஆஃப் மைண்ட். கோடம்பாக்கம் முதல் ஹாலிவுட் வரை சூப்பர்ஹிட் வெற்றிகள் கண்ட கன்னட கண்டக்டருக்கா இந்த உண்மை தெரியாது!

அதனால் தான் திடீரென்று இத்தனை புதிய படங்களில் நடிக்கிறார். அதுவும் சயின்ஸ் ஃபிக்ஷன், காலேஜ் வார்டன் போன்ற கதை களங்கள். பழைய தலைமுறைகளை கலக்கியவர் இன்றைய இளைஞர்களை இழுக்க வேண்டாமா. முதல் முறையாய் ஓட்டு போடப்போகும் புதிய தலைமுறையை தன் பக்கம் வசீகரிக்க வேண்டாமா. படங்களில் வெற்றி கண்டவர் தேர்தலிலும் வெற்றி பெற இவை தேவைப்படுகிறதே.

அதனால் இத்தனை புதிய படங்கள். தன் பிராண்டை மேலும் மெருகேற்றிக்கொள்ளவே இந்த அரசியல் அவகாசம். மற்றதை காலம் பார்த்துக்கொள்ளும். அவர் பாணியில் கூறவேண்டுமென்றால் ‘கண்ணா, அத ஆண்டவன் பாத்துப்பான்’. அவரை சூப்பர்ஸ்டார் என்று சும்மாவா சொன்னார்கள்!

- satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x